ஏப்ரலில் 9 எரிபொருள் கப்பல்கள் வரும்- கட்டுப்பாடுகள் விரைவில் நீங்கும்
ஏப்ரல் மாதத்தில் ஒன்பது எரிபொருள் கப்பல்கள் சிறிலங்காவுக்கு வரவிருப்பதாக, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய கிழக்கு போர் வெடித்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட எரிசக்தி நெருக்கடியை அரசாங்கம் வெற்றிகரமாக கையாண்டுள்ளது.
பற்றாக்குறையின் உச்சக்கட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தற்காலிக கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் விரைவில் படிப்படியாக நீக்கப்படலாம்.
எரிபொருள் தேவையைக் குறைப்பதற்காக பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருந்த புதன்கிழமை, விரைவில் ஒரு வழக்கமான வேலை நாளாக மீண்டும் கொண்டு வரப்படும்.
விநியோக நிலைமைகள் மேலும் முன்னேற்றமடைந்தவுடன், கியூஆர் குறியீட்டு முறை மற்றும் ஒற்றை-இரட்டை எரிபொருள் விநியோக முறை ஆகியவை நீக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, சிறிலங்காவுக்கு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வழங்க சீன அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாக சிறிலங்கா பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இந்த எரிபொருள் விநியோகம் தொடர்பான ஏற்பாடுகளை இறுதி செய்வதற்காக இன்று சிறப்பு கலந்துரையாடல் ஒன்று நடைபெற உள்ளதாகவும் இதன்போது, வழங்கப்படும் எரிபொருளின் வகை மற்றும் எரிபொருள் கப்பல் வருகைத் நாள் ஆகியவை குறித்து இறுதி உடன்பாடு எட்டப்படும் என்றும், பெட்ரோலிய கூட்டுத்தாபன அதிகாரிகள் தெரிவித்தனர்.
