சீனாவிடம் 2 பில்லியன் டொலர் கடன் கேட்கும் சிறிலங்கா
சீனாவிடம் இருந்து சுமார் 2 பில்லியன் டொலர் வரை கடனைப் பெற்றுக் கொள்வது குறித்து சிறிலங்கா அரசாங்கம் பேச்சு நடத்தி வருவதாக, சிறிலங்கா மத்திய வங்கியின் மூத்த பிரதி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
“சீன அபிவிருத்தி வங்கி ஒன்றிடம் இருந்து கடனை பெற்றுக் கொள்வதற்கான பேச்சுக்களில் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. அடுத்த சில வாரங்களில் இதுகுறித்து முடிவு செய்யப்படலாம்.
இந்தக் கடன் 1 தொடக்கம் 2 பில்லியன் டொலர் வரை இருக்கக் கூடும். எந்தளவு தொகை என்பது இன்னமும் முடிவு செய்யப்படவில்லை.
இந்த ஆண்டு திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் தொகையில் ஒரு பகுதிக்காக இந்த கடன் பயன்படுத்தப்படக் கூடும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா இந்த ஆண்டு 4.8 பில்லியன் டொலர் கடனை திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது. 1 பில்லியன் டொலர் கடன் வரும் செப்ரெம்பர் மாதம் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.