சொல்லிசை பாடகர் சங்கீதன் கைதுக்கு எதிராக கிளிநொச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்
சொல்லிசை பாடகர் சங்கீதன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கிளிநொச்சியில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக இன்று காலை 9.30 மணியளவில், தொடங்கிய ஆர்ப்பாட்டத்தில், பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டனர்.
விடுதலை செய் விடுதலை செய், சங்கீதனை விடுதலை செய், சட்டத்தின் ஆட்சி சமமாக இருக்கட்டும், சட்டத்தை அடக்குமுறை கருவியாகப் பயன்படுத்தாதே, பாடும் உரிமை எங்கள் உரிமை, பறிக்காதே பறிக்காதே, கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்காதே, அடக்குமுறைக்கு நிறுத்து, கலைஞர்களின் குரல்வளையை நெரிக்காதே, அநீதியான சட்டமான பயங்கரவாத தடைச்சட்டத்தை உடனே நீக்கு, போன்ற கோசங்கள் இந்தப் போராட்டத்தில் எழுப்பப்பட்டன.
கைது செய்யப்பட்ட பாடகர் சங்கீதனுக்கு நீதி கோரும், அவரை விடுவிக்கக் கோரும், சுலோக அட்டைகளையும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் ஏந்தியிருந்தனர்.
இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலைஞர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், மத தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் பொது மக்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டனர்.










