ஜனக பெரேரா கொலை – ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவரின் மேன்முறையீடு நிராகரிப்பு
அனுராதபுரவில், 2008-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் மேஜர் ஜெனரல் ஜனக பெரேரா, அவரது மனைவி மற்றும் பலர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஒருவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
தண்டனை மற்றும் ஆயுள் தண்டனையை ரத்து செய்யக் கோரி, உமர் ஹடாப் என்ற பிரதிவாதி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதியரசர்கள் ஷிரான் குணரத்ன மற்றும் மேனகா விஜேசுந்தர ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுவைத் தள்ளுபடி செய்து, நேற்று உத்தரவிட்டுள்ளது.
அனுராதபுரவில் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் பணியகத் திறப்பு விழாவின் போது, 2008 ஒக்டோபர் 6-ஆம் நாள் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுடுத் தாக்குதலில், சிறிலங்கா இராணுவத்தின் நட்சத்திர நிலைத் தளபதியாக இருந்து, ஓய்வுபெற்ற பின்னர் வடமேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு அதிக விரும்புவாக்குகளுடன் தெரிவாகி, எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்றிக் கொண்டிருந்த மேஜர் ஜெனரல் ஜனக பெரேரா, அவரது மனைவி மற்றும் பலர் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதல் தொடர்பாக சட்டமா அதிபர் பல சந்தேக நபர்கள் மீது குற்றம்சாட்டியிருந்தார்.
அவர்களில் ஹடாப் குற்றவாளி எனக் கண்டறிந்த அனுராதபுர மேல் நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.
பின்னர், மேல்முறையீட்டு நீதிமன்றம் இந்தத் தண்டனையை உறுதி செய்த நிலையில், பிரதிவாதி உச்சநீதிமன்றத்தில் நிவாரணம் கோரியிருந்தார்.
மேல் நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகளை உறுதி செய்து, உயர்நீதிமன்றம் அந்த மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்துள்ளது.
