மேலும்

பொறுப்புக்கூறலை விரைவுபடுத்த சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்

கடந்த காலக் கொடிய மீறல்கள் தொடர்பான சிறிலங்கா அரசாங்கத்தின் வழக்கு விசாரணையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது, இது எதிர்கால முன்னேற்றம் குறித்து கவலைகளை எழுப்புகிறது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகளும், மனித உரிமைகள் பேரவையில் உள்ள ஐ.நா. உறுப்பு நாடுகளும், முக்கியத்துவம் வாய்ந்த உரிமை வழக்குகளைக் கையாள்வதில் அதிக உறுதியைக் காட்டுமாறும், அனைத்துலக பொறுப்புக்கூறல் முயற்சிகளுக்கு ஒத்துழைக்குமாறும் சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“‘Not Genuine with Justice’: Sri Lanka’s Lack of Will to Prosecute Past Abuses,” என்ற தலைப்பிலான வெளியிடப்பட்டுள்ள 49 பக்க அறிக்கை, 2024-ல் அனுரகுமார திசாநாயக்க அரசாங்கம் பதவியேற்றதிலிருந்து ஓரளவு முன்னேற்றம் கண்டுள்ள, கொடிய மீறல்கள் தொடர்பான ஏழு முக்கிய வழக்குகளில் மேற்கொள்ளப்பட்ட உள்நாட்டு நீதி முயற்சிகள் குறித்த ஒரு மேலோட்டத்தை வழங்குகிறது.

உதவிப் பணியாளர்கள் படுகொலை, ஊடகவியலாளர்கள் குறிவைக்கப்படுதல், கல்வியாளர்கள் மற்றும் பிறர் வலுக்கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்படுதல் உள்ளிட்ட பல முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் முடங்கிக் கிடக்கின்றன என்றும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும் மனித உரிமைப் பாதுகாவலர்களும் அச்சுறுத்தல்களையும் மிரட்டல்களையும் எதிர்கொள்கின்றனர் என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கண்டறிந்துள்ளது.

“கொடிய துஷ்பிரயோகங்களுக்கு நீதியை தாமதப்படுத்துதல் மற்றும் மறுத்தல் என்ற கடந்தகால அரசாங்க நடைமுறையிலிருந்து அனுரகுமார திசாநாயக்க நிர்வாகம் விடுபட வேண்டும்,” என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் பணிப்பாளரான லூசி மெக்கர்னன் தெரிவித்துள்ளார்.

“கடந்தகால குற்றங்களுக்குப் பொறுப்பேற்பதற்கான நம்பகமான நடவடிக்கைகளை எடுக்கவும், பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் மனித உரிமைப் பாதுகாவலர்களுக்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வரவும் சிறிலங்கா அரசாங்கத்தை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை வலியுறுத்த வேண்டும்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமைகள் கண்காணிப்பகம் துஷ்பிரயோகங்களால் பாதிக்கப்பட்ட 32 பேரையும், காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்களையும், சட்டவாளர்கள் மற்றும் பிற மனித உரிமைப் பாதுகாவலர்களையும் செவ்வி கண்டதுடன், நீதிமன்ற ஆவணங்கள் மற்றும் பிற ஆதாரங்களையும் விரிவாக ஆய்வு செய்தது.

1987-1989-ல் சிறிலங்காவின் தெற்கில் நடந்த மார்க்சியக் கிளர்ச்சியின் போதும், அரசாங்கத்திற்கும் பிரிவினைவாத விடுதலைப் புலிகளுக்கும் இடையே 2009-ல் முடிவடைந்த உள்நாட்டுப் போரின் போதும், அரசாங்கப் படைகள் மற்றும் அரசு சாரா ஆயுதக் குழுக்களால் பல்லாயிரக்கணக்கான மக்கள் சித்திரவதை செய்யப்பட்டனர், வலுக்கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்பட்டனர், கடத்தப்பட்டனர் மற்றும் கொல்லப்பட்டனர்.

கடந்தகால துஷ்பிரயோகங்களுக்கு நீதியைப் பெறுவதில் தோல்வியுற்ற முயற்சிகளின் நீண்ட வரலாற்றை சிறிலங்கா கொண்டுள்ளது.

1990-களிலிருந்து அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க 10-க்கும் மேற்பட்ட ஆணைக்குழுக்களை நியமித்துள்ளன, ஆனால் அவற்றில் எதுவும் வழக்குத் தொடர வழிவகுக்கவில்லை அல்லது காணாமல் போன ஆயிரக்கணக்கான மக்களுக்கு என்ன ஆனது என்பதை வெளிப்படுத்தவில்லை.

பல்வேறு அரசாங்கங்கள் வழக்குகளில் மிகக் குறைந்த முன்னேற்றத்தையே அடைந்தன அல்லது நடைபெற்றுக் கொண்டிருந்த சில குற்றவியல் விசாரணைகளைத் தடுக்க தீவிரமாகத் தலையிட்டன.

“[கூட்டுப் புதைகுழிகளை] அகழ்வாராய்ச்சி செய்வது மட்டுமே நீதியை வழங்காது,” என்று யாழ்ப்பாணத்தில் காணாமல் போன ஒருவரின் குடும்ப உறுப்பினர் கூறினார். “மீறல்களுக்குப் பொறுப்பானவர்கள் பொறுப்பேற்க வைக்கப்படுவார்களா?” என அவர் கேள்வி எழுப்பினார்.

யாழ்ப்பாணத்திற்கு அருகிலுள்ள செம்மணியில் உள்ள ஒரு கூட்டுப் புதைகுழியிலிருந்து 582 பேரின் உடல்களைப் விசாரணையாளர்கள் மீட்டுள்ளனர், ஆனால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதிலோ அல்லது அவர்களுக்கு என்ன ஆனது என்பதைக் கண்டறிவதிலோ வெளிப்படையான முன்னேற்றம் எதுவும் இல்லை.

முன்னர் தடம்புரண்டிருந்த முக்கியமான விசாரணைகளில் அனுரகுமார திசாநாயக்க அரசாங்கம் சில முன்னேற்றங்களைச் செய்துள்ளது.

இவற்றில், 2009-ஆம் ஆண்டு ஊடக ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை; 2010-ஆம் ஆண்டு ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொடவின் கட்டாயக் காணாமல் போதல் ஆகியவை அடங்கும்.

மேலும், 2008 மற்றும் 2009-ஆம் ஆண்டுகளில் பணயத்தொகைக்காகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த 11 இளைஞர்களை சிறிலங்கா கடற்படைப் புலனாய்வு அதிகாரிகள் வலுக்கட்டாயமாகக் காணாமல் போகச் செய்ததும் இதில் அடங்கும்.

269 பேரைக் கொன்ற 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளுக்குப் பின்னால் இருந்ததாகக் கூறப்படும் உயர் மட்ட அரசாங்கச் சதி குறித்த விசாரணை, அதிபர் அனுரகுமார திசாநாயக்க பதவியேற்ற பின்னரே முன்னெடுக்க முடிந்தது.

பிப்ரவரி 2026-ல், தாக்குதல்களை நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு இஸ்லாமியக் குழுவுடன் கூட்டுச் சதி செய்ததாக, முன்னாள் இராணுவப் புலனாய்வு அதிகாரியான சுரேஷ் சாலேயை காவல்துறை கைது செய்தது.

ஜூன் மாதம், தாக்குதல்கள் தொடர்பான தொடர் விசாரணைகளின் காரணமாக, முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் மேலும் இரண்டு இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வதற்கு சிறிலங்கா நீதிமன்றம் தடை விதித்தது.

இந்தக் குறைந்த அளவிலான முன்னேற்றம் இருந்தபோதிலும், கொடிய மீறல்களுக்குத் தண்டனையின்றி தப்பிக்கும் நிலையை முடிவுக்குக் கொண்டுவரத் தேவையான அவசரத்துடன் அனுரகுமார திசாநாயக்க அரசாங்கம் செயல்படவில்லை என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் கண்டறிந்துள்ளது.

2006-ல் ஐந்து தமிழ் மாணவர்கள் கொல்லப்பட்டதும், பிரெஞ்சு உதவிக் குழுவான ‘ஆக்சன் கான்ட்ரே லா ஃபெய்ம்’-ஐச் சேர்ந்த, பெரும்பாலும் தமிழர்களான 17 பேர் படுகொலை செய்யப்பட்டதும் உட்பட, மூத்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மற்ற முக்கிய வழக்குகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இருபது ஆண்டுகள் கடந்தும், இந்தக் கொலைகளுக்காக யாரும் கைது செய்யப்படவில்லை; வழக்குத் தொடரப்படுவது என்பது வெகு தொலைவில் உள்ளது.

கடுமையான உரிமை மீறல்களுக்கான ஆதாரங்களைச் சேகரிப்பதற்காக ஐ.நா. மனித உரிமைகள் சபையால் நிறுவப்பட்ட சிறிலங்கா பொறுப்புக்கூறல் திட்டத்தை அனுரகுமார திசாநாயக்க அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை.

கடந்தகால மீறல்களைச் சுதந்திரமாக விசாரிப்பதற்காக வாக்குறுதியளிக்கப்பட்ட பொது வழக்குத்தொடுநர் பணியகத்தை நிறுவுவதிலும் அது தோல்வியடைந்துள்ளது.

மாறாக, அது முந்தைய அரசாங்கங்களின் முயற்சிகளான காணாமல் போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீடுகள் அலுவலகம் போன்றவற்றை ஆதரித்துள்ளது. நீதியைத் தாமதப்படுத்தும் முயற்சிகள் என்று கருதுவதால், பாதிக்கப்பட்டவர்களின் பல குடும்பங்கள் இவற்றை நிராகரித்துள்ளன.

2009-ல் உள்நாட்டுப் போர் முடிவடைந்ததில் இருந்து, ஐ.நா. நீதி மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதிலும், தொடர்ச்சியான மீறல்களை முடிவுக்குக் கொண்டு வருவதிலும் ஒரு முக்கிய பங்கை ஆற்றி வருகிறது.

ஐ.நா. பொதுச்செயலரின் 2011 ஆம் ஆண்டு நிபுணர் குழுவின் அறிக்கையும், ஐ.நா மனித உரிமைகள்  ஆணையாளர் பணியகம்  2015 ஆம் ஆண்டு சிறிலங்கா மீது நடத்திய விசாரணையும், உள்நாட்டுப் போரின் போது இரு தரப்பினராலும் நிகழ்த்தப்பட்ட விரிவான போர்க்குற்றங்களையும் பிற அத்துமீறல்களையும் ஆவணப்படுத்தியுள்ளன.

மேலும், ஐ.நா. மனித உரிமைகள் பேரவை பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் தொடர் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது.

நீதி வழங்குவதில் அனுரகுமார திசாநாயக்க அரசாங்கத்தின் முன்னேற்றத்தை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையும், மனித உரிமைகள் ஆணையாளரும் தொடர்ந்து மீளாய்வு செய்ய வேண்டும் என்றும், பல தசாப்தங்களாக நிலவிவரும் தண்டனையின்மையைக் களைவதற்கான நடவடிக்கையை வலியுறுத்த வேண்டும் என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ளது.

“கடந்தகால மோதல்களில் நிகழ்ந்த கொலைகள் மற்றும் காணாமல் போதல்களுக்கு உண்மையான பொறுப்புக்கூறலைப் பெறுவதற்கான தனது முயற்சிகளை அனுரகுமார திசாநாயக்க அரசாங்கம் துரிதப்படுத்த வேண்டும்,” என்று மெக்கெர்னன் குறிப்பிட்டுள்ளார்.

“ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரும், மனித உரிமைகள் பேரவையில் உள்ள ஐ.நா. உறுப்பு நாடுகளும் அதனை வலியுறுத்த வேண்டும்…” என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *