“மே 19”
உலகின் எல்லா தேசிய இனங்களின் மீதும் வரலாறு ஆழமான வடுக்களைப் பதித்துவிட்டுத் தான் செல்கின்றது.
ஈழத் தமிழ் சமூகத்தின் மீது மே 19, 2009 அன்று வரலாறு இழைத்ததை, வெறுமனே ஒரு வடு அல்லது ஒரு காயம் என்று மட்டும் சொல்லிவிட்டு, தாண்டிச் சென்றுவிட முடியாது.
அது ஒரு தண்டனை; அது ஒரு பாடம்.
இனிமேல் எந்தக் காலத்திலும் எந்த ஒரு சமூகமும் – எந்த ஒரு தேசிய இனமும் தன்முனைப்புடன் எழுந்துவிடக் கூடாது என்ற ஒரே நோக்குடன் – வழங்கப்பட்ட ஒரு எச்சரிக்கை அது.
அவ்வாறு தன்னெழுச்சி கொண்டதற்கான தண்டனையைத் தமிழ் தேசிய இனத்திற்கு வழங்கியதன் மூலம் – உலகெங்கும் உள்ள ஏனைய தேசிய இனப் போராட்டங்களுக்கு வழங்கப்பட்ட ஒரு கூட்டுப் பாடம்.
அண்ணளவாக 45,000 மனித உயிர்கள் பலி எடுக்கப்படுகையில் – வெறும் அறிக்கைகளோடு இந்த உலகம் வாழாது இருந்ததற்கும் அதுவும் ஒரு காரணம்.
தமிழ் இனத்திற்கு இத்தகைய கொடிய தண்டனை வழங்கப்பட்டமைக்கான ஒரே காரணம் – நமது அரசியல் சுதந்திரத்தினையும் தன்னாட்சி அதிகாரத்தினையும் உறுதிப்படுத்துவதற்காக நாம் போராடியதும், அந்தப் போராட்டத்தைத் தலைமையேற்று முன்னெடுத்த ஒரு விடுதலை இயக்கத்திற்குப் பின்னால் அணிதிரண்டதும் தான்.
கடந்த அறுபது ஆண்டு காலத்தில் – சிறிலங்கா அரச இயந்திரத்தினதும், அதன் இராணுவ அடக்குமுறையினதும் பின்புலமாக – ஒட்டுமொத்தமான சிங்கள இனத்தினது மேலாதிக்க மனோபாவம் இருந்துவந்தது.
சிங்களத் தேசிய இனத்தின் பேரினவாதச் சித்தாந்தமே – தமிழ் தேசிய இனத்தின் மீதான அரச பயங்கரவாத அடக்குமுறையின் இயங்கு மையம்.
அந்தச் சித்தாந்தம் ஒரு வன்முறை வடிவத்தை எடுத்த பின்னணியில் தான், ஒரு தற்காப்பு வழிமுறையாகத் தான், தமிழர்களது ஆயுதப் போராட்டம் தனது வரலாற்றுப் பிறப்பை எடுத்தது.
இந்த வரலாற்றுப் பின்னணியைத் தெரிந்திருந்தும் கூட – அனைத்துலக சமுதாயம், தமக்கிடையே இருந்த முரண்பாடுகளைக் கூட ஓரத்தில் வைத்துவிட்டு, வெளிப்படையாகவே சிறிலங்கா நிகழ்த்திய இனக்கொலைக்கு முண்டுகொடுத்தது.
அதே வேளை – ஐக்கிய நாடுகள் நிறுவனம் கூட உரிய முறையில் செயற்படாமல் பாராமுகம் காட்டியது. “Responsibility to Protect” என்பது வெறுமனே ஏட்டில் எழுதி வைப்பதற்கான ஒரு பொறுப்பு என்று மட்டுமே ஆகிப் போனது.
நடத்தப்பட்ட ஒர் இனவழிப்பை – அது ஒரு நாட்டின் இறைமைக்கு உட்பட்ட உள் விவகாரம் என்றவிதமாக ஒதுக்கி – கொலைகளில் இருந்து மனித உயிர்களைக் காக்க வேண்டிய தமது பொறுப்பிலிருந்து இந்த உலகம் விலகிக்கொண்டது.
பலவீனங்கள் இருந்த போதும், தவறுகள் இழைத்த போதும் – ஒரு மனித சமூகத்தின் விடுதலைக்காக, அந்த சமூகத்தின் அடிப்படையான வாழ்வு உரிமைகளுக்காகப் போராடிய ஒரு சுதந்திரப் போராட்ட இயக்கத்தினைத் தண்டித்து அழிக்கத் துணை போனதன் மூலம் – உலகின் ஆதிக்க சக்திகள் அனைத்துமே, தமக்குள் இருந்த மேலாண்மைக் கூட்டு மனோபாவத்தினை 45,000 மனித உயிர்களின் புதைகுழிகளின் மீது பிரகடனம் செய்தன.
இந்த நிலையில் இந்த “மே 19”ஆம் நாளினை வெறுமனே ஈழத் தமிழரின் ஒரு துக்க நாளாகவோ, அல்லது இந்த உலகத்திற்கு எமது துயரத்தை வெளிக்காட்டும் ஒரு சோக நாளாகவோ மட்டும் கைக்கொள்வது போதுமானதாக அமையாது என புதினப்பலகை கருதுகின்றது.
ஒளிச் சுடர்கள் ஏற்றி, கறுப்புச்சட்டை அணிந்து, மெளன ஊர்வலங்கள் போய், உணவைத் துறந்து – எங்கள் துக்கத்தைப் பகிர்ந்துவிட்டுக் கலைந்து சென்றுவிடாமல், அந்த நாளுக்கு ஒர் ஆழமான அரசியல் அர்த்தத்தை, ஒரு புதிய அனைத்துலகப் பரிமாணத்தை நாம் வழங்க வேண்டும்.
ஆதலால் – வெறும் சம்பிரதாயபூர்வ நிகழ்வுகளுக்கு ஒரு படி மேலே சென்று – எமது தேசிய விடுதலைப் போராட்டத்தினை விரிவுபட்ட முறையில் முன்நகர்த்தும் நோக்கோடு – உலகின் வேறு மூலைகளில் அடக்குமுறைக்கு உள்ளாகி விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருக்கும் ஏனைய தேசிய இனங்களுக்கும் ஆதரவளிக்கும் ஒரு நாளாக, அவர்களோடு தோழமை பூணுவதற்கான ஒரு நாளாக, ஒடுக்கப்படுவோர் எல்லோருக்குமான ஒரு நாளாக – “மே 19”-ஐ தமிழர்கள் பிரகடனம் செய்வதே பொருத்தமானதாக இருக்கும் என புதினப்பலகை நம்புகின்றது.
தமது அரசியல்-பொருளாதார-பாதுகாப்பு நலன்களை மட்டுமே முன்னிறுத்தி, சுயநலத்தின் அடிப்படையில் மட்டுமே இயங்கும் உலக வல்லரசுகளோடு வளைந்து நெழிந்து செல்ல வேண்டிய தேவைகள் எமக்கு இருப்பினும் கூட –
வல்லாதிக்க சக்திகளின் வாசலில் மண்டியிட்டு – பலவீனமாகி – அரசியற் பிச்சைக்காகக் காத்திருப்பதை விடவும், வலிமையற்றுக் கிடக்கும் ஏனைய இனங்களோடு கைகோர்த்து – பலம் பெற்று – எமது உரிமைகளுக்காக நிமிர்வதே சிறந்த வழி என புதினப்பலகைகருதுகின்றது.
ஈழத் தமிழனத்தின் மீதும் அதன் தேசிய விடுதலைப் போராட்டத்தின் மீதும் முள்ளிவாய்க்காலில் “மே 19” அன்று நிகழ்த்தப்பட்ட கொடூரம் போன்ற ஒரு துயரம் – நீதிக்காகவும், சமத்துவத்திற்காகவும், சுதந்திரத்திற்காகவும், தன்னாட்சி அதிகாரத்திற்காகவும் போராடுகின்ற வேறு எந்த ஒரு தேசிய இனத்திற்கும் இனிமேல் நிகழக்கூடாது என்பதை உலகின் மனச்சாட்சிக்கு உணர்த்தும் நாளாக “மே 19”பிரகடனப்படுத்தப்பட வேண்டும்.
உலகின் அடக்கப்படும் தேசிய இனங்கள், வல்லாதிக்க சக்திகளுக்குத் தமது அதிருப்தியை அர்த்தபூர்வமாக வெளிப்படுத்தும் ஒரு நாளாக “மே 19” பிரகடனப்படுத்தப்பட வேண்டும்.
புதினப்பலகை அதனை இங்கு முன்மொழிந்து பரிந்துரை செய்கின்றது.
“மே 19”-ற்குப் பின்னாலே வரும் நாட்கள் கூட – அதே அரசியல் பரிமாணங்களோடு – ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் அங்கீகாரத்தை ஏற்கெனவே பெற்றிருப்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டியது.
மே 25ஆம் நாள் முதல் யூன் 1ஆம் நாள் வரை உள்ள காலத்தினை “தன்னாட்சி அதிகாரத்தினைக் கொண்டிராத பிராந்தியங்களின் மக்களுக்கு தோழமை ஆதரவு வழங்கும் வாரமாக” [ Week of Solidarity with the Peoples of Non-Self-Governing Territories ] ஐக்கிய நாடுகள் நிறுவனம் ஏற்கெனவே பிரகடனப்படுத்தியுள்ளது.
ஐ.நா. சாசனம், தனது பதினோராம் அத்தியாயத்தின் 73ஆவது பிரிவில் – தன்னாட்சி அதிகாரத்தினைக் கொண்டிராத பிராந்தியங்கள் தொடர்பிலான தனது கடப்பாட்டினைப் பிரகடனப்படுத்தியுள்ளது. [ Charter of the United Nations, CHAPTER XI: DECLARATION REGARDING NON-SELF-GOVERNING TERRITORIES, Article 73 ]
அதன் உப பிரிவின் முதலிரண்டு பகுதிகள் பின்வருமாறு கூறுகின்றன.
அ). அப் பிராந்தியத்தில் வாழுகின்ற மக்களின் பண்பாட்டுப் பாரம்பரியத்திற்கு உரிய மதிப்பு அளிக்கப்படுவதோடு, அவர்களின் அரசியல், பொருளியல், சமூக மற்றும் கல்வி சார் மேம்பாட்டினை உறுதிப்படுத்தி, அவர்கள் நீதியாக நடத்தப்படுவதையும், ஊறுபடுத்தப்படலில் இருந்து பாதுகாக்கப்படுவதையும் உறுதிப்படுத்துதல்.
[ to ensure, with due respect for the culture of the peoples concerned, their political, economic, social, and educational advancement, their just treatment, and their protection against abuses; ]
ஆ). அம் மக்களின் அரசியல் அபிலாசைகளினைக் கருத்தில் எடுத்து, அம் மக்களின் நிலம் மற்றும் முன்னேற்ற நிலைகளுக்குப் பொருத்தமாக – தமக்கான தன்னாட்சிக் கட்டமைப்பினை உருவாக்கத் தேவையான அரசியல் நிறுவனங்களினை அவர்கள் உருவாக்குவதற்கு ஆதரவழித்து வழிசெய்தல்.
[ to develop self-government, to take due account of the political aspirations of the peoples, and to assist them in the progressive development of their free political institutions, according to the particular circumstances of each territory and its peoples and their varying stages of advancement; ]
ஐ.நா.வின் இந்த பிரகடனமும், அதனோடு இணைந்த ஏனைய பிரகடனங்களும் – தன்னாட்சி அதிகாரம் கோரிப் போராடும் உலகத் தேசிய இனங்களுக்கு மிகவும் இன்றியமையாத விடயங்களாகும்.
இதன் அடிப்படையில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள வாரமும், “மே 19”-ற்குப் பின்னால் இயல்பாக இணைந்து வருகின்ற காரணத்தினால், “மே 19”ஆம் நாளை –
“ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் நாள்”
“The Day of The Oppressed Nations”
– என தமிழ் தேசிய இனம் பிரகடனப்படுத்த வேண்டும் என புதினப்பலகை பரிந்துரை செய்கின்றது.
இவ்வாறாக – அடக்குமுறைக்கு உள்ளாகியுள்ள ஏனைய தேசிய இனங்களுடன் கூட்டுச் சேருவதே – அந்த மக்களின் போராட்டத்தோடு இணைத்து எமது போராட்டத்தையும் முன்னெடுப்பதே – அவர்களது ஆதரவையும் எமது போராட்டத்திற்குப் பலமாகக் கட்டி எழுப்புவதே – எதிர்காலத்திற்கு உகந்த ஒர் அணுகுமுறையாகவும், தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தினைப் புதிய செல்நெறி ஊடாக முன்னெடுக்கும் ஓர் செயற்பாடாகவும் அமையும்.
உலகத் தமிழ் சமூக ஆர்வலர்களும், அரசியற் செயற்பாட்டாளர்களும், நிறுவனங்களும், அமைப்புகளும் தனது இந்தப் பரிந்துரையைக் கவனத்திற் கொண்டு முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என புதினப்பலகை வேண்டுகின்றது.