அமெரிக்காவின் தேசிய காவல்படைப் பிரிவுடன் கூடுதல் ஒத்துழைப்பை கோரும் சிறிலங்கா
சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தா, அமெரிக்காவின் தேசிய காவல் பிரிவின் தலைவர், ஜெனரல் ஸ்டீவன் நோர்டாஸ் (Chief of the National Guard Bureau of the United States, General Steven Nordhaus) உடன் இருதரப்புப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
கனடாவின் விக்டோரியா நகரில் இந்தோ- பசுபிக் பாதுகாப்புத் தலைவர்களின் மாநாட்டின் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த இருதரப்பு கலந்துரையாடலின் போது, பேரிடர் மீட்பு, உள்கட்டமைப்பு மீள்திறன் மற்றும் பாதுகாப்பு ஈடுபாடு ஆகிய துறைகளில் நடைமுறை ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான புதிய வழிகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் மீள்திறன் மற்றும் அவசரகால மீட்புத் திறன்களுக்கு நேரடியாக ஆதரவளிக்கக்கூடிய சாத்தியமான ஒத்துழைப்புத் துறைகளை இந்தக் கலந்துரையாடல் முன்னிலைப்படுத்தியது.
மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணத்திற்காக சிறப்பு உபகரணங்கள் மற்றும் திறன்களை வழங்குதல் மற்றும் மேம்படுத்துவதன் மூலம் பேரிடர் மீட்புத் தயார்நிலையை வலுப்படுத்துவதற்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.
கூடுதல் பரஸ்பர ஆர்வமுள்ள துறைகளைக் கண்டறிந்து நடைமுறை ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், இருதரப்பு ஈடுபாட்டை மேலும் விரிவுபடுத்தவும், இரு நாடுகளுக்கும் இடையே வழக்கமான உரையாடலைப் பராமரிக்கவும் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் அமெரிக்காவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
பேரிடர் தயார்நிலை, மனிதாபிமான மீட்பு மற்றும் நிறுவன மீள்திறன் ஆகியவற்றிற்குப் பங்களிக்கும் திறன்களை வளர்ப்பதில் சிறிலங்கா மற்றும் அமெரிக்காவின் பகிரப்பட்ட ஆர்வத்தை இந்தக் கலந்துரையாடல்கள் பிரதிபலித்ததுடன், இருதரப்பு ஈடுபாட்டின் நோக்கத்தை மேலும் விரிவுபடுத்தியுள்ளது.

