கர்தினாலின் ஒற்றையாட்சி நிகழ்ச்சி நிரலுக்குள் யாழ். ஆயர் நியமனம்
முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கிய யாழ் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் தெரிவுக்கு, அந்த மறை மாவட்டத்தைச் சேர்ந்த அருட்தந்தையர்களில் ஒருவர் தெரிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
ஏனெனில், அங்கேயே பிறந்து வளர்ந்து வாழ்ந்து, அங்கேயே கல்வி கற்று, வெளிநாடுகளில் உயர்கல்வி முடித்த பின்னர் மீண்டும் தாய்மண்ணுக்கு திரும்பி, மக்களோடு மக்களாகச் சேர்ந்து, துயரங்களும் வலிகளும் நிறைந்த போர்க் காலத்தில் வாழ்ந்த ஆற்றல்மிக்க அருட்தந்தையர்கள் பலர் அங்கு உள்ளனர்.
இத்தகைய சூழலில், எந்த அடிப்படையில் புதிய ஆயராக, கொழும்பு பேராயர் இல்லத்தின் துணை பேராயர் அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் நியமிக்கப்பட்டார் என்பது வெறும் கேள்வி மாத்திரமல்ல; அது தார்மீக உரிமையுள்ள, நியாயமான கருத்து என்பதே இதன் முதன்மை வாதமாகும்.
இதன் காரண – காரியமாகவே அருட்தந்தையர்களில் 95 சதவீதமானோருக்கு இந்த நியமனத்தில் அதிருப்தி எழுந்திருக்கிறது.
ஆகவே, ”பரிசுத்த ஆவி” என்ற ஆழ்மன விசுவாசத்துக்கு மாறாகவும், யாழ் அருட்தந்தையர்களின் விருப்பத் தேர்வை புறக்கணித்தும், கொழும்பு மறைமாவட்ட துணைப் பேராயராக இருந்த அன்ரன் ரஞ்சித், புதிய ஆயராக நியமிக்கப்பட்டமை, ஒடுக்கப்பட்டு வரும் ஒரு தேசிய இனத்தின் இருப்பையே கேள்விக்கு உட்படுத்தியுள்ளது…
”விடுதலை இறையியல்” என்பது, கத்தோலிக்க திருஅவையின் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்று.
“ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும், சிறைப்பட்டோர் விடுதலை பெறுவர், ஒடுக்கப்பட்டோர் விடுதலை அடைவர் என முழக்கமிடவும் ஆண்டவர் என்னை அனுப்பியுள்ளார்” (லூக்கா 4:18)
என இயேசு கிறிஸ்து அன்று உலகிற்குப் பறைசாற்றிய விடுதலை இறையியல் கோட்பாடானது இலங்கைத்தீவில், இன்று ‘சிறிலங்கா அரசு’ என்ற கட்டமைப்புக்கு ஏற்றதாக மாற்றப்பட்டிருக்கிறதா?.
அல்லது, அந்த அரசால் 80 வருடங்களாக ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களின் நியாயமான அரசியல் – சமூக வாழ்வியல் – மரபுரிமை அடையாளங்கள், ஆகியவற்றை, சர்வதேச அரங்கில் மறுதலிப்பதற்குரிய ஒரு கோட்பாட்டுக் கருவியாக உருவகப்படுத்தப்பட்டுள்ளதா?
இந்த இரு கேள்விகளுக்கும் தற்போதைய யாழ்.ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் பதிலளிக்கக் கடமைப்பட்டிருக்கிறார்.
அன்ரன் ரஞ்சித் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். அவருடைய கல்வித் தகுதி, ஆற்றல், சமயப் பணி போன்ற பண்புகளில், யாழ்.மறைமாவட்ட அருட்தந்தையர்கள் எவருக்கும் மாற்றுக் கருத்தில்லை.
யாழ்.மறைமாவட்ட மக்களும் அதனைப் புரிந்து கொள்வர்.
ஆனால், தமிழ் மக்களின் சமூக, அரசியல் அபிலாசைகள் சார்ந்த விவகாரங்களில், ஆயர் அன்ரன் ரஞ்சித் ‘சிறிலங்கா அரசு’ என்ற கட்டமைப்பின் அரசியல் நிலைப்பாட்டிற்கு ஏற்ப செயற்பட்டு வருவதால், பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தனிப்பட்ட முறையில் இந்த நியமனத்திற்கான உத்தியை வகுத்திருக்கிறார் என்பதே இங்கு ஆழமான சர்ச்சையாகும்.
சில ஆண்டுகளாகவே இந்த உத்தி வகுக்கப்பட்டிருப்பதை அறிந்து கொண்ட அருட் தந்தையர்கள், போர்க்காலத்தில் பணியாற்றிய தகுதியுள்ள அருட்தந்தையர்களில் ஒருவரை யாழ்.ஆயராக நியமிக்க வேண்டும் என வத்திக்கான் திருத்தந்தையின் (Pope) கொழும்பில் உள்ள பிரதிநிதிக்கு கூட்டாகக் கடிதம் அனுப்பியிருந்தனர்.
ஆனால், அக்கடிதத்தில் விவரிக்கப்பட்டிருந்த ஆழமான நியாயங்களைப் பொருட்படுத்தாமல், பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக, வத்திக்கான் இந்நியமனத்தில் கவனம் செலுத்தியமை வேதனைக்குரியது.
யாழ். மறைமாவட்ட அருட்தந்தையர்கள் தார்மீகப் பொறுப்புணர்வும் தாழ்மையான வேண்டுதலும் ஏன் வத்திக்கான் நிர்வாகத்தால் நிராகரிக்கப்பட்டது என்பது நியாயமான கேள்விக்குரியதாகும்.
பரிசுத்த ஆவியானவரின் தெரிவுக்கான ஆழ்மன விசுவாசம் என்பதன் பொருள் திருவிவிலியத்தில் உண்டு; அதை கர்தினால் மல்கம் ரஞ்சித் அறியாதவர் அல்ல.
ஆனால், ஈழத்தமிழர் விவகாரத்தில் தமிழ் அருட்தந்தையர்கள், சர்வதேச மட்டத்தில் இயங்குவதை தடுப்பதே மல்கம் ரஞ்சித்தினுடைய உள்நோக்கம் என்பது கண்கூடு..
மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் மறைந்த பின்னர், வடக்கு – கிழக்கில், கத்தோலிக்கத் திருஅவை, சமயப் பணிகளோடு மாத்திரம் நின்றுவிட வேண்டும் என்பதில் ஒரு தரப்பு மிக நுட்பமாகச் செயற்பட்டு வருகிறது.
ஆயர் இராயப்பு ஜோசப் ஓய்வுபெற்ற பின்னர், 2017ஆம் ஆண்டு, அப்போது கொழும்பில் துணைப் பேராயராக இருந்த இம்மானுவேல் பெர்னாண்டோ மன்னார் மறை மாவட்டத்திற்கு ஆயராக நியமிக்கப்பட்ட போதே, திருவிவிலியத்தின் போதனைகளுக்கு மாறான அந்த காய் நகர்த்தல் உத்தி வெளிப்பட்டிருந்தது.
இப்போது, யாழ். மறை மாவட்டத்திற்கும் அவ்வாறானதொரு ஆயர் நியமனத்தின் ஊடாக, ‘சிறிலங்கா அரசு’ என்ற ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்கு உகந்த, சமயத்துக்கு அப்பாலான தனது நிகழ்ச்சி நிரலை கர்தினால் மல்கம் ரஞ்சித் நிறைவேற்றியிருக்கிறார் என்றே கருத முடியும்.
தனி ஆதிக்கம், திருஅவை நிர்வாகப் பண்பு அல்ல. ஆனால், வடக்குக் கிழக்கு கத்தோலிக்க திருஅவையும், தனது கட்டுப்பாட்டில், என்பதை மல்கம் ரஞ்சித், சிங்கள அரசியல் தலைவர்களிடம் நிரூபித்திருக்கிறார்.
ஆகவே, சிங்களக் கத்தோலிக்கர்களாக இருந்தாலும், பௌத்த சிங்களக் கலாச்சார பண்பாடுகளை ஏற்றுச் செயல்படுபவர்கள் என்ற தன்னுடைய தனிப்பட்ட அரசியல் விசுவாசத்தை நியாயப்படுத்தவும், தமிழர்களை எவ்வாறு ஒடுக்க வேண்டும் என்ற அரச கட்டமைப்பின் உத்திக்கு ஒத்துழைத்தும், மல்கம் ரஞ்சித் இயங்கி வருகிறார் என்பது புரியாத புதிர் அல்ல.
‘சிறிலங்கா தேசியம்’ என்ற கோட்பாட்டைக் கர்தினால் மல்கம் ரஞ்சித் பின்பற்றுவதில், தமிழ் அருட்தந்தையர்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை.
தமிழ்க் கத்தோலிக்க மக்களிடமும் எந்த ஒரு எதிர் கருத்தும் இல்லை.
ஆனால், சைவத் தமிழ் மரபுகள் – தமிழ் அரசியல் நிலைப்பாடுகளுக்கு மதிப்பளித்து, கத்தோலிக்கத் திருஅவையின் சமயப் பணிகளை முன்னெடுத்து நடத்துவதற்கான முழு உரிமையும், யாழ்.மறைமாவட்ட அருட்தந்தையர்களுக்கு உண்டு என்ற தார்மீகப் பொறுப்பை, கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் மனச்சாட்சி ஏற்க வேண்டும்.
அத்தோடு, தமக்குரிய ஆயரைத் ‘தகுதி’ மற்றும் ‘ஆற்றல்’ என்ற தகைமைகளின் அடிப்படையில் இயல்பாகவே பெற்றுக்கொள்ளக் கூடிய ‘பரிசுத்த ஆவி’ என்ற நெறிப்படுத்தும் கத்தோலிக்க மார்க்க ஒழுக்கம், யாழ்.மறைமாவட்ட அருட்தந்தையர்களுக்கு உண்டு என்ற புரிதல் மல்கம் ரஞ்சித்திடமும் இருந்திருக்க வேண்டும்.
போர்க்காலத்தில் அருட்தந்தையர்கள் பலர் மக்களுக்காக உயிர் தியாகம் செய்த வரலாற்றுச் சம்பவங்கள் இன்றும் உயிர்ப்புடன் நிலைத்திருப்பதும் இதற்கு ஒரு காரணமாகும்.
அத்துடன், இது கொழும்புக்கு அடுத்தபடியாகப் பெரிய இறைமக்களைக் கொண்ட மறைமாவட்டம்.
இப்பின்னணியில், இயல்பாகத் தெரிவு செய்யப்படக்கூடிய சமய மார்க்கத்திற்குரிய ”பரிசுத்த ஆவி” என்ற தூய தத்துவத்தை, திருத்தந்தையின் ‘கர்தினால்’ என்ற பதவிப் போர்வைக்குள் இருந்து கொண்டு மல்கம் ரஞ்சித் தனக்கு ஏற்றவாறு மடைமாற்றியுள்ளார்.
திருவிவிலியத்தின் பிரகாரம், இது ”பரிசுத்த ஆவி” என்ற மெய்ப் பொருளை மூடிமறைத்த பெரும் குற்றமாகும்.
ஆகவே, யாழ் மறைமாவட்ட அருட்தந்தையர்களின் தார்மீகப் பொறுப்பு, சமயத்துடன் கூடிய சமூக அரசியல் உணர்வுக்கு மதிப்பளித்து, தனக்கு வழங்கப்பட்ட ”யாழ் ஆயர்” என்ற மேன்மைப் பணியை அன்ரன் ரஞ்சித் பெருந்தன்மையோடு, அறம்சார் மனச்சாட்சியுடன் விட்டுக் கொடுக்க முன்வர வேண்டும்.
அவ்வாறான வரலாற்றுச் ‘சம்பவம்’ ஒன்றை ஆயர் அன்ரன் ரஞ்சித் அறத்தின் பாற்பட்டு செய்வாரானால், திருவிவிலிய விடுதலை இறையியல் என்ற கோட்பாட்டின் புதிய இலக்கணமாகத் திகழ்வார்.
அது, ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு தேசிய இனத்தை, மேலும் ஒடுக்க நினைக்கும் அதிகார வர்க்கத்திற்கு நல்ல படிப்பினையாகவும் அமையும்.
‘வத்திக்கான் தீர்மானம்’, ‘கர்தினாலின் பரிந்துரை’ என்பதையெல்லாம் மாற்ற இயலாது என்ற ஒரு விதி, உலகில் எங்கும் இல்லை. புதிய நியமனங்கள் திடீரென மாற்றப்பட்ட வரலாறுகள் திருஅவையில் உண்டு.
அந்த விதி எந்த இடத்தில், எப்படி, எந்த நேரத்தில், எத்தகைய சந்தர்ப்பத்தில் மாற்றப்பட வேண்டும் என்பதை, கத்தோலிக்கத் திருஅவையின் ஆழ்மன தத்துவமான ‘பரிசுத்த ஆவி’ என்ற மறைபொருள் அற்புதம் அறியும்.
“மனிதரால் இது இயலாதது, கடவுளால் எல்லாம் இயலும்” (மாற்கு 10:27)
என்ற விவிலிய வாக்கிற்கு ஏற்ப, ‘கர்தினால்’, ‘ஆயர்’ என்ற தெரிவுகளுக்கான ‘பரிசுத்த ஆவி’ என்ற மெய்ப் பொருளை அது இயல்பாகவே மக்களிடம் வெளிப்படுத்தும்; அதற்கான நியாய தர்மத்தையும் அது போதிக்கும்…
இக்கட்டுரை, பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் மற்றும் யாழ். ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆகியோரின் அறம்சார் மனச்சான்றிற்குச் சமர்ப்பணம்!
– அ.நிக்ஸன் (பத்திரிகையாளர்)
வழிமூலம் – உதயன் சஞ்சீவி (05-07-2026)


