ஆனந்தபுரச் சமர்- பாகம்: 4
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான சிறிலங்கா படைகளின் இறுதிக்கட்டப் போரின் போது, ஆனந்தபுரத்தில் இடம்பெற்ற சமரில் நிகழ்ந்தேறிய, அனைத்துலக மனிதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்து உண்மைக்கும் நீதிக்குமான அனைத்துலக திட்டம் வெளியிட்டுள்ள விரிவான ஆய்வறிக்கையின் ,இறுதிப் பகுதி.
பகுதி இரண்டு
பொருத்தமான சட்ட விதிமுறைகள்
இந்த அறிக்கையின் பகுதி 1 2009 ஏப்ரலில் இடம்பெற்ற ஆனந்தபுரச் சமரின் போதும், சமரை அடுத்து உடனடியாகவும் சிறிலங்கா விமானப்படை அணிகளின் உதவியுடன் சிறிலங்கா இராணுவத்தின் படைகள் ஈடுபட்டதாகச் சொல்லப்படும் நடவடிக்கைகள் பற்றிய குற்றச்சாட்டுக்களை ஆவணப்படுத்துகிறது.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் ஆதாரங்களின் மூலம் நிரூபிக்கப்பட்டால், அவை அனைத்துலக மனிதாபிமானச் சட்டம் ( IHL) , அனைத்துலக மனித உரிமைகள் சட்டம் (IHRL) மற்றும் அனைத்துலகக் குற்றவியல் சட்டம் ( ICL) ஆகியவற்றின் கடுமையான மீறல்களாக அமையலாம்.
கண்மூடித்தனமான முறையில் அல்லது சட்டத்திற்கு புறம்பான வழிகள் மற்றும் வழிமுறைகளைக் கொண்ட போர்முறைகளைப் பயன்படுத்தியதாகச் சொல்லப்படுதல், பொதுமக்கள் மற்றும் சட்டத்தால் பாதுகாக்கப்படும் ஏனைய நபர்கள் மற்றும் பொருட்கள் மீது பாதிப்பினை ஏற்படுத்தும் தாக்குதல்கள், மனிதாபிமான உதவிகளை மறுத்தல் மற்றும் காயமடைந்தவர்களை மற்றும் ‘போரில் ஈடுபடமுடியாத நிலையில் உள்ளவர்களைப்’ படுகொலை செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய இராணுவ நடவடிக்கைகள் நடத்தப்பட்ட முறைகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை இந்த அறிக்கை ஆவணப்படுத்துகின்றது.
இவற்றை ஒன்றாக வைத்துப் பார்க்கையில், போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் புரியப்பட்டுள்ளனவா என்பதை மதிப்பீடு செய்வதற்கான உண்மைச் சூழலின் அடிப்படையை இந்தக் குற்றச்சாட்டுக்கள் வழங்குகின்றன.
ஆயுதப்போரின் இறுதிக் கட்டம் பற்றி ஐக்கிய நாடுகளின் பொறிமுறைகள் மற்றும் ஏனைய சுயாதீன விசாரணைகளால் முன்பு அடையாளங் காணப்பட்ட கவலைக்குரிய விடயங்களுடன் இந்தக் குற்றச்சாட்டுக்கள் ஒத்துப்போவதாய் உள்ளன.
இந்த ஆய்வு தனிநபரின் குற்றவியல் பொறுப்பினை தீர்மானிப்பதனை நோக்கமாகக் கொண்டதல்ல. மாறாக, அனைத்துலக மனிதாபிமானச் சட்டம் மற்றும் அனைத்துலக குற்றவியல் சட்டத்தின் கடுமையான மீறல்கள் இடம்பெற்றிருக்கலாம் என்பதனை, நம்புவதற்கான போதிய ஆதாரங்களை அந்தக்காலப் பகுதிக்குரிய இராணுவத்தின் அறிக்கைகள், ஐக்கிய நாடுகளின் ஆவணங்கள் மற்றும் தொடர்புபட்ட ஏனைய தகவல் ஆதாரங்கள் என்பன வழங்குகின்றன.
இவற்றினை ஒன்று சேர்த்து, அறிக்கையின் பகுதி 01 உண்மை சார்ந்த ஆதாரங்களைக் கொண்டுள்ளதா என்பதை இது மதிப்பீடு செய்கின்றது.
அனைத்துலக மனிதாபிமானச் சட்டம் மற்றும் அனைத்துலக மரபுவழிச் சட்டத்தின் பொருந்தக்கூடிய விதிகள் மற்றும் ரோம் சாசனத்தின் முக்கிய சட்ட விதி முறைகளுக்கு எதிரான முறையில் போர் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுவதை இந்த ஆய்வு ஆராய்கின்றது.
அடையாளங்காணப்பட்ட இராணுவ அணிகள் அல்லது தளபதிகள் தொடர்பிலான குறிப்புக்கள் சாத்தியமான கட்டளைப் பொறுப்பு குறித்து மதிப்பிடும் நோக்கில் மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றன, அவை குற்றவியல் பொறுப்பு பற்றிய முடிவுகளாக அமையாது.
படை நடவடிக்கைகள் நடத்தப்பட்ட முறை, போர்முறையில் பயன்படுத்தப்பட்டதாகக் சொல்லப்படும் வழிகள் மற்றும் வழிமுறைகள், ‘போரில் ஈடுபட முடியாத நபர்களை’ நடத்திய முறை மற்றும் இந்த நடவடிக்கைகளுக்கு கட்டளை மற்றும் கட்டுப்பாட்டினை திறம்பட மேற்கொண்டவர்களுக்கு இருக்கக் கூடிய பொறுப்பு ஆகியவற்றை பரிசீலிப்பதன் மூலம் இந்த ஆய்வு முன்னெடுக்கப்படுகிறது.
போர் நடத்தப்பட்ட முறை, வேறுபாடு காணல், விகிதாசாரம் மற்றும் தாக்குதல் முன்னெச்சரிக்கைகள்
ஆனந்தபுரச் சமரின் போது போர் நடவடிக்கைகள் நடத்தப்பட்ட முறையானது வேறுபடுத்தல், விகிதாசாரம் மற்றும் தாக்குதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகியவற்றைக் கொண்ட , வழக்கமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைகளுடன் சேர்த்து, கண்மூடித்தனமான தாக்குதல்கள் மீதான தடைகள் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுகின்றது.
இந்தக் கொள்கைகள் அரசாங்கப் படைகள் எல்லா நேரங்களிலும் இராணுவ மற்றும் பொதுமக்கள் இலக்குகளை வேறுபடுத்துதல், எதிர்பார்க்கப்படும் இராணுவ முன்னேற்றத்திற்காக பொதுமக்களுக்கு தற்செயலாக அதிகப்படியான பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடிய தாக்குதல்களைத் தவிர்த்தல் மற்றும் இதுபோன்ற பாதிப்பினை இயன்றளவு குறைப்பதற்குத் தேவையான சாத்தியமான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுதல் போன்றவற்றை இந்தக் கோட்பாடுகள் வலியுறுத்துகின்றன.
இத்தகைய கடப்பாடுகள் இருப்பினும், பெரியளவான எண்ணிக்கையில் பொதுமக்கள், காயப்பட்டவர்கள் மற்றும் எஞ்சியுள்ள விடுதலைப் புலிகளின் படைகள் இருப்பது தெரிந்தும் ஆனந்தபுரம் பெட்டியினுள்ளும் அதனைச் சுற்றியுள்ள, நாளுக்கு நாள் சுருங்கிவரும் பகுதி மீதும், அரசாங்கப்படைகள் கனரக ஆட்டிலறிகள், பல்குழல் எறிகணை செலுத்திகள் மற்றும் தொடர்ச்சியான வான் தாக்குதல்களை பயன்படுத்தின என, இந்த அறிக்கையின் முதலாவது பகுதி குற்றஞ்சாட்டுகிறது.
அத்துடன் தொடர்ச்சியான வான் கண்காணிப்பு, கிபிர் போர் விமானம், வேவு விமானம் மற்றும் ஆளில்லா விமானங்கள் ஆகியவற்றினைப் பயன்படுத்தியதாகச் சொல்லப்படுவது உட்பட தரைத் தாக்குதல்கள், ஆட்டிலறி எறிகணை ஆதரவு, மற்றும் தொடர்ச்சியான வான் தாக்குதல்கள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து மேற்கொள்ளப்பட்ட ஒரு கூட்டு இராணுவ நடவடிக்கையினை இந்த அறிக்கை மேலும் விபரிக்கின்றது.
பொதுமக்கள், மருத்துவ நிலையங்கள் மற்றும் காயமடைந்தவர்கள் செறிந்துள்ள இடங்கள் உட்பட போர்க்களத்தின் நிலைமைகள் குறித்த கணிசமாக நேரடித்தகவல்களை இந்த நடவடிக்கையினை நடத்தியவர்கள் வைத்திருந்ததாக நியாயமான வகையில் ஊகிக்க முடிவதை இது காட்டுவதால் இந்தக் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால், இந்த நடவடிக்கைக்கான ஒருங்கிணைப்பு சட்ட ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும்.
2009 மார்ச் பிற்பகுதியளவில் அரசாங்கப் படைகள் இராணுவ நடவடிக்கை ரீதியாக, மேலாண்மையை அடைந்திருந்த அதேவேளையில், விடுதலைப் புலிகளின் எஞ்சியிருந்த படைகள், ஒரு மட்டுப்படுத்தப்பட்ட பகுதிக்குள் முடக்கப்பட்டதுடன், கடுமையான வெடிபொருள், உணவு மற்றும் மருத்துவப் பொருட்களுக்கான பற்றாக்குறைக்கு முகங்கொடுத்ததுடன், பெரும் எண்ணிக்கையிலான
காயப்பட்ட, இல்லாவிட்டால் போரிடும் திறனை இழந்த, போராளிகளைக் கொண்டிருந்தார்கள் என்பதையும், இந்த அறிக்கை மேலும் சுட்டிக்காட்டுகின்றது.
இவ்வாறான நடவடிக்கைப் பின்னணியில், ஒரு குறுகிய போர்க்களப் பகுதியில் கனரக ஆட்டிலறிகள், பல்குழல் எறிகணைகள் மற்றும் வான்வழித் தாக்குதல்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டமை வேறுபடுத்தல், விகிதாசாரம் மற்றும் தாக்குதலின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகியவற்றின் கோட்பாடுகளின் கீழ் மதிப்பீடு செய்வது அவசியமாகும்.
குறிப்பாக, தொடர்ச்சியான வான்வழிக் கண்காணிப்பு இருந்ததாக கூறப்படும் நிலையில், தாக்குதல்களை வழிநடத்தியவர்கள் இராணுவ இலக்குகளை உறுதிப்படுத்துவதற்கும், எதிர்பாராத முறையில் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பைக் குறைப்பதற்கும், சாத்தியமான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், மரபுவழி அனைத்துலக மனிதாபிமானச் சட்டத்தின் கீழ் அவசியமானது போல், அதனை மேற்கொண்டார்களா என்பது கூடுதலாகப் பொருத்தமானதாக இருக்கும்.
இந்தச் சமர் நடத்தப்பட்ட விதம், சரணடைந்தவர்களுக்கு அல்லது போரிட முடியாதவர்களுக்கு உயிர் பிழைக்கும் வாய்ப்பினை மறுப்பதற்கு எதிரான, மரபுவழித் தடை குறித்த கேள்விகளை எழச் செய்கின்றது.
அனைத்துலக மனிதாபிமானச் சட்டமானது ‘எவரும் உயிர் பிழைக்க கூடாது’ என்ற வெளிப்படையான உத்தரவுகளை மட்டுமல்லாமல், அந்த அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகளையும் தடைசெய்கின்றது.
எதிரித் தரப்பினர் சரணடைவதற்கான உண்மையான வாய்ப்பைக் கொண்டிருக்க வேண்டும் என்பதையும், போரிடும் நிலையில் இல்லாதவர்கள் தாக்கப்படக் கூடாது என்ற, அடிப்படைக் கோட்பாட்டையும், இந்த விதி பிரதிபலிக்கிறது. இறுதிக் கட்டச் சமரின் பல அம்சங்கள் இது தொடர்பில் பொருத்தமானதாக இருக்கும்.
விடுதலைப் புலிகளின் படைகள் படிப்படியாக சுற்றி வளைக்கப்பட்டிருந்ததாகவும், அவர்களின் நகர்வுத் திறன் கடுமையாகக் குறைக்கப்பட்டிருந்ததாகவும், அவர்கள் உணவு, வெடிபொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களுக்கு கடுமையான பற்றாக்குறையை எதிர்கொண்டதாகவும், மேலும் தப்பிச் செல்லும் வழிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்ததாகவும் அந்தக் காலப் பகுதிக்குரிய ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளையில், ஒருங்கிணைக்கப்பட்ட எதிர்ப்பு கணிசமானளவு குறைந்திருந்ததாக இராணுவ நிலைமை சுட்டிக்காட்டி இருப்பினும் சரணடைவதற்கான வாய்ப்புகள் பற்றிக் கலந்துரையாடப்பட்டதா அல்லது அவற்றுக்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதா என்பதற்கான ஆதாரங்கள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன.
பதிலாக சுற்றிவளைக்கப்பட்ட அந்தப் பகுதி முழுமையாகக் கைப்பற்றுப்படும் வரை தொடர்ச்சியான ஆட்டிலறி, வான் தாக்குதல்கள் மற்றும் தரைத் தாக்குதல்கள் தொடர்ந்ததாக கிடைக்கக்கூடிய ஆதாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
சட்டத்திற்கு புறம்பான முறையில் சரணடைந்தவர்களுக்கு அல்லது போரிட முடியாதவர்களுக்கு உயிர் தப்புவதற்கான சந்தர்ப்பம் வழங்காத ஒரு கொள்கை இருந்தது என்பதை மேலதிக ஆதாரங்கள் இல்லாமல் இந்த தகவல்களின் அடிப்படையில் நிரூபிக்க முடியாத நிலையில், ‘போரிடும் திறனை இழந்தவர்கள்’ அல்லது அவ்வாறான நிலையை அடைந்திருந்தவர்களுக்கு, சரணடைவதற்கான சந்தர்ப்பத்தினை வழங்கி, அவர்களைப் பாதுகாக்கும் மரபுசார் கடப்பாட்டிற்கு முரணான வகையில், இந்த இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்ற அனுமானத்திற்கு அவை வலுச் சேர்ப்பவையாக உள்ளன.
புதுக்குடியிருப்பு மற்றும் ஆனந்தபுரம் பகுதியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதியிலும் உள்ள தற்காலிக மருத்துவமனைகள் உட்பட தற்காலிக மருத்துவ நிலையங்கள் மற்றும் காயமடைந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் கூடியிருந்த ஏனைய இடங்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை இந்த அறிக்கையின் பாகம் 01 மேலும் ஆவணப்படுத்துகின்றது.
அனைத்துலக மனிதாபிமானச் சட்டத்தின் கீழ் மருத்துவ நிலையங்களும் மருத்துவமனைகளும் விசேட பாதுகாப்பைப் பெறுகின்றன.
அத்துடன், அவை தமது மனிதாபிமானப் பணிக்கு அப்பாற்பட்டு எதிரிக்குப் பாதிப்பு விளைவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பயன்படுத்தப்படும் பட்சத்தில் மட்டுமே தாக்குதலுக்கான இலக்கு ஆக்கப்படலாம்.
பகுதி 1 இந்த மருத்துவ நிலையங்கள் மனிதாபிமான செயற்பாட்டுக்கு அப்பாற்பட்டு பயன்படுத்தப்பட்டன என்பதற்கான எந்த ஆதாரத்தினையும் அடையாளங் காணவில்லை. எனவே அந்த மருத்துவ நிலைகளைப் பாதிக்கும் வகையிலான தொடர்ச்சியான தாக்குதல்கள், அனைத்துலக மனிதாபிமானச் சட்டத்தின் கடுமையான மீறல்களாகவும் அவசியமான அம்சங்கள் பூர்த்தி செய்யப்படும் சந்தர்ப்பத்தில், அது ரோம் சட்டத்தின் கீழ் போர்க்குற்றங்களாகவும் அமையும்.
இந்தக் கோட்பாடுகளை மதிப்பீடு செய்வது என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்குகள் மட்டுமன்றி, பயன்படுத்தப்பட்ட போர்முறையின் வழிகள் மற்றும் வழிமுறைகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது. எனவே, கொத்துக் குண்டுகள் மற்றும் ஏனைய ஆயுதங்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுகள் கீழே தனியாக ஆராயப்படுகின்றது.
போரிட இயலாத நிலையிலுள்ள நபர்களின் பாதுகாப்பு
இந்த அறிக்கையின் பகுதி 1 ஆனந்தபுரம் பகுதியில் காயமடைந்த மற்றும் போராடும் ஆற்றலை இழந்த விடுதலைப் புலிகள் போராளிகள் நடத்தப்பட்ட முறை தொடர்பிலான குற்றச்சாட்டுகளை ஆவணப்படுத்துகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் கடுமையாக காயப்பட்ட நபர்கள், போராடும் ஆற்றலை இழந்த அல்லது வேறு காரணங்களால் போர் நடவடிக்கைகளில் தொடர்ந்தும் பங்குபற்ற முடியாதவர்கள் மற்றும் சரணடைவதற்கான எண்ணத்தை வெளிக்காட்டியதாகச் சொல்லப்படும் தனிநபர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுவதையும் உள்ளடக்குகின்றது.
இந்தக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், போரிடும் ஆற்றலை இழந்த நிலையில் உள்ள நபர்களை மதித்துப் பாதுகாக்க வேண்டிய கடமை மற்றும் அத்தகைய நபர்களைக் கொல்வதையோ அல்லது வேறு எந்த வகையிலும் துன்புறுத்துவதையோ தடைசெய்யும் அனைத்துலக மனிதாபிமானச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மிகவும் அடிப்படைப் பாதுகாப்புகளில் ஒன்றுடன் தொடர்புபட்டதாக இருக்கும்.
காயம் சுகயீனம் அல்லது தடுப்புக்காவல் அல்லது வேறு இயலாமை உட்பட்ட காரணங்களால் ‘போரிடும் ஆற்றலை இழந்தவர்கள்’ எல்லா சந்தர்ப்பங்களிலும் மனித நேயத்துடன் நடத்தப்பட வேண்டும் என்பதை ஜெனீவா உடன்படிக்கையின் பொதுவான பிரிவு 3 வலியுறுத்துகின்றது.
மரபுவழி அனைத்துலக மனிதாபிமானச் சட்டம் இந்தப் பாதுகாப்பினை பிரதிபலிக்கின்றது. அத்துடன் அனைத்துலக அல்லது அனைத்துலகம் அல்லாத ஆயுத மோதல்களுக்குப் பொருந்தக் கூடியதாக மிகக் குறைந்தபட்ச உத்தரவாதங்களில் ஒன்றாக இது உள்ளது.
பொதுப் பிரிவு 3 இன் கீழ் பாதுகாப்பு என்பது முறையான சரணடைதலைப் பொறுத்தது அல்ல. காயம், சுகயீனம் அல்லது வேறு ஏதேனும் இயலாமை காரணமாக போரில் தொடர்ந்து பங்கேற்க முடியாத நிலையில் உள்ள நபர்கள், தங்களது ஆயுதங்களை முறையாகக் கீழே போட்டார்களா- இல்லையா என்று இல்லாமல், ‘போரில் ஈடுபடும் ஆற்றலை இழந்தவர்கள்’ என்பதன் அடிப்படையில் பாதுகாக்கப்படுகிறார்கள்.
போர் நடவடிக்கைகளில் தொடர்ந்து பங்கேற்க முடியாத அவர்களின் புறநிலை சார்ந்த இயலாமை என்பதே, முடிவைத் தீர்மானிக்கும் சட்ட ரீதியாக கருத்தில் கொள்ளப்படும் விடயமாகும்.
எனவே கணினி நிலையம் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் சட்ட விதிமுறைகளுக்கு இணங்க மதிப்பிடப்பட வேண்டும். இந்த அறிக்கையின் பகுதி 1 இல் விபரிக்கப்பட்டது போன்று கணினி நிலையம் என்பது வெறுமனே போரின் போது இழப்புகள் ஏற்பட்ட இன்னுமொரு இடம் அல்ல.
மாறாக, இனிமேலும் போரில் பங்கெடுக்க முடியாத நபர்களையும், கடுமையாகக் காயப்பட்டவர்களையும் பெரும் எண்ணிக்கையில் ஒன்றாகக் கொண்டிருந்த இடம் எனச் சொல்லப்படுகின்றது.
பொதுப் பிரிவு 3 மற்றும் மரபு வழிஅனைத்துலக மனிதாபிமானச் சட்டத்தினால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட பாதுகாப்புகள் ‘போரிடும் ஆற்றலை இழந்தவர்கள்’ என்ற நிலையில் இருந்த இவர்களுக்கு வழங்கப்பட்டதா என்பதே இங்கு சட்டரீதியான முக்கிய கேள்வி ஆகும்.
இது நிரூபிக்கப்பட்டால், காயமடைந்த மற்றும் போரிடும் ஆற்றலை இழந்த நபர்களைக் கொண்ட தெளிவாக அடையாளங் காணக்கூடிய இந்தக் குழுவைச் சேர்ந்த எவரும் உயிர் பிழைத்ததாகத் தெரியவில்லை என அறிவிக்கப்பட்டிருப்பது போர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் முறையை நெறிப்படுத்துவதற்கான சட்ட விதிகளில் இருந்து மாறுபட்ட சட்டப் பிரச்சினைகளை எழுப்புகின்றது.
காயங்கள் அல்லது இயலாமை காரணமாக ஒருவர் ‘போரிடும் ஆற்றலை இழக்கும் நிலைக்கு’ ஆளான பின்னர், அந்த நபரைக் கொல்வதற்கு எதிரான சட்டத்தை மீறுவதற்கு எந்தவொரு இராணுவத் தேவையும் கொண்ட விதிவிலக்கும் அனுமதிக்கப்படமாட்டாது.
போர்முறை வழிகளும் வழிமுறைகளும்
இந்த அறிக்கையின் பகுதி 1, ஆனந்தபுரம் சமரின் இறுதிக் கட்டங்களில் பயன்படுத்தப்பட்ட போர் முறைகள் மற்றும் போர் வழிமுறைகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை ஆவணப்படுத்துகிறது.
பரவலான தீக்காயங்கள், சுவாசக் கோளாறு, பரவலான குண்டுச் சிதறல்கள் மற்றும் வெடிப்பின் தாக்கங்கள் போன்றவற்றை ஏற்படுத்தும் கொத்துத் குண்டுகள், வெள்ளை பொஸ்பரஸ் மற்றும் அடையாளம் காணப்படாத ஏனைய ஆயுதங்களின் பயன்பாட்டினால் ஏற்படும் பாதிப்புகள் என்பன பல்வேறு சாட்சிகள் சுயாதீனமான முறையில் வெடிபொருட்கள் ஏற்படுத்துவதாக விபரிக்கும் தாக்கங்களுடன் ஒத்துப்போகின்றன.
மேலும், வான்வழியாகவும் ஆட்டிலறி எறிகணை மூலமாகவும் வீசப்பட்ட சிதறிப் பரவும் துணை குண்டுகள் காயமடைந்த விடுதலைப் புலிகள் போராளிகள், பொதுமக்கள் மற்றும் தற்காலிக மருத்துவ நிலையங்கள் ஆகியவற்றைக் கொண்டிருந்த குறுகிய நிலப்பரப்பில் ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றிப் பல சாட்சிகள் விபரிக்கின்றனர்.
சாட்சிகளின் வாக்குமூலங்கள் மட்டும் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை திட்டவட்டமாக அடையாளங்காண போதுமாக இல்லாத அதேவேளையில், பல சுயாதீன சாட்சிகளிடமிருந்து பெறப்பட்ட இந்த விபரங்கள் ஒன்றுடன் ஒன்று ஒத்துப்போவது, கவனமான சட்ட ரீதியான மதிப்பீடு மற்றும், தேவைப்பட்டால், மேலதிக தடயவியல் விசாரணையையும் அவசியமாக்குகிறது.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் உண்மை என நிரூபிக்கப்பட்டால், அவை கண்மூடித்தனமான தாக்குதல்கள் மீதான மரபு வழித் தடை, பொதுமக்கள் மற்றும் இராணுவ இலக்குகளுக்கு இடையிலான வேறுபாட்டினைக் கண்டறிய முடியாத போர்முறை வழிகளையும், வழிமுறைகளையும் பயன்படுத்துவதைத் தடை செய்தல் மற்றும் மிதமிஞ்சிய காயங்களை அல்லது தேவையில்லாத துன்பத்தை ஏற்படுத்தும் ஆயுதங்களைத் தடைசெய்தல் போன்ற விதிமுறைகளுடன் அவை தொடர்புபடலாம்.
கொத்துக் குண்டுகள் தொடர்பிலான குற்றச்சாட்டுகளின் சட்டரீதியான முக்கியத்துவமானது, கொத்துக்குண்டுகள் பற்றிய உடன்படிக்கையின் கீழ் உள்ள உடன்படிக்கை கடப்பாடுகளை மாத்திரம் சார்ந்தது அல்ல.
ஒரு அரசு அந்த உடன்படிக்கையில் ஒரு தரப்பாக இல்லாவிட்டாலும் கூட, பொதுமக்கள், காயமடைந்தவர்கள் மற்றும் தற்காலிக மருத்துவமனைகளைக் கொண்டுள்ள ஒரு குறுகிய நிலப்பரப்பின் மீது இயல்பாகவே பரந்த நிலப்பரப்பில் பாதிப்புகளை ஏற்படுத்தும் ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக சொல்லப்படுவது வேறுபடுத்தல், விகிதாசாரம் மற்றும் தாக்குல் முன்னெச்சரிக்கைகள் ஆகியவற்றைக் கொண்ட மரபு வழிக் கோட்பாடுகளை மீறுவதாக அமையும்.
அதற்கிணங்க, குறிப்பிட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டனவா என்பது மட்டுமல்லாமல், அப்போதைய சூழ்நிலையில் போர் முறையில் பயன்படுத்தப்படும் ஆயுதங்களும் போரின் உத்திகளும் இராணுவ இலக்குகளைப் பொதுமக்கள் மற்றும் சட்டத்தால் பாதுகாக்கப்பட்ட ஏனைய நபர்களிடமிருந்து வேறுபடுத்தக்கூடிய ஆற்றலைக் கொண்டிருந்தனவா என்பதுமே இங்குள்ள முக்கிய சட்டரீதியான விடயமாகும்.
இந்தக் குற்றச்சாட்டுகள் பகுதி 1இல் விபரிக்கப்பட்டுள்ள விரிவான நடவடிக்கைச் சூழலினைக் கருத்திற்கொண்டு மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.
வெறும் சூழ்நிலை குறித்த முழுமையற்ற விழிப்புணர்வு காரணமாகவே பொதுமக்கள், காயமடைந்தவர்கள் மற்றும் மருத்துவ நிலையங்களுக்குப் பாதிப்பினை ஏற்படுத்திய தொடர் தாக்குதல்கள் இடம்பெற்றன என்பதற்கான சாத்தியப்பாட்டினை, தொடர்ச்சியான வான்வழிக் கண்காணிப்பு இடைவிடாத வான்வழித் தாக்குதல்கள் மற்றும் ஒருங்கிணைந்த தரைவழி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகச் சொல்லப்படுவது கணிசமாகக் குறைக்கின்றது.
எனவே, இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையானவை என நிரூபிக்கப்பட்டால், அவை பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களின் தன்மை குறித்த கேள்விகளை மட்டுமல்லாமல், அந்த நடவடிக்கையின் போது அந்த ஆயுதங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட விதம் குறித்தும் கேள்விகளை எழுப்புகின்றன.
காயமடைந்தவர்களையும் போரிடும் ஆற்றலை இழந்த போராளிகளையும் சட்டத்திற்குப் புறம்பான முறையில் கொல்லுதல்
ஆனந்தபுரம் பெட்டியின் வீழ்ச்சியின் போது கணினி நிலையத்தில் விடப்பட்டு செல்லப்பட்ட பல நூற்றுக்கணக்கான படுகாயமடைந்த விடுதலைப் புலிகள் போராளிகளுக்கு என்ன நடந்தது என்பது குறித்து கடுமையான குற்றச்சாட்டுகள் இந்த அறிக்கையின் பகுதி -1 இல் உள்ளன.
2009, ஏப்ரல் 3 ஆம் நாளுக்கும் 4 ஆம் நாளுக்கும் இடைப்பட்ட இரவு வேளையில் நடமாடுவதற்கு இன்னும் இயலுமானவர்கள் தப்பிச் செல்வதற்கு முயற்சி செய்த பின்னர் காயமடைந்தவர்கள் மற்றும் செயல்பட முடியாத நிலையில் இருந்தவர்கள் எனப் பல நூற்றுக்கணக்கானவர்கள் அங்கேயே விடப்படிருந்ததை அந்த அறிக்கை பதிவு செய்கிறது.
அந்தப் பகுதியினை சிறிலங்கா இராணுவம் கைப்பற்றிய போது அவர்கள் உயிருடன், கடுமையான காயங்களுடன், ஆயுதங்கள் எதுவும் இல்லாமல் சிறிலங்கா இராணுவத்தை எதிர்க்கும் ஆற்றல் இல்லாதவர்களாக இருந்ததாக பல சாட்சிகள் ஒருவருடன் ஒருவர் ஒத்துப்போகும் வகையில் தெரிவிக்கிறார்கள். இந்தக் குழுவில் இருந்த எவருமே பின்னர் உயிர்பிழைத்ததாகத் தெரியவில்லை என இந்த அறிக்கை மேலும் குறிப்பிடுகின்றது.
இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மை என நிரூபிக்கப்பட்டால், ஜெனீவா உடன்படிக்கையின் பொதுப் பிரிவு 3 இனை மீறியதாக ‘போரிடும் ஆற்றலை இழந்தவர்களை’ கொலை செய்தல் மற்றும் கொடுமைப்படுத்தல் போன்ற போர்க்குற்றங்களுக்கு ஒப்பானவையாக அவை கருதப்படும்.
கணினி நிலையத்தினைக் கைப்பற்றிய பின்னர் சிறிலங்கா அரச படைகள் நடந்து கொண்ட முறை தொடர்பிலான ஆதாரங்களைப் பொறுத்தே அவர்கள் சரணடைந்த அல்லது இனி போராட முடியாதவர்களுக்கு உயிர் பிழைக்கும் வாய்ப்பை மறுப்பதை தடைசெய்யும் மரபுவழிச் சட்டத்தையும் அவர்கள் எதிர்கொள்ள நேரிடலாம்.
அந்தக் கட்டடத்திற்கு அருகே அகப்பட்டுக் கொண்ட ‘பயங்கரவாதிகளை துரத்திச் சென்று அரசாங்கப் படைகள் அழித்தார்கள்’ என்ற அறிவிப்புடன் அந்தக் காலப் பகுதியில், சமருக்குப் பின்னர் எரிந்த நிலையில் அப்போதும் புகை வந்து கொண்டிருந்த கணினி நிலையத்தினைக் காட்டும்- சிறிலங்கா ரூபவாஹினிக் கூட்டுத்தானத்தினால் 2009 ஏப்ரல் 05 இல் ஒளிபரப்புச் செய்யப்பட்ட காணொளி பற்றியும் இந்த அறிக்கையின் பகுதி 01 மேலும் குறிப்பிடுகின்றது.
அங்கு எஞ்சியிருந்தவர்களில் மிகப் பெரும்பான்மையானவர்கள் கடுமையாக காயமடைந்தவர்கள், நடமாடமுடியாதவர்கள் மற்றும் மேலும் சண்டையில் ஈடுபடுவதற்கு வலுவற்றவர்கள் என ஒரே மாதிரியாக கூறும் சாட்சிகளின் வாக்குமூலத்துடன் இந்த அறிவிப்பு முரண்படுகின்றது.
இந்த அறிக்கையானது காயமடைந்தவர்களுடன் அங்கு தொடர்ந்தும் தங்கியிருந்த மருத்துவப் பணியாளர் நடத்தப்பட்ட முறை குறித்தும் கரிசனையை எழுப்புகின்றது.
காயமடைந்தவர்களைப் பராமரிப்பதற்காக அங்கு தொடர்ந்தும் தங்கியிருந்ததாகச் சொல்லப்படும் விடுதலைப் புலிகளினால் பயிற்றுவிக்கப்பட்ட மருத்துவப் பணியாளரான மருத்துவர் சத்தியாவை குறிப்பாக சாட்சிகள் குறிப்பிடுகிறார்கள்.
இந்தச் சமரின் பின்னர் இவர் உயிருடன் பிடிக்கப்பட்டு பின்னர் காணாமற்போனதாகச் சொல்லப்படுகின்றது. இந்தக் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால், அவை அனைத்துலக மனிதாபிமானச் சட்டத்தின் கீழான பாதுகாப்பு மற்றும் வலிந்து காணாமற்போதல் மற்றும் நீதிக்குப் புறம்பான கொலைகள் குறித்த கூடுதலான பிரச்சினைகளை எழுப்புகின்றன.
பகுதி 1-இல் விபரிக்கப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டுகள், தனிப்பட்ட இராணுவ வீரர்களின் தனித்த செயல்கள் என்ற வரையறைக்குள் மட்டும் இல்லாமல், முன்னேறிவரும் இராணுவப் படைப்பிரிவுகள், தொடர்ச்சியான ஆட்லறித் தாக்குதலின் ஆதரவு, மீண்டும் மீண்டும் மேற்கொள்ளப்பட்ட வான்வழி குண்டு வீச்சுத் தாக்குதல்கள் மற்றும் பல நாட்களாக நடாத்தப்பட்ட இடைவிடாத வான்வழி கண்காணிப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு ஒருங்கிணைந்த இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளுதல் என்ற அளவுக்கு விரிந்து செல்கிறது.
இது நிரூபிக்கப்பட்டால், இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு திட்டமிடல், ஒருங்கிணைப்பு மற்றும் இராணுவத்தின் அதிகாரப் படிநிலையின் பல்வேறு மட்டங்களில் உள்ளவர்களது கட்டளைகள் என்பன அவசியமாக தேவைப்பட்டிருக்கும், எனவே இது நேரடியாக குற்றஞ்செய்தவர்களின் பொறுப்பின் வரம்பினையும் கடந்து கேள்விகளை எழுப்புகின்றது.
ரோம் சட்டத்தின் 28 ஆம் பிரிவு, இராணுவத் தளபதிகள் மற்றும் ஏனைய உயர் அதிகாரிகளின் செயற்திறன் மிக்க கட்டளை மற்றும் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள படைகள் மேற்கொள்ளும் குற்றங்களுக்காக அந்த அதிகாரிகளுக்குள்ள குற்றவியல் பொறுப்பினை குறிப்பிடுகிறது.
அதாவது அத்தகைய குற்றங்கள் இடம்பெற்று வருவதை அவர்கள் அறிந்திருந்தும் அல்லது அந்த நேரத்தில் இருந்த சூழ்நிலைகள் காரணமாக அவர்களுக்கு இது போன்ற குற்றங்கள் இடம்பெற்று வருவதை அல்லது இடம்பெறவிருப்பதை அறிந்திருந்தும் அவற்றைத் தடுக்கவோ அல்லது அவை மேற்கொள்ளப்படுவதைக் கட்டுப்படுத்தவோ அல்லது அந்த விடயத்தை விசாரணைக்கு மற்றும் வழக்குத் தொடர்வதற்காக சமர்ப்பிக்க தங்களால் மேற்கொள்ளக்கூடிய அனைத்து தேவையான மற்றும் நியாயமான நடவடிக்கைகளையும் எடுக்கத் தவறும் பட்சத்தில் அவர்களின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள படைகள் செய்த குற்றங்களுக்கு அதிகாரிகளே குற்றவியல் பொறுப்பு உடையவர்களாவார்கள்.
இது போன்ற கேட்பாடுகள் மரபு வழி அனைத்துலக சட்டத்தின் ஒரு பகுதியாக அமைகின்றன.
குற்றச்சாட்டுக்கள் சொல்லப்பட்ட சூழ்நிலைகளில், தமக்கு கீழ் உள்ளவர்களால் ஏற்கனவே புரியப்பட்ட குற்றங்களுக்கு அதிகாரிகள் தண்டனை வழங்கத்தவறினார்களா என்பதுடன் மட்டும் இந்த விடயம் நின்றுவிடவில்லை.
களநிலைகள் மாறுவதற்கேற்றவாறு நடவடிக்கைகளை திட்டமிட்டு செயல்படுத்துவதிலும் திட்டமிடல் மீதும் நேர்த்தியான கட்டுப்பாட்டினை அவர்கள் கொண்டிருந்தார்களா என்பது குறித்தும் அது கவனம் செலுத்துகிறது.
ஒருங்கிணைக்கப்பட்ட எதிர்ப்பு படிப்படியாக வீழ்ச்சியடைதல், காயமடைந்த மற்றும் போரிடமுடியாத நிலையில் உள்ள போராளிகளின் எண்ணிக்கை அதிகரித்தல், அத்துடன் சரணடைவதற்கான சரியான வாய்ப்புகள் இல்லாதிருப்பதாகச் சொல்லப்படுதல் ஆகியவை, நடவடிக்கைக்கான உத்தரவுகள், கட்டளை அறிவுறுத்தல்கள் மற்றும் போர்க் கட்டுப்பாட்டு விதிகளில் அதற்கேற்றவாறான சரிசெய்தல்களை மேற்கொள்ள வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.
இவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டனவா என்பது பிரிவு 28 இன் கீழ் நேர்த்தியான கட்டளையும் கட்டுப்பாடும் செயல்படுத்தப்பட்டதை நேரடியாக மதிப்பிடுவது பொருத்தமானதாக இருக்கும்.
சிறிலங்கா விமானப்படையின் ஆதரவுடன் சிறிலங்கா இராணுவத்தின் 58 ஆவது படைப்பிரிவு மற்றும் 53 ஆவது படைப்பிரிவு உட்பட இந்த நடவடிக்கையை மேற்கொள்வதில் தொடர்புபட்ட குறிப்பிட்ட எண்ணிக்கையான இராணுவ அணிகளை இந்த அறிக்கையின் பகுதி 1 அடையாளங்கண்டுள்ளது.
இந்த சட்ட ரீதியான ஆய்வு எந்தவொரு தனிப்பட்ட தளபதியினதும் குற்றவியல் பொறுப்பினைத் தீர்மானிக்கவில்லை. எவ்வாறாயினும், இந்தநடவடிக்கைகளின் திட்டமிடல் மற்றும் செயல்படுத்தல் தொடர்பில் நேர்த்தியான கட்டளை மற்றும் கட்டுப்பாட்டை மேற்கொண்டவர்கள் ரோம் சட்டத்தின் 28ஆம் பிரிவு மற்றும் மரபு வழி அனைத்துலக சட்டத்தின் கீழ் பொறுப்புக்கூறலுக்கு உட்படுவார்களா என்பதை ஆராய்வதற்கு கிடைக்கக்கூடிய தரவுகள் போதுமான ஆதார அடிப்படையை வழங்குவதாக அது முடிவு செய்கிறது.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் தனித் தனியாகப் பார்க்கப்படக்கூடாது. இவற்றை மொத்தமாக் கருத்தில் கொள்ளும் போது, போர் நடவடிக்கைகளை மேற்கொண்டமுறை சட்டத்தினால் பாதுகாக்கப்பட்ட நபர்களை நடத்தியமுறை, இராணுவ நடவடிக்கைகளை திட்டமிடலும் செயல்படுத்தலும், நேர்த்தியான கட்டளை மற்றும் கட்டுப்பாட்டினை மேற்கொண்டவர்களுக்கு உள்ள பொறுப்பு என்பன தொடர்பில் ஒன்றோடு ஒன்று தொடர்புபட்ட கேள்விகளை எழுப்புகின்றன.
முழுமையாகப் பார்க்கையில், ஆனந்தபுரம் சமரில் இருந்து எழும் அனைத்துலக மனிதாபிமான சட்டம் மற்றும் அனைத்துலக குற்றவியல் சட்டத்தின் கடுமையான மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் மேலதிக விசாரணையை மேற்கொள்வதற்கான ஒன்றுக் கொன்று ஒத்துப்போகும் ஆதார அடிப்படையை பகுதி 1 வழங்குகின்றது.
கண்மூடித்தனமான தாக்குதல்கள், பாதுகாக்கப்பட்ட மருத்துவ நிலையங்களைப் பாதிக்கும் தாக்குதல்கள், சட்டத்திற்குப் புறம்பான வழிகள் மற்றும் வழிமுறைகளைக் கொண்ட போர்முறை மற்றும் ‘போரிடும் ஆற்றலை இழந்த’ நபர்களைக் கொல்லுதல் என்பன பற்றிய குற்றச்சாட்டுக்களை இவை உள்ளடக்குகின்றன.
குறிப்பிட்ட சட்ட முக்கியத்துவத்தைக் கொண்டதாக கணினி நிலையம் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் உள்ளன, இந்தச் சமரில் உயிர் தப்பி இனி மேல் போர் நடவடிக்கைகளில் பங்கேற்க முடியாத, காயமடைந்த மற்றும் இயங்க முடியாத நபர்களைக் கொண்ட தெளிவாக அடையாளங்காணக் கூடியவாறு பெரும் எண்ணிக்கையில் குழுவாக இருந்தவர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் சம்பவத்தை அவை விவரிக்கின்றன.
அத்துடன் இது உண்மை என நிரூபிக்கப்பட்டால், இத்தகைய நபர்கள் பொதுவான பிரிவு 3 வழங்கும் முழுமையான பாதுகாப்பிற்கு உரித்தானவர்கள். தனிநபரின் குற்றவியல்பைப் பொறுப்பைத் தீர்மானிப்பது ஒரு தகுதிவாய்ந்த நீதித்துறை அமைப்பின் பணியாக இருக்கும் அதேவேளையில், கிடைக்கப்பெற்ற ஆதாரங்களை ஒன்றாக வைத்துப் பார்க்கும் போது ஆனந்தபுரம் சமரின் திட்டமிடல், ஒருங்கிணைப்பு மற்றும் செயல்படுத்தல் ஆகியன போர்க்குற்றங்கள் மற்றும், விரிவான சூழல் சார் ஆதாரங்களைப் பொறுத்து, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் உட்பட அனைத்துலக மனிதாபிமானச் சட்டம் மற்றும் அனைத்துலக குற்றவியல் சட்டத்தின் கடுமையான மீறல்களுடன் தொடர்புபட்டு உள்ளதா என்பது பற்றி விசாரிப்பதற்கான நியாயமான காரணங்கள் உள்ளன என்பதை வெளிப்படுத்துகின்றது.
கட்டளைப் பொறுப்புக் கோட்பாடுகளின் கீழ், அந்த நடவடிக்கையின் மீது நேர்த்தியான கட்டளை மற்றும் கட்டுப்பாட்டை மேற்கொண்டவர்களுக்கு இருக்ககூடிய சாத்தியமான பொறுப்பை ஆராய்வதற்குப் போதுமான ஆதார அடிப்படை இருப்பதையும் இந்தப் பகுப்பாய்வு மேலும் அடையாளங் காண்கிறது.
நிறைவு.


