கிழக்கில் இராணுவத்தின் கீழ் ‘கொரோனா’ தடுப்பு மையங்கள்
வெளிநாட்டில் இருந்து வருபவர்களை, தனிமைப்படுத்தி கண்காணிப்பதற்கான இரண்டு தடுப்பு மையங்களை சிறிலங்கா இராணுவம் தயார்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாகவே, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள புனானையிலும், மட்டக்களப்பு மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள கண்டகாடு புனர்வாழ்வு நிலையத்திலுமே இந்த தடுப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நேற்று தொடக்கம் இந்த தடுப்பு மையங்கள் செயற்பட ஆரம்பித்துள்ளன.
சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வா, இந்த தடுப்பு மையங்களுக்கு சென்று அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்தார்.
வெளிநாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டவர்கள் மற்றும் இலங்கையர்களை இரண்டு வாரங்கள் தடுத்து வைத்து நோய்த் தொற்று இல்லை என்பதை உறுதி செய்து கொள்வதற்காக இந்த இரண்டு தடுப்பு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
சுகாதார அமைச்சும், பாதுகாப்பு அமைச்சும் இணைந்து உருவாக்கியுள்ள இந்த தடுப்பு மையங்களில், 2000 தொடக்கம் 2500 பேரை, இரண்டு வாரங்கள் தங்க வைத்து கண்காணிக்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அவசரகால நிலைமைகள் ஏற்பட்டால், தியத்தலாவ இராணுவ முகாமில் மேலும் 300 பேரை தங்க வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புனானையில் அமைந்துள்ள மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்திலும், கண்டகாடு புனர்வாழ்வு நிலையத்திலும், இந்த தடுப்பு மையங்களை அமைக்கும் பணியில் நூற்றுக்கணக்கான சிறிலங்கா இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டனர்.
இங்கு தேவையான அனைத்து மருத்துவ வசதிகள், வை-பை தொடர்பாடல் வசதிகள், சலவை வசதிகள், பொழுதுபோக்கு வசதிகள், செய்யப்பட்டுள்ளன.
தென்கொரியா, ஈரான், இத்தாலிய ஆகிய நாடுகளில் இருந்து வருபவர்கள் இங்கு தங்க வைக்கப்படவுள்ளனர்.
சிறிலங்கா இராணுவத் தளபதியின் நேரடி கண்காணிப்பில் இந்த தடுப்பு மையங்கள் இயங்கவுள்ளன.