பாகிஸ்தான்-சிறிலங்கா ஆயுதப்படைகளின் ஆறாவது கலந்துரையாடல்
பாகிஸ்தான்-சிறிலங்கா ஆயுதப் படைகளின் ஆறாவது பாதுகாப்பு கலந்துரையாடல் கொழும்பில் நேற்று நிறைவடைந்துள்ளது.
சிறி ஜயவர்தனபுர கோட்டேயில் உள்ள சிறிலங்கா பாதுகாப்புத் தலைமையக வளாகத்தில் அமைந்துள்ள சிறிலங்கா கடற்படைத் தலைமையகத்தில், நடந்த இந்த கலந்துரையாடலில், இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான தங்களது உறுதிப்பாட்டை இரு நாடுகளும் மீண்டும் வலியுறுத்தியுள்ளன.
சிறிலங்கா பாதுகாப்புச் செயலாளர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தா மற்றும் பாகிஸ்தானின் பாதுகாப்புச் செயலாளர், லெப்டினன்ட் ஜெனரல் முகமட் அலி ஆகியோர் இந்த பாதுகாப்பு கலந்துரையாடலுக்கு இணைத் தலைமை தாங்கியிருந்தனர்.
இரு நாடுகளின் மூத்த இராணுவ அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்களின் அதிகாரிகள் மற்றும் ஆயுதப் படைகளின் பிரதிநிதிகளும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
இந்த கலந்துரையாடலின் போது, இரு தரப்பினரும் பாதுகாப்பு ஒத்துழைப்பை ஆய்வு செய்ததுடன், இராணுவங்களுக்கு இடையேயான ஈடுபாடு, பயிற்சி மற்றும் தொழில்முறை இராணுவக் கல்வி, கடல்சார் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, திறன் மேம்பாடு மற்றும் பிராந்தியப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.
பாதுகாப்பு கலந்துரையாடலில் தொடக்க அமர்வில் உரையாற்றிய சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த, சிறிலங்கா ஆயுதப் படைகளின் தொழில்முறைத் திறன்களை மேம்படுத்துவதில் பாகிஸ்தானின் தொடர்ச்சியான ஆதரவுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.
பரஸ்பர நன்மைக்காகவும், பிராந்திய அமைதி மற்றும் உறுதித்தன்மைக்காகவும் பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில், சிறிலங்காவின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
ஏற்கனவே உள்ள ஒத்துழைப்பை மதிப்பாய்வு செய்வதற்கும், புதிய ஒத்துழைப்புக்கான பகுதிகளைக் கண்டறிவதற்கும் இந்த வருடாந்த உரையாடல் ஒரு முக்கியமான தளத்தை வழங்குவதாகவும் அவர் கூறினார்.
பாகிஸ்தானின் பாதுகாப்புச் செயலர் லெப். ஜெனரல் முகமட் அலி, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால பாதுகாப்புப் பங்களிப்பை மேலும் வலுப்படுத்துவதில் பாகிஸ்தானின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.



