மேலும்

கொழும்பு துறைமுகத்தில் சிக்கிய 463 கிலோ ஐஸ்- அமெரிக்காவே தகவல் வழங்கியது

அமெரிக்கா வழங்கிய புலனாய்வுத் தகவலின் மூலமே, கொழும்பு துறைமுகத்தில் 463 கிலோ கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளுடன் கொள்கலன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் கொழும்பு வழியாக அனைத்துலக சந்தைகளுக்குக் கொண்டு செல்லப்படவிருந்தது என்றும் அமெரிக்க தூதரகம் கூறியுள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“அமெரிக்க போதைப்பொருள் நடைமுறைப்படுத்தல் நிர்வாகத்தின் புதுடெல்லி பணியகமும், சிறிலங்கா காவல்துறை போதைப்பொருள் பணியகமும் (PNB), கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைனை சிறிலங்கா வழியாக அனைத்துலக சந்தைகளுக்குக் கடத்த முயன்ற பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பை முறியடிப்பதில் ஒரு வெற்றிகரமான கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டன என்று கூறப்பட்டுள்ளது.

ஓகஸ்ட் 14 முதல் 29 ஆம் நாள் வரை, பாகிஸ்தானிலிருந்து கொழும்புக்குச் செல்லும் சந்தேகத்திற்கிடமான கடல்வழி கொள்கலன்கள் குறித்து அமெரிக்க போதைப்பொருள் நடைமுறைப்படுத்தல் நிர்வாகத்தின் வெளிநாட்டுப் பிரிவுகளின் பாகிஸ்தான் போதைப்பொருள் தடுப்புப் படையின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு வழங்கிய புலனாய்வுத் தகவலின் அடிப்படையில், சிறிலங்கா காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பணியகம், கொள்கலன்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 463 கிலோ கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைனை (21 மில்லியன் டொலர் மதிப்புடையது) கைப்பற்றியதுடன், பாகிஸ்தான் நாட்டவர்கள் உட்பட பல சந்தேக நபர்களையும் கைது செய்தது.

பயங்கரவாதத்திற்கு நிதியளித்து, எமது இரு நாடுகளிலும் உள்ள சமூகங்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் நாடுகடந்த குற்ற அமைப்புகளைத் தகர்ப்பதில் அமெரிக்க-சிறிலங்கா கூட்டாண்மையின் வலிமையை இந்த நடவடிக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இந்த ஒத்துழைப்பு, அமெரிக்க போதைப்பொருள் தடுப்புத் துறையின் மூலம் வழங்கப்படும் நீண்டகால பயிற்சி மற்றும் தொழில்நுட்ப உதவியின் தொடர்ச்சியாகும்.

அனைத்துலக  போதைப்பொருள் மற்றும் சட்ட நடைமுறைப்படுத்தல் விவகாரங்களுக்கான அமெரிக்க அரசின் பணியகம் , சிறிலங்கா காவல்துறை மற்றும் சுங்கத்துறை அனைத்துலக குற்ற அமைப்புகளைத் தீவிரமாகப் பின்தொடர்வதற்கும், சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைக்கும் வருவாயை அவர்களுக்கு மறுப்பதற்கும், போதைப்பொருள் கடத்தலின் அபாயங்களிலிருந்து நமது குடிமக்களைப் பாதுகாப்பதற்கும், சிறிலங்கா மற்றும் பிராந்திய கூட்டாளிகளுடன் இணைந்து பணியாற்றுவதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது”என்றும்  குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *