வெள்ளிக்கிழமைக்குள் சொத்து விபரங்களை சமர்ப்பிக்க மகிந்தவுக்கு உத்தரவு
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் சொத்துகள் மற்றும் கடன்கள் குறித்த அறிக்கைகளை ஏப்ரல் 10ஆம் நாளுக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.
மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் மீது இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் தொடங்கப்பட்ட ஒரு விசாரணை தொடர்பாகவே, இந்த விபரங்களை வழங்குமாறு, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆணைக்குழு அறிவித்துள்ளது..
விசாரணைகள் நீண்ட காலமாக தாமதப்படுத்தப்பட்டு வருவதாகவும், எனவே, ஏப்ரல் 10-ஆம் நாளுக்கு முன்னர் தேவையான தகவல்களை வழங்க வேண்டும் என்றும் அவருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
ஊழல் ஒழிப்புச் சட்டத்தின் கீழ் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க இந்த அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பிட்ட காலத்திற்குள் சொத்து விவரங்களைச் சமர்ப்பிக்கத் தவறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மகிந்த ராஜபக்சவுக்கு இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
