மேலும்

சீனாவுடன் இருதரப்பு புரிந்துணர்வு உடன்பாடு- சிறிலங்கா அமைச்சரவை அனுமதி

குடியேற்ற ஒழுங்குமுறை ஒத்துழைப்பு தொடர்பாக சிறிலங்காவும் சீனாவும் இருதரப்பு புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றில்  கையெழுத்திடுவதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

சிறிலங்காவின் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கும், சீனாவின் தேசிய குடியேற்ற நிர்வாகத்திற்கும் இடையில் இந்த உடன்பாடு, கையெழுத்திடப்படும்.

வணிகம், முதலீடு, சுற்றுலா, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மற்றும் குடிமக்களின் பயணத்தை இலகுபடுத்துவது உட்பட, நுழைவிசைவுகள், குடியேற்றம் மற்றும் குடியகல்வு ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை இந்தப் புரிந்துணர்வு உடன்பாடு நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும், அதிகாரபூர்வ தகவல்கள் மற்றும் புலனாய்வுத் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கும், மனிதக் கடத்தல் மற்றும் புலம்பெயர்ந்தோர் கடத்தல் தொடர்பான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிராக நெருங்கிய ஒத்துழைப்புக்கும்  இந்த உடன்பாடு வழிவகுக்கும்.

இந்த உடன்பாடு இரு நாடுகளின் குடியேற்ற அதிகாரிகளுக்கான பயிற்சிப் பட்டறைகள் மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களையும் உள்ளடக்கியுள்ளது.

இந்த புரிந்துணர்வு உடன்பாட்டின் வரைவிற்கு வெளிவிவகார அமைச்சு மற்றும் சட்டமா அதிபரிடமிருந்து ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *