மேலும்

மகனிடம் அழுது புலம்பிய சுரேஷ் சாலே- சாகும்வரை உண்ணாவிரதம்

குற்றப்புலனாய்வுப் பிரிவினால் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள சிறிலங்கா அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருப்பதாக பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடத்திய சிறப்பு ஊடகச் சந்திப்பில் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

தடுப்புக்காவலில் தமக்கு இழைக்கப்படும் அநாகரிகமான, சித்திரவதைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நேற்று இரவு முதல் சுரேஷ் சாலே உணவு, நீர் மற்றும் மருந்துகளை முற்றாக மறுத்து, சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

நேற்றிரவு அவருக்கு ஒரு கரண்டி சோறும் முள்ளங்கி சொதியும் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது.  அதுவும் ஒரு பழைய செய்தித்தாளில் வைத்து வழங்கப்பட்டதால், உணவு நிலத்தில் கொட்டியுள்ளது.

இதனால் மனதளவில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள அவர், தன்னை நாயை விட மோசமாக நடத்துகிறார்கள் என, இன்று காலை அவரைச் சந்தித்த மகனிடம் அழுது புலம்பியுள்ளார்.

சாலே கைது செய்யப்பட்டு 7 நாட்களின் பின்னர், ஏனைய 13 கைதிகள் முன்னிலையில் அவரது ஆடைகள் அனைத்தும் களையப்பட்டு, கைவிலங்கிடப்பட்டு, குனிந்து நிற்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டு, அவரது மலக்குடல் பகுதி ஒரு அதிகாரியால் தொட்டு சோதனையிடப்பட்டு பாலியல் மற்றும் உடல் ரீதியான கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

சாலே 6×4 அடி அளவுள்ள மிகச்சிறிய அறையில் அடைக்கப்பட்டு, 40 நாட்கள் வெறும் தரையிலேயே தூங்க வைக்கப்பட்டுள்ளார்.

அவரது முகத்திற்கு நேரே 24 மணித்தியாலங்களும் பிரகாசமான மின்விளக்கு ஒளிரவிடப்படுவதால் அவரால் தூங்க முடியாமல் அவதிப்படுவதுடன், கடுமையான புரத மற்றும் விற்றமின் குறைபாடுகளாலும் அவர் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை சிறிலங்கா இராணுவத்தினரே நடத்தினர் என்ற பொய் பிரசாரத்தை செய்ய முற்பட்டு, அதனை நிரூபிக்க முடியாத தற்போதைய அரசாங்கம், சுரேஷ் சாலேவை உயிரை மாய்க்கத் தூண்டி, அனைத்து இரகசியங்களையும் அவருடன் புதைத்து விட்டு தப்பிக்க முயற்சிக்கிறது.

சாலே  உயிர்மாய்த்துக் கொள்ளும் அபாயம் அதிகம் உள்ளதாக ஏப்ரல் 29ஆம் நாள், மருத்துவர்கள் எச்சரித்திருந்தும்,  அனுர அரசாங்கம் வேண்டுமென்றே அவரை சித்திரவதைக்கூடத்திலேயே வைத்துள்ளது என்றும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *