எந்த நேரத்திலும் கைதாவார் ரவி கருணாநாயக்க
சிறிலங்காவின் முன்னாள் நிதி அமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவருமான ரவி கருணாநாயக்க எந்த நேரத்திலும் கைது செய்யப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய வங்கி பிணை முறை மோசடி விவகாரத்தில் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்டவர்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், குற்றம்சாட்டப்படும் ரவி கருணாநாயக்க மற்றும் ஏனையவர்களை நீதிமன்ற பிடியாணை பெற்று கைது செய்யுமாறு, பதில் காவல்துறை மா அதிபருக்கு சட்டமா அதிபர் அறிவுறுத்தல் வழங்கியிருந்தார்.
இதன் அடிப்படையில், நேற்று கொழும்பு பிரதம நீதிவான் ரங்க திசநாயக்கவின் முன்னிலையில் ரவி கருணாநாயக்க உள்ளிட்டவர்களுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கக் கோரும் மனு சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த மனுவை பரிசீலித்த நீதிவான், ரவி கருணாநாயக்க, அர்ஜூன மகேந்திரன், அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்ட 10 பேரைக் கைது செய்வதற்கு பிடியாணை பிறப்பித்தனர்.
இதற்கமைய ரவி கருணாநாயக்க உள்ளிட்டவர்கள், எந்த நேரத்திலும் கைது செய்யப்படுவார்கள் என்று தெரியவருகிறது.