மேலும்

பொங்கல்’ – நம் சிந்தனைக்கான சில குறிப்புகள்…

Pongalதைப்பொங்கல் – தமிழர் திருநாள் – புலம்பெயர் தமிழர் திருநாள்

தைப்பொங்கல் :  தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர் நம்பிக்கை. பழையன கழித்தலும் புதியன புகுத்தலும் அந்த நாளில் தமிழரது வாழ்வியல் நடைமுறை.
இவை நம் தாயகங்களான தமிழ்நாட்டிலும், ஈழத்திலும் வாழ்வியல் பண்பாடாக – இயல்பாக – மக்களால் – பொங்கல் திருநாளாக கொண்டாடப்படுகின்றது. ஆண்டுதோறும் பல பொங்கல்கள் – கோவில்களில், வயல்களில் – செய்ய வேண்டி இருப்பதால் அதனை வேறுபடுத்தும் வகையிலும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலும் ‘தைப்பொங்கல்’ என்றே மக்கள் அழைத்தனர்.

தமிழர் திருநாள் :  மலேசியாவுக்கு புலம்பெயர்க்கப்பட்ட தமிழர்கள் இத் தைப்பொங்கல் கொண்டாட்டத்தை ‘தமிழர் திருநாளாக’ அடையாளப்படுத்தி கொண்டாடத் தொடங்கினர். 1950-களில் சிங்கப்பூரில் இருந்து வெளியான ‘தமிழ்முரசு’ நாளிதழின் ஆசிரியராக இருந்த தமிழ்வேள் கோ.சாரங்கபாணி ‘தமிழர் திருநாள்’ கொண்டாட்டத்திற்கு அடித்தளமிட்டு வளர்த்தெடுத்தார். ‘தமிழ்முரசு’ நாளிதழின் ‘தமிழர் திருநாள்’ நிகழ்ச்சிகள் ஆண்டுதோறும் பொங்கல் திருநாளின்போது சிங்கப்பூர், மலாயா நகரங்களில் முக்கிய விழாவாக உருவெடுத்தது. ஆனால் இத்தமிழர் திருநாள் ‘தமிழ்மொழித் திறன்’ வளர்ச்சியையே மையம் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

புலம்பெயர் தமிழர் திருநாள் : ‘தைப்பொங்கல்: தமிழர்க்கு ஒரு நாள் – தமிழால் அடையாளம் கொள்ளும் தனித்துவ நாள்’ – என்ற விருதுவாக்கியத்துடன் பிரான்சில் முதலாவது பெரு அரங்க நிகழ்வாகியது தமிழர் திருநாள்-2007. இதனை பிரான்ஸ் வாழ் சமூக ஆர்வலர்களின் ஆதரவுடனும் நெறிப்படுத்தலுடனும் ‘சிலம்பு’ அமைப்பு பல்தேசிய தமிழ் அமைப்புகளின் கூட்டிணைவுடன் முன்னெடுத்தது. புலம்பெயர்க்கப்பட்ட மலேசிய தமிழர்களிடம் இருந்து இரவல் பெறப்பட்ட ‘தமிழர் திருநாள்’ 2008ம் ஆண்டிலும் இரண்டாவது நிகழ்வாக அதே முறைமையில் தொடர்ந்தது. ஆனால் 2009ம் ஆண்டில் தமிழர் திருநாள் சமூக ஆர்வலர்களினதும் தமிழ் அறிஞர்களினதும் ஆலோசனைகள் ஏற்கப்பட்டு ‘புலம்பெயர் தமிழர் திருநாள்’ என அறிவிக்கப்பட்டது. தற்போது ஏழாவது ‘புலம்பெயர் தமிழர் திருநாள்’- 2013, சிலம்பு அமைப்பினால் பாரிசில் முன்னெடுக்கப்பட உள்ளது.

*********

‘புலம்பெயர் தமிழர் திருநாள்’ என்பது மலேசிய தமிழர் திருநாள் போல் ‘தமிழ்மொழித்திறன்’ மட்டும் சார்ந்ததல்ல. ‘பண்பாட்டு அடையாள பேணுகை’ தொடர்பானது.

மானிட வாழ்வுக்கு ஆதாரமாகிய இயற்கைக்கு நன்றி சொல்லும் தமிழரது உயர் பண்பாட்டின் வெளிப்பாடுதான் இந்த ‘புலம்பெயர் தமிழர் திருநாள்’.

பல்-தேசியத் தமிழர்கள் கூடிவாழும் ஐரோப்பா, வட அமெரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற பிராந்தியங்களில், அவர்கள் தமக்குள் இணைந்து கொள்வதற்கும், தமது பலத்தைப் பெருக்கிக் கொள்வதற்கும் ‘புலம்பெயர் தமிழர் திருநாள்’ மிகப் பொருத்தமானதாகும்.

அத்துடன் – வேற்றுப் பண்பாட்டு, வேற்று மொழிப் புறச் சூழலில் வளரும் தமிழரின் இளம் தலைமுறைக்கு – அவர்களது வேர்தேடும் பயணத்திற்கான – ‘பண்பாட்டு அடையாள பேணுகை’ – தொடக்க நாளென்றும் இதனைக் கொள்ளலாம்.

மதம், வர்க்கம், நிலம், நாடு என்ற பிரிவுகளாகக் கிடக்கும் தமிழ்ச் சமூகம் ‘ஒருத்துவம்’ கொள்வதற்கும், தமது தேசியத்தை வலுப்படுத்துவதற்கும் ‘புலம்பெயர் தமிழர் திருநாள்’ போல் வேறொரு பொருத்தமான நாளில்லை.

நமது எதிர்கால இருப்பு என்பது – தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்துவதிலும் ‘தமிழர்’ என ‘ஒருத்துவம்’ கொள்வதிலுமே தங்கியுள்ளது.

ஆகவே, அது தமிழரது தேசியத்தின் குறியீடான நாள். ஏனெனில் ‘புலம்பெயர் தமிழரது திருநாள்’ என்பதற்கு அப்பால் அது வேறு எந்த அடையாளங்களும் அற்றது. குறிப்பாக கட்சி, கட்டமைப்பு, அரசியல் நிலைப்பாடுகள், வருவாய் தேடல்கள் என்பவற்றிற்கு அப்பாலானது.

மக்களின் மகிழ்வு கொண்டாட்டத்திற்கும், அறிவியல்சார் பண்பாட்டு அடையாளத் தேடலுக்குமான நாள் இத்திருநாள்.

இந்தத் திருநாளுக்கு முன்னதாவே – முதல் நாளே – பழையவற்றைத் தீயிடம் தின்னக் கொடுப்பதும் தைப்பொங்கலின் ஒரு வழமை.

அதேபோல் மக்களுக்கு இழைத்த தவறுகளையும், ‘தோற்றப்போலி’களாக வலம் வந்து சொல்லும் பொய்மை வாக்குறுதிகளையும், அரைவேக்காட்டு செயற்பாடுகளையும் உணர்ந்து களைந்துவிட்டு, புதிய நம்பிக்கையோடும், புதிய சிந்தனையோடும், திறந்த மனதுடனும் கொண்டாடப்பட வேண்டியதும் இந்நாளில் முக்கிய அடையாளமாகும்.

இந்நிலையிலேயே ‘புலம்பெயர் தமிழர் திருநாள்’ என்னும் நன்நாளில் நாம் ‘பண்பாட்டு அடையாள பேணுகை’ தொடர்பாக சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம்.

*********

நமது வீட்டின் வரவேற்பறை:

புலம்பெயர்ந்து பல நாடுகளில் வாழும் நாம் பல்தேசியத்தாருடன் பழகவும், நட்புகொள்ளவும், வாழ்வியலை பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்பினை பெற்றுள்ளோம். அவர்களிடம் நம் பெருமை பற்றி அதாவது தமிழர் பெருமை பற்றி பேசவும் நாம் தவறுவதில்லை.

ஆனால் நாம் வாழும் வீட்டினுள்ளே தமிழர் பெருமைகளை எந்தளவு பேணி வருகிறோம்?. சாமி அறைதான் உள்ளதே என்கிறீர்களா? அது நாம் வீட்டிற்கு அழைக்கும் வேறு தேசியத்தார் கண்ணில் படாதே !

அவர்கள் வந்தமரும் நமது வீட்டின் வரவேற்பறையில் நாம் புலம்பெயர்ந்து வாழும் நாட்டினரே பொறாமைப்படும் அளவுக்கு மின்னணு பொருட்களால் நிறைத்து வைத்துள்ளோமே தவிர தமிழர் பெருமை காட்டும் என்ன அடையாளங்களை கொண்டிருக்கிறோம்?

நம் அடுத்த தலைமுறைக்கு சோறும், கத்தரிக்காய் குழம்பும், வடையும், கொத்துரொட்டியும் சாப்பிடப் பழக்குவதுதான் தமிழர் பெருமை காட்டும் அடையாளங்களா?

அல்லது, தங்கத்தில் மோகம் கொண்டு உடலில் அடுக்குவதும், உடலியல் மாற்றத்தை பூப்புனித நீராட்டு விழா என தம்பட்டம் அடிப்பதும், குப்பைத்தண்ணீர் வார்த்தல் என்னும் குளியலறைக்காட்சியை காணொலியாக்கி [Video] மற்றவர் பார்வைக்கு விடுவதும், பிறந்தநாள் விழாக்களை கோலாகலப்படுத்துவதும்தான் நம் பண்பாட்டு அடையாளங்களா?

நமது பெருமை சொல்லும் இலக்கியங்கள், நமது தமிழ் மொழித் திறன் இயம்பும் அகராதிகள், நம் சமூக முகம் மற்றும் வாழ்வியல் காட்டும் ஓவியங்கள், நம் கைநுட்பம் கொண்ட கலைப் பொருட்கள், சிற்பங்கள் எதையாவது நமது வரவேற்பறைகள் கொண்டிலங்குகின்றனவா ?

இதனை நம் சிந்தனைக்கு எடுத்துக் கொள்ளலாமா ?

வரலாற்றை பேணும் உணர்வு:

நாம் நமது வரலாறு மற்றும் தொன்மை பற்றி, ‘மண்தோன்றா காலத்தே தோன்றிய மூத்தகுடி’ பற்றிய நமது பழமை பற்றி பேசுவதில் விண்ணர்கள். ஆனால் பொய்யாகவோ, புனைவாகவோ ஆவணப்படுத்தப்பட்ட வரலாறு சிங்கள மொழிபேசும் மக்களிடம் உள்ளதுபோல் நம்மிடம் இல்லை என்றே சொல்லலாம்.

பொதுவாகவே தமிழர்களிடம் வரலாற்றை பேணும் உணர்வு, ஆவணப்படுத்தலில் உள்ள அக்கறை என்பன அறவே இல்லை என்றே சுட்டிக்காட்டப்படுவதுண்டு. அதனை ‘வரலாற்று மறதி’ என்றுகூட சொல்லலாம்.

உதாரணத்திற்கு பெளத்த மதம் தமிழரிடையேயும் பரவியிருந்தது என்னும் வரலாறு நம் நினைவில் உண்டா?

தற்போது நாம் அரசியல் காரணமாக புலம்பெயர்ந்து ஏறத்தாழ நாற்பதாண்டுகள் ஆகிவிட்டன. இந்நிலையில் நாம் புலம்பெயர்ந்த வலிமிகு கதைகள், வரும் வழியில் எதிர்கொண்ட விபத்துகள் மற்றும் மரணங்கள் தொடர்பான பதிவுகள் ஆவணங்கள் எவையேனும் நம்மிடம் உண்டா ?

அதேவேளையில் நமது குடும்பம், நமது ஊர், நம்குடும்ப மூதாதையர், தொப்புள்கொடி உறவுகள் பற்றிய அறிவு நம் மூளைகளின் ஓரத்தில் இருக்கலாம். ஆனால் நம் அடுத்த தலைமுறைகளிடம் எப்படி கையளிப்பது?

நமக்கு அடுத்து தொடர்ந்துவரும் தலைமுறையினர் தம் ‘வேர்தேடும்’ அவசியத்திற்கு உள்ளாகும் போது அவர்கள் வழிதெரியாமல் திண்டாடுவார்கள்.

அவர்களிற்கு வழிகாட்டியாக ஒவ்வொரு குடும்பத்தினரும் ‘குடும்ப ஆவண நூல்’ ஒன்றினை தயாரித்து பேண வேண்டியது அவசியமாகின்றது. நாம் புலம்பெயர்ந்து வாழும் நாட்டினர் இவ்வகை முறைமையினை கடைப்பிடிக்கின்றனர் என்பதையும் கவனத்தில் கொள்ளலாம்.

ஒவ்வொருவரும் எழுதும் –  பேணும் –  நுண்வரலாறே ஒரு பொது வரலாற்றை எழுத –  தெரிய வழிவகுக்கின்றது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

இதனை நம் சிந்தனைக்கு எடுத்துக் கொள்ளலாமா ?

பெயர் என்பதும் அடையாளம் சார்ந்தது:

தமிழ்த்தேசியம் பற்றி உரத்துப் பேசும் நாம் நம் குழந்தைகளுக்கு பெயரிடுதலில் தமிழ்த்தேசியத்தை கடைப்பிடிக்கின்றோமா என்னும் கேள்வி எழுவதையும் தவிர்க்க முடியவில்லை. ஏனெனில் பெயர் என்பதும் அடையாளம் சார்ந்தது. பண்பாட்டு தொடர்ச்சி சார்ந்தது.

உச்சரிக்க கூடிய, ஐந்து எழுத்துகளுக்கு உட்பட்ட உள்ளர்த்தம் கொண்ட ஏராளமான பெயர்கள் நமது வளமான தமிழில் உண்டு.

இதனையும் நம் சிந்தனைக்கு எடுத்துக் கொள்ளலாமா ?

அகத்தில் – வீட்டில், உள்ளத்தில் – மாற்றம் நிகழ்த்தாமல் தமிழ், தமிழர், தமிழ்த்தேசியம் பற்றி பேசுவதும் எழுதுவதும் வெறும் வாய்ச்சொற்களாகவே அமைந்துவிடும்.

இவற்றை சிந்தனைக்கு எடுக்காத நடைமுறையில் கைக்கொள்ளாத தமிழ்த் தேசியர்கள் என்போர் வெறும் தோற்றப் போலிகளே.

ஒன்றாய் கூடி நாம் சிந்திப்போம் – செயலாற்றுவோம்.

அனைவர்க்கும் எமது பொங்கல் – ‘புலம்பெயர் தமிழர் திருநாள்’ வாழ்த்துகள்.

புதினப்பார்வை,

‘புலம்பெயர் தமிழர் திருநாள்’ – 2013 [ஜனவரி 14, 2013]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *