பிரித்தானியாவின் பயணத் தடை பட்டியலில் சிறிலங்கா இராணுவ அதிகாரிகள்?
இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா உள்ளிட்ட சிறிலங்கா அதிகாரிகள் மீது பிரித்தானியாவின் புதிய அரசாங்கம் தடைகளை விதிக்கக் கூடிய ஆபத்து உள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படும் சிறிலங்கா அதிகாரிகளுக்கு எதிராக பயணத் தடைகள் விதிக்க பிரித்தானியா நடவடிக்கைகளை எடுத்துள்ளதா என, பிரதிநிதிகள் சபையில் கேள்வி எழுப்பப்பட்டது.
இந்தக் கேள்விக்கு எழுத்துமூலம் பதிலளித்த, பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இணை அமைச்சர், நைஜெல் அடம்ஸ், தடைகளை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக உறுதிப்படுத்தவோ, மறுக்கவோ இல்லை.
“பிரித்தானிய தன்னாட்சி உலகளாவிய மனித உரிமைகள் தடை விதிகளை நிறுவும் தனது எண்ணத்தை பிரித்தானியா வெளிப்படுத்தியுள்ளது.
எதிர்வரும் மாதங்களில் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இரண்டாம் நிலை சட்டம் இயற்றப்பட்டவுடன் இந்த விதிமுறைகள் நடைமுறைக்கு வரும்.
விதிமுறைகள் நடைமுறைக்கு வருவதற்கு முன்னர் சாத்தியமான பெயர்கள் குறித்து கருத்து தெரிவிப்பது பொருத்தமற்றது” என்றும் இணை அமைச்சர், நைஜெல் அடம்ஸ், தெரிவித்துள்ளார்.