வடக்கில் அதிக முதலீடுகளை வலியுறுத்துகிறது அனைத்துலக தொழிலாளர் அமைப்பு
போரினால் சிதைந்த வடக்கு மாகாணத்திற்கு அதிக முதலீடுகள், ஒழுக்கமான வேலை நிலைமைகள் மற்றும் பெண்களுக்கு அதிக வாய்ப்புகள் தேவைப்படுவதாக, அனைத்துலக தொழிலாளர் அமைப்பு (ஐ.எல்.ஓ) தெரிவித்துள்ளது.
அனைத்துலக தொழிலாளர் அமைப்பின், சிறிலங்காவுக்கான பணிப்பாளர் சிம்ரின் சிங் நேற்று கொழும்பில் நடந்த, வடக்கு மாகாணத்தில் தனியார் துறை முதலீடுகளுக்கு அடையாளம் காணப்பட்ட இடையூறுகள் குறித்து நடத்தப்பட்ட கலந்துரையாடலில் உரையாற்றிய போதே இவ்வாறு கூறினார்.
கடந்த காலத்தின் துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய, அடுத்த கட்டத்திற்குப் புறப்பட்டுச் செல்ல வேண்டிய நேரம் இது.
பத்து நாட்களுக்கு முன்பு வடக்கில் இருந்தோம், புதிய ஆளுநரை சந்தித்தோம்.
நீண்டகால உள்நாட்டுப் போரின் தாக்கத்திலிருந்து வடக்கு மாகாணம், இன்னும் மீண்டு வருகிறது. அதன் மறுமலர்ச்சிக்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் தேவைப்படுகின்றன.
அதற்கு சுதந்திரம், சமத்துவம், பாதுகாப்பு மற்றும் கௌரவமான நிலைமைகளில் பெண்களுக்கு ஒழுக்கமான மற்றும் உற்பத்தி வேலைகளைப் பெறுவதற்கான அதிக வாய்ப்புகளையும் உறுதி செய்ய வேண்டும்.” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.