மேலும்

சிறிலங்காவின் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் ஒத்துழைப்பை வலுப்படுத்த சீனா விருப்பம்

சிறிலங்காவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுடனும் ஒத்துழைப்பை வலுப்படுத்த சீனா விரும்புவதாக, சிறிலங்காவிற்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்துள்ளார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சி  நிறுவப்பட்டதன் 105வது ஆண்டு விழாவை முன்னிட்டு  கொழும்பில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திரம், சமத்துவம், பரஸ்பர மரியாதை மற்றும் உள் விவகாரங்களில் தலையிடாமை ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் சிறிலங்கா அரசியல் கட்சிகளுடன் பரிமாற்றங்களை வலுப்படுத்த சீன கம்யூனிஸ்ட் கட்சி தயாராக இருக்கிறது.

வறுமை ஒழிப்பு, டிஜிட்டல் நகரங்கள் மற்றும் ஆட்சி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் சீனா விருப்பம் கொண்டுள்ளது.

சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கும், சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவிற்கும் இடையிலான வெற்றிகரமான சந்திப்பு, இருதரப்பு உறவுகளுக்கு ஒரு புதிய வரைபடத்தை வகுத்துள்ளது.

இரு தலைவர்களும் எட்டிய ஒருமித்த கருத்தை நடைமுறைப்படுத்தவும், நடைமுறை ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், மக்கள் பரிமாற்றங்களை மேம்படுத்தவும், பகிரப்பட்ட எதிர்காலத்துடன் கூடிய சீனா-சிறிலங்கா சமூகத்தை உருவாக்குவதை ஊக்குவிக்கவும், சிறிலங்காவுடன் இணைந்து பணியாற்ற சீனா விரும்புகிறது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ் சீனா கடும் வறுமையை ஒழித்து, சமூக நலத் திட்டங்களை விரிவுபடுத்தி, பெரும் தொழில்நுட்ப முன்னேற்றங்களை அடைந்து, உலகின் மிகப்பெரிய வர்த்தக நாடாகத் தனது நிலையைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

சீன அதிபர் ஷி ஜின்பிங் முன்மொழிந்த பட்டுப்பாதை முன்முயற்சி மற்றும் பிற உலகளாவிய அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு முன்முயற்சிகள் உள்ளிட்ட முன்னெடுப்புகள் மூலம், உலகளாவிய அபிவிருத்தி, அமைதி மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் சீனாவின் உறுதியான நிலைப்பாட்டில் உள்ளது என்றும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் சிறிலங்காவின் முக்கிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், இராஜதந்திரிகள் மற்றும் பிற முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *