மிக் போர் விமான கொள்வனவு மோசடி- விமானப்படை அதிகாரிகளிடம் புதிய விசாரணை
15 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பில் 8 மிக் போர் விமானங்களை சர்ச்சைக்குரிய வகையில் கொள்முதல் செய்து, அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியது தொடர்பாக குறித்து, சிறிலங்கா விமானப்படையின் தொழில்நுட்ப மற்றும் கொள்முதல் குழுவிடம் மீண்டும் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளது.
சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் வாக்குமூலங்களை மீண்டும் பதிவு செய்யவுள்ளதாக, குற்றப் புலனாய்வுத் துறை நேற்று கொழும்பு கோட்டை நீதிவான் பாசன் அமரசேனவிடம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, தொடர்புடைய வாக்குமூலங்களைப் பெற்று, 2027 ஜனவரி 6 ஆம் நாள் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிவான், குற்றப் புலனாய்வு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
சிங்கப்பூரைச் சேர்ந்த இரண்டு சந்தேக நபர்களுக்காக முன்னிலையான அரச அதிபர் சட்டவாளர் மைத்ரி குணரத்ன, கொள்முதல் மூல ஆவணத்தைத் தொலைத்ததாகக் கூறப்படும் மூத்த விமானப்படை அதிகாரி சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்களின் பேரில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கு காலாவதியாகி விட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த வழக்கு தொடர்பாகக் கைது செய்யப்பட்டுப் பிணையில் விடுவிக்கப்பட்ட, ரஷ்யாவிற்கான முன்னாள் சிறிலங்கா தூதுவர் உதயங்க வீரதுங்க, பகிரங்க நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.
அவர் வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்களை ஏற்பாடு செய்வதாகவும், நாட்டிற்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தருவதாகவும், இதற்கு முன்னர் நீதிமன்ற அனுமதியுடன் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்துள்ளதாகவும் அவரது சட்டவாளர் வாதிட்டதைத் தொடர்ந்து, அடுத்த விசாரணை வரை தற்காலிகமாக வெளிநாடு செல்ல அவருக்கு வழங்கப்பட்ட கோரிக்கையை நீதிவான் அனுமதித்தார்.
சந்தேக நபராகப் பெயரிடப்பட்ட உக்ரேனிய நாட்டவர் ஒருவர் நாட்டை விட்டுத் தப்பிச் சென்று விட்டதாக காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது.
அறிவுறுத்தல்களைப் பெறுவதற்காக சட்டமா அதிபரை நான்கு முறை சந்தித்ததாகக் கூறி, குற்றப் புலனாய்வுத் துறை மேலும் ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்தது.
எதிர்காலத்தில் சந்தேக நபர்களுக்கு எதிராகக் குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக, டிஎஸ் அலையன்ஸ் மற்றும் பெல்லிமிஸ்ஸா ஹோல்டிங்ஸ் நிறுவனங்களின் இயக்குநர்களாகப் பணியாற்றும் இரண்டு சந்தேக நபர்களுக்கு இன்டர்போல் நீல அறிவிப்புகள் (Blue Notices) வெளியிடப்பட்டுள்ளன.
பரஸ்பர உதவிச் சட்டத்தின் கீழ் சிறிலங்கா அரசாங்கம் விடுத்த சர்வதேசக் கோரிக்கைகளின் மூலம், உண்மையில் 7 மில்லியன் அமெரிக்க டொலருக்கு வாங்கப்பட்ட எட்டு மிக் போர் விமானங்கள், 14 மில்லியன் அமெரிக்க டொலர் என்ற அதிக தொகைக்கு வாங்கப்பட்டதாகத் தவறாக அறிவிக்கப்பட்டிருந்ததை வெளிப்படுத்தியுள்ளன.
உக்ரேனிய நிறுவனமான உக்ரின்மாஷுடன் ஒப்பந்தம் செய்து கொள்வதாகக் கூறி, டிஎஸ் அலையன்ஸ் நிறுவனத்திடம் விமானங்களை வாங்கியதன் மூலம் இந்த மோசடியைச் செய்துள்ளது என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
