திருமாவளவனுடன் தமிழ் தேசிய பேரவையினர் சந்திப்பு
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவனை, தமிழ் தேசியப் பேரவையின் பிரதிநிதிகள் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
சென்னை கே.கே நகரில் அமைந்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமையகத்தில், நேற்று மாலை 5.00 மணியளவில், இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பில், தமிழ் மக்கள் பேரவையைச் சேர்ந்த, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொன்னுத்துரை ஐங்கரநேசன், சட்டத்தரணி கே.வி. தவராசா, செல்வராசா கஜேந்திரன், தர்மலிங்கம் சுரேஷ், சட்டத்தரணி க. சுகாஸ் மற்றும் சட்டத்தரணி ந. காண்டீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தச் சந்திப்பின்போது, சிறிலங்காவில் தமிழர்களின் அரசியல் பிரச்சினை தற்போதைய நிலைமைகள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஒற்றையாட்சி அரசியலமைப்பிற்குள் தமிழர்களின் தேசிய இனப் பிரச்சினையை உள்வாங்கும் வகையிலான எந்தவொரு அரசியலமைப்பு ஏற்பாட்டையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதையும், ஏக்கிய ராஜ்ய அரசியலமைப்பை நிறைவேற்ற எடுக்கும் முயற்சிகளைத் தடுத்து நிறுத்துவதற்கு, தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டு மக்களும், இந்திய மத்திய அரசின் ஊடாக சிறிலங்கா அரசின் மீது உரிய அரசியல் மற்றும் இராஜதந்திர அழுத்தங்களைச் செலுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்தியதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, தமிழர்களின் தேசம், இறைமை மற்றும் சுயநிர்ணய உரிமை ஆகிய அடிப்படை அரசியல் அங்கீகாரங்களை அடிப்படையாகக் கொண்ட, சமஷ்டி அடிப்படையிலான நிலையான அரசியல் தீர்வே தமிழ் மக்களின் நீண்டகால தேசிய இனப் பிரச்சினைக்கான நியாயமான தீர்வாகும் என்பதையும் எடுத்துரைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


