நாய்களைப் போல எம்மை தாக்குகின்றனர் – தயாசிறி புலம்பல்
சிறிலங்கா அரசாங்க தலைவர்களால் சுதந்திரக் கட்சியினர் மிருகங்களைப் போல தாக்கப்படுகின்றனர் என்று, கட்சியின் பொதுச் செயலர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
பொத்துஹெரவில் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் நேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“எங்கள் சொந்த அணிகளுக்குள் அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், அதிபர் தேர்தலில் நாங்கள் கோத்தாபய ராஜபக்சவுடன் உறுதியாக நின்றிருந்தோம். ஆனால், இப்போது அரசாங்க தலைவர்களால் நாங்கள் மிருகங்களை போல தாக்கப்படுகிறோம்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பிற இடதுசாரிக் கட்சிகளுடன் பொதுஜன பெரமுன கூட்டணி வைத்திருந்ததால் தான், அதிபர் தேர்தலில், கோத்தாபய ராஜபக்ச 6.9 மில்லியன் வாக்குகளைப் பெற்றார் என்பதை நன்றியற்ற சிலர் மறந்து விட்டனர்.
அதிபர் தேர்தலுக்கு முன்னர், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் வேறுபட்ட கருத்துக்கள் இருந்தன, சிலர் கை சின்னத்தின் கீழ் போட்டியிட பரிந்துரைத்தனர், மற்றவர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் வேரூன்றியிருந்தனர்.
அந்த வழிகளில் நாங்கள் ஒரு முடிவை எடுத்திருந்தால், கோத்தாபய ராஜபக்ச தோற்கடிக்கப்பட்டிருப்பார். ஆனால், நாங்கள் அவருக்கு ஆதரவாக நின்றோம்.
சிலர் இந்த உண்மையை மறந்து நாய்களின் நிலைக்கு எம்மை இழிவுபடுத்தியுள்ளனர்.
பொது எதிரியான ஐதேகவைத் தாக்குவதற்குப் பதிலாக சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் அதன் தலைவர் மைத்ரிபால சிறிசேன மீது அரசாங்கத் தலைவர்கள் தாக்குகிறார்கள்.
அவர்கள் சுதந்திரக் கட்சியை அழிக்கும் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர். இது எளிதாக இருக்காது.
சுதந்திரக் கட்சி இல்லாமல், பொதுஜன பெரமுன இருக்காது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு அரசாங்கமாக, அத்தியாவசிய பொருட்களின் விலையை எங்களால் குறைக்க முடியவில்லை. முன்னைய ஆட்சி உருவாக்கிய பிரச்சினைகள் இன்னும் வேட்டையாடுகின்றன.
மக்களிடமிருந்து மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைக் கோரிக் கொண்டு, ஆட்சிக்கு வர ஆதரவு அளித்த சுதந்திரக் கட்சி மற்றும் மைத்ரிபால சிறிசேனவை தாக்குகிறார்கள்.
மைத்ரிபால சிறிசேனவுடன் தொடர்பு வைத்திருக்கும் எவருக்கும் வாக்களிக்க வேண்டாம் என்று அவர்கள் மக்களிடம் கேட்கிறார்கள்,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.