22வது திருத்தத்திற்கு எதிரான மனுக்கள் உயர்நீதிமன்றில் இன்று விசாரணை
உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கக் கோரும், அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சிறிலங்கா உயர்நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளது.
இந்த திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராகவும் ஆதரவாகவும் 30இற்கும் அதிகமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இவற்றை விசாரிப்பதற்காக, பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சுரசேன ஐந்து நீதியரசர்களைக் கொண்ட அமர்வை நியமித்துள்ளார்.
பிரதம நீதியரசர் தலைமையிலான இந்த அமர்வில், நீதியரசர்கள் அச்சல வெங்கப்புலி, அர்ஜுன ஒபயசேகர, சம்பத் அபயகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோர் இடம்பெறுவார்கள்.
இந்த திருத்தச்சட்டமூலத்தை நிறைவேற்ற பொதுவாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரி, தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் லால் விஜேநாயக்க, சிறிலங்கா சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்புக்கள் தமது மனுக்களில் கோரியுள்ளன.
அத்துடன் உயர்நீதிமன்ற நீதியரசர்களின் முழு அமர்வே இந்த மனுக்களை பரிசீலிக்க வேண்டும் எனக் கோரியிருந்த போதும், 5 நீதியரசர்களை கொண்ட அமர்வே இதனை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளது.
