சிறிலங்கா கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ நியமனம்
றியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவினால் வைஸ் அட்மிரல் தரத்திற்கு உயர்த்தப்பட்டு, சிறிலங்கா கடற்படையின் 27வது தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.சிறிலங்கா கடற்படைத் தளபதியாகப் பணியாற்றிய, அட்மிரல் காஞ்சன பாணகொட ஓய்வு பெறும் நிலையில், இன்று முதல் இந்த நியமனம் நடைமுறைக்கு வருவதாக சிறிலங்கா அதிபர் செயலகம் தெரிவித்துள்ளது.
புதிய கடற்படைத் தளபதிக்கான நியமனக் கடிதம் நேற்றுப் பிற்பகல் அதிபர் செயலகத்தில் சிறிலங்கா அதிபரின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாரநாயக்கவினால் வழங்கப்பட்டது.
1991 ஆம் ஆண்டு சிறிலங்கா கடற்படையில் இணைந்த வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகடமியில் அடிப்படைப் பயிற்சியை முடித்த பின்னர், 1993 ஆம் ஆண்டில் சப் லெப்டினன்டாக நியமிக்கப்பட்டார்.
35-ஆண்டுகள் சிறிலங்கா கடற்படையில் பணியாற்றியுள்ள அவர், உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் பல தொழில்முறை மற்றும் சிறப்புப் பயிற்சிகளை முடித்துள்ளார்.
அதேவேளை, இன்றுடன் ஓய்வு பெறும் சிறிலங்கா கடற்படைத் தளபதி காஞ்சன பாணகொடவை அட்மிரலாகப் பதவி உயர்த்தி, சிறிலங்கா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

