மேலும்

தெருக்களில் திரிக, தமிழர்கள் அனைவரும், நிர்வாணம் கொண்டு…

tamil-eelam-idp-artificial-prosthetic-limbsதிருவிழாவில் காணாமல் போன வாய்பேசாக் குழந்தையாகத் தவித்து நிற்கின்றது ஈழத் தமிழினம். அதிலும் – தேர்தல் திருவிழாவின் நெரிசலுக்குள் சிக்குண்டு விழி பிதுங்கி நிற்கின்றது ஈழத் தமிழ் தேசியம்.

“தனி நாடு” பற்றிப் பேச முடியாத ஆறாவது சட்டத் திருத்தத்திற்கு கீழ் தான் சிறிலங்கா நாடாளுமன்றத்திற்குள் நுழைய முடியும் என்பது சிறிலங்காவின் அரசியலமைப்பு.

இந்த நாடாளுமன்றத்திற்குள் நுழையவும், அந்த அரசியலமைப்புக்குக் கீழ் மட்டுப்படுத்தப்பட்ட அரசியல் உரிமைக்காக வாதாடவும் – பேரம் பேசும் வலிமையை ஒன்று திரட்டுவதற்கான ஒரு சனநாயகப் பலமாக உருவாக்கப்பட்டது தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு.

இதில் இணைந்திருந்த கட்சிகள் ஓர் ஒழுங்கு முறையாகப் புதுப்பிக்கப்பட்ட அமைப்பு வடிவமும் உள் சனநாயகமும் கொண்டவை அல்ல.

கூட்டமைப்பு உருவான போது இணைந்திருந்த நான்கு கட்சிகளில் இரு கட்சிகள் மென்முறை அரசியல் பாரம்பரியமும், இரண்டு கட்சிகள் வன்முறை அரசியல் போராட்டப் பின்னணியும் கொண்டிருந்தன.

அறுபதாண்டு கால வரலாற்றுப் பாரம்பரியக் கட்சிகளாக தமிழரசுக் கட்சியும், தமிழ்க் காங்கிரஸ் கட்சியும் இருந்தன.

அத்துடன் – இந்த கட்சிகள் தவிர்த்து தமிழ் தேசிய கூட்டமைப்பில் “உதிரி்”களாக இணைக்கப்பட்டவர்கள் பலர்.

தற்போது – அந்த பழைய பாரம்பரிய கட்சிகளில் ஒன்றான தமிழ் காங்கிரஸ்-உம், “உதிரி”களாக இணைக்கப்பட்டிருந்த பலரும் இந்த “தேசிய கூட்டமைப்”பில் இல்லை.

அந்த “உதிரி”களோடு, இன்னும் சில உதிரிகளையும், வேறு சில உருப்படியானவர்களையும் சேர்த்துக் கொண்டு தமிழ் காங்கிரஸ் இப்போது “தேசிய முன்னணி” அமைத்துத் தனித்துப் போட்டியிடுகின்றது.

2009 மே மாதம் வரையில் தனது அரசியல் தீர்மானத் தனித்துவத்தை இழந்திருந்தது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு.

விரும்பியோ விரும்பாமலோ, விடுதலைப் புலிகள் கண்ணசைத்த திசையிலேயே கூட்டமைப்பு நடந்தது என்பதும், விடுதலைப் புலிகளின் கைப்பாவைகளாகவே இந்த உலகத்தால் கூட்டமைப்பு பார்க்கப்பட்டது என்பதுவும் பட்டவர்த்தனமான உண்மை.

கூட்டமைப்பின் அந்த “உதிரி”களில் பலர் – அன்று, விடுதலைப் புலிகளால் ஒட்ட வைக்கப்பட்டவர்கள் என்பது கூட ஒன்றும் இரகசியம் அல்ல.

மக்களால் மக்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு, புலிகளால் புலிகளுக்காக உருவாக்கப்பட்டதாக உலகம் கருதியதற்கு, ஒட்டியிருந்த இந்த “உதிரி”களும் காரணம்.

மே 19, 2009 முடிவுடன் – ஒட்டியிருந்த “உதிரி”களை உதிர்த்துவிட்டு – தனக்கென ஒரு தனித்துவத்தை உருவாக்கக் கூட்டமைப்பு முயற்சித்தது.

ஆனால் – சிங்களம் அதற்குச் சந்தர்ப்பம் அளிக்காமல் ஈழத் தமிழ் சமூகத்தின் ஒருங்கிணைப்பை மட்டுமல்ல சிந்தனையையும் சீரழிப்பதில் முனைப்பு காட்டியது.

இதற்கிடையில் – இந்தியாவும் இங்கே புகுந்து விளையாடுகின்றது என்பதை நிரூபிப்பதற்கோ, அல்லது மறுப்பதற்கோ யாரிடமும் எந்த ஆதாரங்களும் இல்லை.

நடப்பவை நமக்கு உணர்த்துவது என்னவென்றால் – வெளிச் சக்திகளின் குளறுபடிகளை எதிர்கொள்ளும் ஆளுமை தமிழரது இன்றைய தலைமையிடம் போதுமானதாய் இருக்கவில்லை.

வெளி ஆட்களின் நிகழ்ச்சி நிரலுக்குள் நாமும் எடுபட்டு போனோம்.

இதற்குள் – ஈழத் தமிழ் தேசிய இனத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கும் பெரும் பொறுப்பு தங்கள் தோள்களின் மீதே சுமத்தப்பட்டு இருப்பதாக உரிமை கோரும் வெளிநாட்டுத் தமிழர்களில் ஒரு சாரார் செய்யும் திருக்கூத்துக்கள் இன்னொரு பக்கம்.

எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல – தமிழர்களுக்கு மிஞ்சி இருக்கின்ற ஒரே தலைமையையும் உடைத்து, சிதைத்துவிடுவதை தான் இந்த “புலம் பெயர்ந்த தமிழர்” தரப்பு முழு நேரப் பணியாய் செய்கின்றது.

தாயகத்தின் நடைமுறை யதார்த்தம் என்ன என்பது பற்றிய அறிவு சற்றேனும் இல்லாமல் – மே 19, 2009-ற்கு முன்னர் போல – இப்போதும் கற்பனை உலகில் சஞ்சரித்தபடி இந்தத் தரப்பார் தமிழர்களின் தலைவிதியைத் தீர்மானிக்க முனைகின்றார்கள்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பல துண்டுகளாக உடைபட்டுள்ளதற்கு, எதிரியின் சாதுரியம் மட்டும் காரணம் அல்ல; எமது தொலைநோக்கற்ற பார்வைக் கோளாறும் தான்.

இதில் தான் நமது அரசியல் வறுமை தற்போது வெளிப்பட்டுள்ளது.

எமது தேசியம், தாயகம், தன்னாட்சி உரிமை என்பதல்லாம் – இப்போது தேர்தல் என்பதற்குள் சுருக்கி விடப்பட்டுள்ளது.

அத்துடன் – நாடாளுமன்றம் செல்வது “தமிழீழம்” அமைப்பதற்கு’ என்றவிதமான ஒரு தோற்ற மயக்கத்தையும் ஏற்படுத்தி நம்மை நாமே ஏமாற்றவும் தொடங்கி உள்ளோம்.

எம்மை நாமே உடைத்து, எமது பிரதிநிதித்துவப் பலத்தை இழந்து – தமிழர் தாயகப் பிரதேசங்களில் தமிழ் தேசியத்திற்கு எதிரானவர்கள் வெல்லுவதற்கு நாமே வழிகளை ஏற்படுத்தினால் – நமது தாயகம் எவ்வாறு காக்கப்படும்…? எமது தேசியம் எவ்வாறு நிலைநாட்டப்படும்…?

ஆயுதப் போராட்டம் தோல்வி அடைந்த பின்பு – இப்போது எமக்கு இருப்பது – நமது பலத்தை காட்ட மிஞ்சி இருப்பது – நாடாளுமன்ற அரசியல் மட்டும் தான்.

அதாவது – தேர்தல் அரசியல் மூலமாக – தமிழர் தாயக்தில் எமது பிரதிநிதித்துவ எண்ணிக்கையை அதிகரித்து – எமது பலத்தை நிரூபிப்பது மட்டும் தான்.

அதைச் செய்யாமல் நாம் பிளவுபட்டுக் கிடந்தால்- சிறிலங்கா பேரினவாதத்தினதும், வெளிச் சக்திகளினதும் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு நாம் உதவுகிறோம் என்பது தானே அர்த்தம்.

உலகெங்கும் இருந்து கடன் வாங்கி தமிழர் தாயகத்தில் கொண்டுவந்து கொட்டி அதன் முகத்தையே மாற்றிக்கொண்டிருக்கின்றான் தமிழரின் எதிரி.

அவனோ – “ஒரே மக்கள்; ஒரே நாடு” என்கிறான்.

நாடாளுமன்றப் பிரதிநிதித்துவப் பலத்திற்கான தேர்தலில் நாம் பலவீனப்படுவோமானால், என்றென்றைக்குமே தலை நிமிர முடியாதவர்களாவோம்.

தமிழ் தேசியத்தின் பெயரால் அந்த பிரதிநிதித்துவ பலம் எமக்கு கிடைக்கவில்லை என்றால் – “இரு தேசம்; ஒரு நாடு” என்பதை எம்மால் எப்படி நிரூபிக்க முடியும்…?

உள்ளிருந்து – ஒன்றாய் இருந்து – எமக்குள் சண்டை இடுவது தான் உன்னதமான வழி; நாம் உடைந்து, பிரிந்து, சிதறிப் போனால் – உன்னத காலம் எமது பகைவருக்கே.

ஆயுதப் போராட்டம் தோல்வி அடைந்த பின்பு வருகின்ற முதலாவது நாடாளுமன்றத் தேர்தல் என்ற வகையில் – இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்த தேர்தலை ஒன்றுபட்டு நின்று வென்று – புலிகள் விட்டு்ச் சென்ற தலைமைத்துவ வெற்றிடத்தை இட்டு நிரப்பும் ஆற்றலும், “இரு தேசம்” பேசக் கூடிய அருகதையும் தம்மிடம் இருக்கின்றது என்பதை தமிழர்களின் தலைவர்கள் நிரூபித்திருக்க வேண்டும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் இன்றைய தலைமையின் கைகளும், சிந்தனையும் கலப்படம் அற்றவை என்று நிரூபிக்க எம்மிடம் எந்த ஆதாரங்களும் இல்லை.

அதே போல – தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்கள் மாசடைந்தவர்கள் என்பதை நிரூபிக்கவும் எம்மிடம் எதுவும் இல்லை.

ஏதோ, தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வெட்டிப் புடுங்குவார்கள் என்று நாம் வாதிட வரவில்லை.

இன்று நாம் செய்ய வேண்டிய ஒரே கடமை – எமது அசைவற்ற பலத்தை சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நிரூபிக்க வேண்டும்.

அதற்குப் பிறகு தான் மிகுதி எல்லாம்.

எனவே –

இதைப் படிக்கின்ற எவருக்காவது – எமது இனத்திற்காக ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்ற ஆதங்கம் இருந்தால் – தாயகத்தில் இருக்கும் உங்கள் உறவுகளையும், நண்பர்களையும் அழைத்து – தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களிக்குமாறு தயவு செய்து வேண்டுங்கள்.

ஏனெனில் – எமக்கு இப்போது கடைசியாக மிஞ்சி இருக்கும் ஒரே வழி தமிழ் தேசிய கூட்டமைப்பைப் பலப்படுத்துவது தான்.

இந்த கடைசி வழியையும் நாம் தவற விடுவோமானால் – வரலாறு மீண்டும் எம்மை தண்டிக்கும், மே 19-ஐ விடவும் கடுமையாக.

அதன் பின்பு –

“தமிழர்கள் அனைவரும் தெருக்களில் திரிக!

மீண்டும் ஒரு தரம், ஆதிமனிதனை நெஞ்சில் நினைத்திட –

நிர்வாணம் கொண்டு தமிழர்கள் அனைவரும் …’ *

புதினப்பார்வை, ஏப்ரல் 4, 2010

* கவிதை: நன்றி – சேரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *