கவிஞர் கி.பி. அரவிந்தன் நினைவு தமிழ் இலக்கியப் பரிசுப் போட்டி முடிவுகள்
காக்கைச் சிறகினிலே இதழ்க் குழுமம் முன்னெடுத்த கவிஞர் கிபி அரவிந்தன் நினைவு தமிழ் இலக்கியப் பரிசு 2020 – ஈழத்து நாவல் இலக்கியம் (2009 – 2019) – கடந்த 10 ஆண்டுகளில் வெளிவந்த சிறந்த ‘ஈழத் தமிழ் நாவல்கள்’ தெரிவு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக, காக்கைச் சிறகினிலே குழுமம் அனுப்பியுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,-
காக்கைச் சிறகினிலே குழுமம் முன்னெடுத்துவரும் கவிஞர் கி.பி. அரவிந்தன் அவர்களின் ஐந்தாவது ஆண்டு நினைவு தமிழ் இலக்கியப் பரிசுப் போட்டி 2020 சிறந்த ‘இலங்கைத் தமிழ் நாவல்’ தெரிவுப் போட்டியாக நடைபெற்றது. – இந்தப் போட்டியின் முடிவுகள் இத்தால் அறிக்கையிடப்படுகிறது.
தமிழினத்தின் ஆறாத்துயராக முடிந்த முள்ளிவாய்க்கால் பேரிழப்பின் இலக்கிய சாட்சியங்களாக கடந்த 10 ஆண்டுகளில் (2009-2019) வெளிவந்த புதினங்கள் “கி.பி. அரவிந்தன் ஐந்தாவது ஆண்டு நினைவுப் பரிசு” போட்டிக்கு உரியவையாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த பத்து ஆண்டுகளில் தீரமிக்க ஈழத்தமிழ் மக்கள் வல்லரசுகளின் புவிசார் அரசியல் சூழ்ச்சிகளால் கொடூரமாக, வஞ்சனையாக அடித்து வீழ்த்தப்பட்டதை எதிர்கால தலைமுறையினர் அறியும் வண்ணம் புதினங்களாக எழுதப்பட்ட படைப்புகளை அங்கீகரிக்கும் முகமாகவும் இந்தப் போட்டி அமையப் பெற்றது.
பரிசு பெறும் மிகச் சிறந்த புதினமாக குணா கவியழகன் எழுதிய “அப்பால் ஒரு நிலம்” – தமிழினி 2016 – 25000 இந்திய ரூபாய் பணப் பரிசு பெறுகிறது. இந்த நாவல் இந்தப் பத்து ஆண்டுகளில் வெளிவந்த ஈழத் தமிழ்ப் புதினங்களில் மிகச் சிறந்த நாவலென காக்கை இதழ்க் குழுமம் பெருமையுடன் அறிவிக்கிறது.
இதற்குரிய பரிசுத் தொகை எழுத்தாளருக்கு 20000 இந்திய ருபாய் எனவும் பதிப்பத்திற்கு 5000 இந்திய ரூபாய் எனவும் பகிர்ந்து அளிக்கப்படும்.
கடந்த 10 ஆண்டுகளில் வெளிவந்த சிறந்த ஈழப் புதினங்கள் பின்வருமாறு அறிக்கையிடப்படுகிறது.
இவற்றுக்கு சான்றிதழ் மற்றும் காக்கைச் சிறகினிலே ஓராண்டுச் சந்தா வழங்கப்படும்.
சயந்தன் எழுதிய “ஆதிரை”. தமிழினி, 2015.
தமிழ்க் கவி எழுதிய “ஊழிக்காலம்”. தமிழினி, 2014.
தமிழ்நதி எழுதிய “பார்த்தீனியம்”. நற்றிணை, 2016.
ஷோபா சக்தி எழுதிய “பாக்ஸ் – கதைப் புத்தகம்”. கருப்புப் பிரதிகள், 2015.
தேவகாந்தன் எழுதிய “கனவுச்சிறை”. காலச்சுவடு, 2014.
சய்யத் ஷர்மிளா எழுதிய “உம்மத்”. காலச்சுவடு, 2012.
படைப்பாளிகள் – வெளியீட்டாளர்கள் அனைவரையும் பாராட்டிப் பெருமை கொள்கிறது காக்கை இதழ்க் குழுமம்.
ஈழ மண் சுமக்கும் பெரும் அனுபவங்களை தமது படைப்புகளால் பதிவு செய்யும் படைப்பாளிகளையும் – இத்தகைய படைப்புகளை வெளியிடும் வெளியீட்டார்களையும் – இவர்களை ஊக்கமளிக்கும் வாசகர்களையும் – சமூகக் கரிசனையாளர்களையும் – விமர்சகர்களையும் நன்றியுடன் நினைவில் கொள்கிறது காக்கை இதழ்க் குழுமம்.” என்று அதில் கூறப்பட்டுள்ளது.