சபுகஸ்கந்தவில் முதலீடு செய்ய அமெரிக்கா, சீனா, ஜப்பான் போட்டி
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலையில் முதலீடு செய்வதற்கு அமெரிக்கா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் ஆர்வம்காட்டியுள்ளனர்.
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை விரிவுபடுத்தும் திட்டத்திற்கான கேள்விப் பத்திரங்களை சிறிலங்கா பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அண்மையில் கோரியிருந்தது.
இந்த கேள்விப் பத்திரங்களைச் சமர்ப்பிக்கும் கால எல்லை கடந்த வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்துள்ளது.
இதற்கமைய அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட முன்னணி நாடுகளின் நிறுவனங்கள் உள்ளிட்ட 20 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன.
இன்னமும் விண்ணப்பங்களை மதிப்பீடு செய்யும் பணிகள் தொடங்கவில்லை என்று பெட்ரோலிய கூட்டுத்தாபனத் தலைவர் டி.ஏ.ராஜகருண தெரிவித்துள்ளார்.
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தற்போது நாளொன்றுக்கு 50 ஆயிரம் பீப்பாய் எரிபொருளை சுத்திகரிக்கும் நிலையில், அதனை ஒரு இலட்சம் பீப்பாய்களாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.