அழியாத தடங்களின் வழியான பயணம்
அனைத்துலக பெண்கள் நாள் கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்த – இது போன்றதொரு நாளில் தான், ‘புதினப்பலகை’ நிறுவுனரும் ஆசிரியருமான கி.பி.அரவிந்தன் அவர்களை நாம் இழந்தோம்.
அவர் இல்லாத ‘புதினப்பலகை’ உலகம், ஐந்து ஆண்டுகளை ஓடிக் கடக்கவில்லை, பாய்ந்தும் கடக்கவில்லை, உருண்டோடித் தான் கடந்துள்ளது.
இணைய வெளியில் மலிந்து போய்க் கிடக்கும் தமிழ் ஊடகங்களில், ‘புதினப்பலகை’யை தனித்துவமான ஒன்றாக நிலை நிறுத்துவதில் காத்திரமான பங்கை வகித்தவர் கி.பி.அரவிந்தன் அவர்கள்.
ஊடகப் பரப்பில் தன் விருப்பு, பொது விருப்பு என்ற இருவகை நிலைப்பாடுகள் பின்பற்றப்படுகின்ற நிலையில், பொது விருப்புக்கும், பொது நலனுக்கும் மாத்திரமே முன்னுரிமை கொடுத்தவர்.
சாவோடு போராடிக் கொண்டே, ‘புதினப்பலகை’யை நடத்துவதற்காக அவர் நடத்திய போராட்டத்தை அறிந்தவர்கள் மிகச் சிலர் தான்.
இனத்தின் நலனுக்காக, உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக தானும் கடைசி மூச்சு வரை, எதையாவது. எப்படியாவது செய்ய வேண்டும் என்ற உந்துதல் அவருக்குள் இருந்தது.
அந்த உந்துதல் தான், அவருக்கு சாவுடன் போராடும் நிலையிலும், ஒரு ஊடகத்தை நடத்தும் சக்தியையும் வேகத்தையும் கொடுத்தது.
ஈழத் தமிழரின் எதிர்கால அரசியல் பயணம் பற்றி ஆழமான சிந்தனைகளையும், எதிர்பார்ப்புகளையும் கொண்டிருந்தவர் அவர்.
ஆயுதப் போராட்டத்தின் முடிவுக்குப் பின்னரான அரசியல் செல்நெறியைப் பற்றிய அதிக கவலைகளையும், கரிசனைகளையும் கொண்டிருந்தவர்.
போருக்குப் பிந்திய அரசியல் சூழல், கி.பி.அரவிந்தன் போன்ற ஆளுமைகள் பலரை இழந்தமை அல்லது அரங்கில் இருந்து நீங்கியமை தமிழ் மக்களின் துரதிஷ்டம்.
ஈழத்தமிழர் நிலை காணும் போதெல்லாம், அந்த இழப்புகளின் வலி இன்னும் வலியதாகவே தெரிகிறது.
புதினப்பலகை குழுமம்.
2020.03.08