சிறைச்சாலை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் டக்ளஸ்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஈபிடிபி செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, மஹர சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டக்ளஸ் தேவானந்தாவின் உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் அளித்த பரிந்துரையை அடுத்து அவர் சிறைச்சாலை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சிறிலங்கா இராணுவத்தினரால் பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட துப்பாக்கி, பாதாள உலக குழுவிடம் இருந்து கைப்பற்றப்பட்டதை அடுத்து, டக்ளஸ் தேவானந்தா டிசம்பர் 26 ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
72 மணிநேர தடுப்புக்காவல் உத்தரவுக்குப் பின்னர் கம்பஹா பதில் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்ட அவரை ஜனவரி 09ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.
