வீணை சின்னத்திலேயே போட்டி – ஈபிடிபி முடிவு
ஆளும் பொதுஜன பெரமுனவின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான ஈபிடிபி வடக்கு, கிழக்கில் சொந்தச் சின்னத்திவேயே போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் ஈபிடிபி தனது வீணைச் சின்னத்திலேயே வேட்பாளர்களை நிறுத்தும் என்று அந்தக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அறிவித்துள்ளார்.
2010ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலைச் சின்னத்தில் ஈபிடிபி போட்டியிட்டு வந்தது.
எனினும், 2013இல் நடந்த வடக்கு மாகாண சபைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து, 2015 நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு ஒரு ஆசனத்தை கைப்பற்றியது.
இந்தமுறை மொட்டு சின்னத்தில் பொதுஜன பெரமுன பலமான கூட்டணியை அமைத்துள்ள போதும், வடக்கு கிழக்கில், ஈபிடிபி போன்ற பங்காளி கட்சிகள் தனித்துப் போட்டியிட அனுமதித்துள்ளது.
இந்த நிலையிலேயே ஈபிடிபி வீணைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.