கொத்தணி குண்டுகளை தடைசெய்யும் சட்ட வரைவை தயாரிக்க சிறிலங்கா அமைச்சரவை அனுமதி
சிறிலங்காவில் கொத்தணி குண்டுகளைத் தடை செய்வதற்கான சட்ட வரைவைத் தயாரிக்கும் முன்மொழிவுக்கு, சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
‘ஒஸ்லோ உடன்படிக்கை’ என்றும் அழைக்கப்படும் ‘கொத்தணி குண்டுகள் குறித்த அனைத்துலக உடன்படிக்கை’யில், சிறிலங்கா 2018 பிப்ரவரி 28 ஆம் நாள் கையெழுத்திட்டது.
இந்த உடன்படிக்கையின் கீழ், சிறிலங்கா கொண்டுள்ள கடப்பாடுகளைச் செயற்படுத்துவதற்குத் தேவையான சட்டத்தைத் தயாரிப்பதற்கு, 2019 மார்ச் 19 ஆம் நாள் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இதற்கமைய, சட்ட வரைவாளர் திணைக்களத்தால் தயாரிக்கப்பட்ட ‘கொத்தணி குண்டுகளைத் தடை செய்வதற்கான சட்ட வரைவு’, பல்வேறு சந்தர்ப்பங்களில் முன்மொழியப்பட்ட திருத்தங்களை உள்ளடக்கும் வகையில் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் சிறிலங்கா அதிபர் சமர்ப்பித்த முன்மொழிவின் அடிப்படையில், புதிதாக அடையாளம் காணப்பட்ட திருத்தங்களையும் உள்ளடக்கி, திருத்தப்பட்ட சட்ட வரைவைத் தயாரிப்பதற்கு சிறிலங்கா அமைச்சரவை இப்போது கொள்கை ரீதியான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
