வடக்கில் மதவாத சுவரொட்டிகள் – தேர்தல் ஆணையத்திடம் முறைப்பாடு
வடக்கில் மதவாதத்தை தூண்டும் வகையிலான சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளமை குறித்து, சுதந்திரமான, நீதியான தேர்தல்களுக்கான அமைப்பான கபே, தேசிய தேர்தல்கள் ஆணையத்திடம், முறைப்பாடு செய்துள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர், அகமட் மனாஸ் மக்கீன்,
“ சைவ வாக்காளர்கள் சைவ வேட்பாளர்களுக்கே, வாக்களிக்க வேண்டும் என்று கோரும் வகையில் சுவரொட்டிகள் வடக்கில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணக் குடாநாட்டில், சாவகச்சேரி, கொடிகாமம், யாழ்ப்பாணம், நெல்லியடி, கைதடி உள்ளிட்ட பல பகுதிகளில் இந்த சுவரொட்டிகள் காணப்படுகின்றன.
சிவசேனை என்ற அமைப்பே இந்த சுவரொட்டிகளை ஒட்டியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
அதேவேளை, வவுனியா, மன்னார் உள்ளிட்ட வடக்கின் ஏனைய பகுதிகளிலும் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.