புயலில் ஒரு தோணி..
தமிழ்கூறு நல்லுலகெங்கும் புயல் வீசி சுழன்றடித்துக் கொண்டிருந்த வேளையில்தான் ‘புதினப்பலகை’ எனும் இச்சிறு தோணி 17-11-2009ல் தனது பயணத்தை தொடங்கியது.
அது புயல் என்பதைவிடவும் சூறைக்காற்று, ஆழிப்பேரலை என்றாலும் மிகையில்லை.
அதில், எழுபதுகளில் கிளர்ந்தெழுந்த ஈழவிடுதலைக்கான இளைஞர் எழுச்சி விடுதலைப் புலிகள் என்னும் ஒற்றை மையமாய் குவிந்து, உச்சமாகி, படிப்படியாக கீழிறங்காமல் நொருங்கி வீழ்ந்திருந்தது.
தமிழ்கூறு நல்லுலகம் அறிந்திராத வதையின் கதையாக முள்ளிவாய்க்காலில் மூச்சடங்கி போனோரின் புதைகுழிகளினுள் ஒன்றாய் ஈழப்போராட்டத்தின் இரண்டாம் கட்டம் புதையுண்டு போயிருந்தது.
ஆயுத வலிமை மட்டுமே வெல்லும் என்னும் கோட்பாட்டின் மேல் கட்டி எழுப்பட்ட போராட்ட கட்டமைப்புகள் அனைத்தும் சிதைந்து சின்னாபின்னமாகி இருந்தன.
தமிழ்கூறு நல்லுலகின் ஒரு அங்கமான ஈழத்தமிழர் முழந்தாழில் இருத்தப்பட்டனர். முள்வேலிக்குள் அடைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், வரலாற்றில் எல்லாம் முடிந்து விட்டதென துவண்டிருந்தோரும், எதுவும் முடிந்துவிடவில்லை என துணிந்திருந்தோரும் எனவாய் பிளவுபட்டிருந்தது தமிழ்கூறு நல்லுலகம்.
எதுவும் முடிந்துவிடவில்லை என்றோரில் பெரும்பாலானோர் வரலாற்றின் சக்கரத்தை பின்நகர்த்திச் செல்வதில் பிற்போக்கு அடிப்படைவாதிகளாய் இருந்தனர்.
அத்துடன் ஊடக வன்முறையுடன் துரோகி பட்டமளிப்பு, வசைபாடல், சேறுவாரியடித்தல் என ‘ஐந்தாம்கட்ட ஈழப்போரை’ அவர்கள் அநாகரிகமாக முன்னெடுத்திருந்தனர்.
இந்தச் சூழமைவில்தான், கைவிரல்களுக்குள் மடித்து எண்ணக்கூடிய ஒரு சிலர் – நாங்கள் – கூட்டிணைந்து ஒரு குழுமமாய் அந்தப் புயலிடை ஏறவும் படகினை வலிக்கவும் துணிந்தனர்.
அவர்கள் ‘புதினப்பலகை குழும’த்தினராக அறி – தெளி – துணியென வரலாற்றில் சக்கரத்தை முன்னோக்கி நகர்த்த எத்தனித்தனர்.
பாரதப் போரில் துரியோதன, துச்சாதன படைகளால் சூழப்பட்ட அபிமன்யுபோல பிற்போக்கு அடிப்படைவாதிகளின் ஊடக வன்முறை வெறியாட்டத்தினை எதிர்கொண்டு ‘புதினப்பலகை’ தனித்து போராட வேண்டியிருந்தது. போராடிக்கொண்டும் இருக்கின்றது.
போராட்டம் தொடரும் நிலையில் தற்போது ஓராண்டைக் கடந்திருக்கின்றது புதினப்பலகை.
இந்த ஓராண்டை திரும்பிப்பார்க்கையில் போதாமை தெரிகின்றது என்பது உண்மைதான்.
ஆனால் புதினப்பலகை சமூத்திற்கு நாட்டு நடப்பை அறியவைப்பதிலும் அதனை தெளியவைப்பதிலும் அதற்காக துணிந்து நிற்பதிலும் கணிசமான அளவில் பங்காற்றி இருப்பது என்பதும் மெல்லிய ஒளிச்சுவடாக படிந்து கிடக்கின்றது.
இலங்கைத்தீவில் மே 19 2010க்கு பின்னான ஈழத்தமிழர் வாழ்வியலை உள்ளது உள்ளபடி வெளிப்படுத்துவதில் முனைந்தமை,
இலங்கைத் தீவின் அரசியலில் ஈழத்தமிழர் பங்கேற்பதற்கான தேர்தல் அசைவியக்கத்தில் ஒரு நிலைப்பாட்டை வெளிப்படுத்தியமை,
இலங்கைத்தீவுக்கான நிதியுதவி, முதலீடு, கட்டுமானம், போன்றதான பொருளாதார நடவடிக்கைசார் தகவல்களை திரட்டி தருவதற்கு முன்னுரிமை கொடுத்தமை,
இலங்கைத்தீவின் அமைவிடம் இந்து மாக்கடல் பகுதியென்பதால் அதன் சூழமைவு பற்றிய அறிதலை வழங்குவதில் அக்கறை செலுத்தியமை,
இலங்கைத்தீவுடன் எவரெவர் எவ்வகையான அக்கறையை வெளிப்படுத்துகின்றனர் என்பதையும் அது ஈழத்தமிழர்களின் அரசியல் இருப்புடன் எவ்வாறு தொடர்பு படுகின்றது என்பதில் கவனத்தை குவித்தமை.
அனைத்துலக சமூகத்தினர் எம்சமூகத்தை – ஈழத்தமிழரை, அவர்தம் அரசியலை – எவ்வாறு நோக்குகின்றனர் கருத்துக்களை வெளிப்படுத்துகின்றனர் என்பதை ஊடகர்களின் வழியான எழுத்துக்களை தமிழ்ப்படுத்தி தருவதில் முன்னுரிமை வழங்கியமை,
வழிமூலமற்ற செய்திகளை வெளியிடாமல் தவிர்த்தமை,
…. என்பனவாய் அடுக்கிச் செல்ல முடியும். ஆனால் இவை சொற்பமே.
போதுமான வளங்களற்ற நிலையிலும், நம்பியிருந்தோர் கைவிட்டு ஒதுங்கிச் சென்ற நிலையிலும் இந்தளவுக்காயினும் செயலாற்ற முடிந்தது ஓரளவுக்கு திருப்தி தருகின்றது.
புதினப்பலகை தொடங்கிய காலத்தில் சமூகத்தில் நிலவிய குழப்பங்கள், அடாவடித்தனங்கள், வசைபாடல்கள், திருகுதாளங்கள்.. என்பன தற்போது வலுவிழந்து செல்கின்ற போதும் வேறு வகை குழப்பங்கள் தொடரத்தான் செய்கின்றன.
அதிலும் எதிர்பார்ப்புடன் முன்வைக்கப்பட்ட கோட்பாடுகள், முன்மொழிவுகள் செயல்வடிவம் பெறாமல் திரிபுற்று போவதும்,
இன்னமும் தலைமைப் பண்பு கொண்ட ஆளுமைகளை அடையாளம் காணமுடியாது இருப்பதும்,
வீழ்ந்து கிடக்கும் சமூகத்திற்கு நம்பிக்கை தரும் வகையான ஓர் அரசியல் நிகழ்ச்சி நிரலினை வகுக்க முடியாதிருப்பதும்,
எல்லாவற்றுக்கும் மேலாக வாழ்வில் நிமிர முடியாமல் கைநீட்டும் மக்களுக்கு ‘ஊன்றுகோல்’ வழங்குவதே முன்னுரிமை என்பதை உணராதிருப்பதும்,
உணர்ச்சிப் பெருக்கான உரைகளுக்கும் உளறல்களுக்கும் மயங்கிக் கிடப்பதும்,
புலம்பெயர் சமூகத்தின் ஒரு தீராத பலவீனமாகவே தொடர்ந்திடுமோ என்றே அஞ்ச வேண்டி உள்ளது.
இவற்றை களைய முற்படுவோரை பலப்படுத்தவும், அவர்களுடன் பணியாற்றவும் புதினப்பலகை தயாராகவே இருக்கின்றது.
பலமுனை இடர்கள் தாண்டி இரண்டாம் ஆண்டுப் பயணத்தை புதினப்பலகை நம்பிக்கையுடன் தொடர்கின்றது என்பதை மகிழ்வுடனும் பெருமையுடனும் அறிவித்துக்கொள்கிறோம்.
எமது பயணத்தின் போதான சுமைகளினைத் தாங்க தோள் கொடுத்த, கொடுத்துக்கொண்டிருக்கும், பங்காளர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள், நோக்கர்கள் அனைவருக்கும் எமது வாழ்த்துகள்.
உங்களின் தோளணைவுடன் அறி – தெளி – துணியென தமிழ்ச் சமூகத்திற்கான ஊடகப்பணிகளை மேலும் அறந்தவறாது தொடர்வோம்.
எப்புயலினயும் கடக்கும் தோணியாவோம்..
– புதினப்பலகை குழுமத்தினர்
17-11-2010.
* ‘புயலில் ஒரு தோணி’ தமிழின் முக்கிய நாவல்களில் ஒன்றாக கருதப்படும் ப.சிங்காரத்தின் நாவல் தலைப்பு இங்கு நன்றியுடன் எடுத்தாளப்பட்டுள்ளது.