முடிவுக்கு வருகிறது அவசரகால நிலை – சிறிலங்கா அரசாங்கம் அறிவிப்பு
அவசரகால நிலை இந்த மாதத்திற்கு மேல் நீடிக்கப்படாது என சிறிலங்கா அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நொவம்பர் மாதம் டிட்வா புயல் பேரிடரை அடுத்து, சிறிலங்கா அதிபரால் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது.
இதன் பின்னர், ஒவ்வொரு மாதமும் அவசரநிலையை நீடிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டு, நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் பெறப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிந்திய ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, நிலைமை சீரடைந்துள்ளதால், இந்த மாத இறுதியில் அவசரகால விதிமுறைகளை காலாவதியாக அனுமதிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
