ரவியை காப்பாற்றி ஒளித்து வைத்துள்ள ஆளும்கட்சி முக்கிய புள்ளி?
கைது செய்வதற்காக சிறிலங்கா காவல்துறை தேடிக் கொண்டிருக்கும் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவை, சிறிலங்கா அரசாங்கமே ஒளித்து வைத்துள்ளது என்று ஜேவிபி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க குற்றம்சாட்டியுள்ளார்.
பெலவத்தையில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளிட்ட அவர்,
“அரசாங்கத்தின் மிக சக்திவாய்ந்த அரசியல்வாதி ஒருவரின் இல்லத்திலேயே ரவி கருணாநாயக்க மறைந்திருக்கிறார். அந்த அரசியல்வாதியின் பெயரை வெளியிட முடியாது.
ஆனால், சில சந்தேக நபர்கள் கைது செய்யப்படுவதை தற்போதைய அரசாங்கம் அனுமதிக்காது என்பது நிச்சயம்.
ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட வேண்டும். சந்தேக நபர்களின் பட்டியலில் அவரது பெயர் உள்ள போதும், அவர் கைது செய்யப்படமாட்டார்.
ரவி கருணாநாயக்கவை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டு 48 மணித்தியாலங்களாகியும் அவர் கைது செய்யப்படவில்லை.
ஐதேக அரசாங்கத்தின் காலத்தில், தற்போதைய அரசாங்கத்தில் உள்ளவர்களை, மறைத்து வைத்து காப்பாற்றியது.
அதுபோலவே, இப்போதைய அரசாங்கத்தில் உள்ளவர்கள், ஐதேகவினரைக் காப்பாற்றுகிறார்கள்.
அரசாங்கத்தின் முக்கிய அரசியல்வாதி ஒருவரின் வீட்டிலேயே ரவி கருணாநாயக்க மறைந்திருக்கிறார் என்பதை உறுதியாக கூறுகிறோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.