சர்ச்சைக்குரிய சட்டமூலங்கள் – பரந்துபட்ட ஆலோசனைகளின் பின்னரே நிறைவேற்றப்படும்
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தையும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலத்தையும், பொதுமக்களுடனும் சம்பந்தப்பட்ட தரப்பினருடனும் கலந்தாலோசிக்காமல் நிறைவேற்றப் போவதில்லை என சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற தேசிய தொழிற்சங்க மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்த சட்டமூலங்கள் குறித்து கவலைகளை எழுப்பியுள்ள சிவில் சமூக அமைப்புகள் உட்பட, சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருடனும் சிறிலங்கா அரசாங்கம் கலந்துரையாடல்களை நடத்தும் என்றும், ஒரு பரந்த உடன்பாட்டை எட்டிய பின்னரே இந்த சட்டமூலங்களை முன்னெடுத்துச் செல்லும் என்றும் அவர் கூறினார்.
சட்டங்கள் மற்றும் விதிமுறைகளைப் பயன்படுத்தி அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் நோக்கம் தனது அரசாங்கத்திற்கு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
தனது நிர்வாகம் மக்களின் ஜனநாயக விருப்பத்தை மதிக்கும் என்றும், தேர்தலின் மூலம் மக்கள் தங்களை அதிகாரத்திலிருந்து அகற்ற முடிவு செய்தால், பதவியிலிருந்து விலகத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
