சிறிலங்கா நிலவரம் – ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் கவலை
சிறிலங்காவின் நிலவரங்கள் குறித்து, ஜெனிவாவில் நடந்து வரும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில், சமர்ப்பித்துள்ள அறிக்கையில், மத சுதந்திரம் அல்லது நம்பிக்கை சுதந்திரம் குறித்த ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் அகமட் ஷகீட் கவலை வெளியிட்டுள்ளார்.
சிறிலங்காவுக்கு 2019 ஓகஸ்ட் 15 தொடக்கம் 26ஆம் நாள் வரை மேற்கொண்டிருந்த பயணத்தில் அவதானிக்கப்பட்ட விடயங்களை உள்ளடக்கி அவர் இந்த அறிக்கையை தயாரித்துள்ளார்.
“ சிறிலங்காவில் 2015 ஆம் ஆண்டிலிருந்து சாதகமான முன்னேற்றங்கள் இருந்த போதிலும்கூட, இன மற்றும் மத சமூகங்களிடையே பதற்றங்கள் நீடித்திருக்கின்றன.
குறிப்பாக பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை உறுதிப்படுத்துவது, மனித உரிமை மீறல்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்வதில், குறிப்பிடத்தக்க இடைவெளிகள் உள்ளன.
நவம்பர் 2019 அதிபர் தேர்தல் பரப்புரையின் போது, ஐ.நாவுடனான கடந்த அரசாங்கங்களின் உறுதிமொழிகளை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்றும், போருக்குப் பிந்தைய பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக மனித உரிமைகள் பேரவையில் அளித்த உறுதிப்பாட்டை மதிக்கப் போவதில்லை என்றும் சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச வெளியிட்ட கருத்து குறித்து பலரும் கவலை தெரிவித்தனர்.
சிறிலங்கா பழைய குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகாமல் முன்னோக்கிப் பார்க்க வேண்டும்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.