மேலும்

22வது திருத்தச் சட்டமூலம் தொடர்பான மனுக்களின் மீது தொடங்கியது விசாரணை

22வது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 67 மனுக்கள் மீதான பரிசீலனையை சிறிலங்கா உயர்நீதிமன்றத்தின் 5 நீதியரசர்களைக் கொண்ட அமர்வு ஆரம்பித்துள்ளது.

பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான நீதியரசர்கள் அச்சல வெங்கப்புலி, அர்ஜுன ஒபேசேகர, சம்பத் அபேகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இந்த மனுக்கள் இன்று  காலை 10.00 மணிக்கு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

இதன்போது,  பெருமளவான சட்டத்தரணிகள் மற்றும் மனுதாரர்கள் மன்றில் முன்னிலையானதால், நீதிமன்ற அறையில் நெரிசல் ஏற்பட்டது.

இதையடுத்து மூத்த சட்டவாளர் எம்.ஏ.சுமந்திரனின் கோரிக்கைக்கு அமைய, விசாரணை  விசாலமான அறைக்கு மாற்றப்பட்டது.

இந்த மனுக்கள்  உயர்நீதிமன்றத்தின் முழு நீதியரசர்களையும் கொண்ட  அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என,  மூத்த சட்டவாளர் எம். ஏ. சுமந்திரன் கோரிக்கையை விடுத்த நிலையில், மூத்த  சட்டவாளர்களான சாலிய பீரிஸ், அலி சப்ரி, ஜெப்ரி அழகரத்னம், எராஜ் சில்வா, சிறிநாத் பெரேரா, அனுர மெத்தேகொட, மைத்ரி குணரத்ன உள்ளிட்டவர்களும் இந்தக் கோரிக்கையை முன்வைத்தனர்.

சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன, நீதிபதிகள் அமர்வின் அமைப்பைத் தீர்மானிக்கும் அதிகாரம் பிரதம நீதியரசருக்கு மட்டுமே உரித்தானது என்று சுட்டிக்காட்டி அந்தக் கோரிக்கையை நிராகரிக்க வலியுறுத்தினார்.

இந்த நிலையில் இருதரப்பு வாதங்களைப் பரிசீலித்த உயர்நீதிமன்ற அமர்வு, தமது தீர்மானத்தை அறிவிப்பதற்காக விசாரணையை 15 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தது.

இதன்பின்னர், முழு உயர்நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு விடுக்கப்பட்ட மனுதாரர்களின் கோரிக்கையை நிராகரிப்பதாக  அறிவித்த பிரதம நீதியரசர், மனுக்கள் மீதான பரிசீலனை 5 நீதியரசர்கள் கொண்ட அமர்வின் முன்பாகவே தொடரும் என்றும் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *