மேலும்

மேலைதேய சனநாயக பண்புகளும் சிறீலங்காவின் தற்காப்பு உத்திகளும் – 02

????????????????????????????????????????????????????????????????????????????????????????????????ஒருஅரசின் கட்டமைப்பு குறித்த முக்கியத்துவத்தையும் அதன் தேவையையும் இன்னொரு அரசினால் தெளிவாக உணர்ந்து கொள்ளமுடியும். ஏனெனில் கட்டுக்குலைந்து பிரிவினைக்கு தோல்விகண்ட அரசு இன்னொரு அரசைப்பாதிக்கும் தொற்று நோயாகவே பார்க்கப்படுகிறது. ஆகவே இந்த அரச இயந்திரங்கள் ஒன்றையொன்று பாதுகாத்து கொள்கின்றன.

‘புதினப்பலகை’க்காக *லோகன் பரமசாமி.

தமிழ் மக்கள் ஒரு அணியில் நின்று செயற்படுகிறார்களோ இல்லையோ சிறீலங்கா அரசாங்கம் தமிழ் தேசியம் சார்பான அமைப்புக்களையும் தமிழர்களின் முன்னைய ஆயுதப்போராட்டத்தையும் தொடர்புபடுத்தி காட்டுவதில் மிக மும்முரமாக இருக்கிறது.

உலக நாடுகளின் சட்ட நியதிகளுக்கு உட்பட்டு இடம் பெறும் எந்த நிகழ்வையும் பயங்கரவாதமாக உருமாற்றி காட்டுவதில் மிகக்கவனமாக செயற்பட்டு வருகிறது.

பொதுவாக மேலைத்தேய அரசியல் தத்துவவாளர்கள் எந்த ஒரு அரசுக்கும் தொடர்ச்சியாக அதன் இருப்புக்கு அச்சுறுத்தல் இருந்து வருவதாகவே கருதுகின்றனர். பொதுவாக ஒரு அரசுக்கு தனது அரசியல் எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிiயில் தனது ஆட்சி உரிமையை நிலைநிறுத்தவும் நடைமுறைப்படுத்தவும் வேண்டிய தேவை எப்பொழுதும் உள்ளது. இல்லையேல் அரசுகளின் பிராந்தியங்கள் குறுகி தோல்வியில் முடிவடையும் கட்டம் எழலாம்.

விடுதலைப்புலிகள் தமிழ்ப்பகுதிகள் சிலவற்றை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த போது இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு பகுதியில் சிறீலங்கா அரசு தோல்வியுற்ற அரசாக காணப்பட்டது என்பதை இங்கே குறிப்பிடுவது நல்லது.

‘அரசு’ State என்ற நிர்வாக இயந்திரமயப்படுத்தப்பட்ட நிறுவனத்திற்கு மேலை நாடுகள் மட்டுமல்லாது உலகின் எல்லா நாடுகளும் பெருமதிப்பு கொடுக்கின்றன. இது தத்தமது அரசியல் எல்லைகளை தக்க வைத்து கொள்வதற்கு பெருவசதியாக உள்ளது. ஆகவே ‘அரசு’ அரசியல் கட்டமைப்பில் மிகப்பிரதானமான பங்கு வகிக்கிறது.

ஒருஅரசின் கட்டமைப்பு குறித்த முக்கியத்துவத்தையும் அதன் தேவையையும் இன்னொரு அரசினால் தெளிவாக உணர்ந்து கொள்ளமுடியும். ஏனெனில் கட்டுக்குலைந்து பிரிவினைக்கு தோல்விகண்ட அரசு இன்னொரு அரசைப்பாதிக்கும் தொற்று நோயாகவே பார்க்கப்படுகிறது. ஆகவே இந்த அரச இயந்திரங்கள் ஒன்றையொன்று பாதுகாத்து கொள்கின்றன.

இந்த இயந்திரமயப்படுத்தப்பட்ட நிறுவனமே ஈழத்தமிழர்களிடம் இல்லாத ஒன்றாகும்.

தமிழர்களின் தேசிய சுயநிர்ணயம் குறித்து பல்வேறு நாடுகளும் கவனத்தில் எடுத்து கொள்ளாதிருப்பதற்கான காரணமும் தொற்று நோய் சிந்தனைப்போக்கின் தன்மையே ஆகும்.

இந்த நிறுவன நிலையை ஈழத்தமிழர்கள் அனைத்துலக அளவில் எட்ட இயலாதவாறு தவிர்க்க முயற்சிப்பதுதான் சிறீலங்கா அரசின் அடிப்படை தற்காப்பு உத்தியாகும்.

இன்று புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களை பல்வேறு அமைப்புகளின் அல்லது குழுக்களின் பக்தர்களாக காட்ட முனைவது கூட, அரசு என்ற ஒருமைப்படுத்தப்பட்ட கட்டமைப்பு தமிழர்கள் மத்தியில் எழுந்து விடக்கூடாது என்பதை கவனத்தில் கொண்டேயாகும்.

சிறீலங்கா அதிகாரிகள் தமது நிலையை சரி என காட்டுவதற்கு பல்வேறு வகையான விவாத முகங்களை அனைத்துலக நாடுகளின் அதிகாரிகளின் முன் வைக்கின்றனர். கொழும்பிலிருந்து வெளிவரும் ஊடகங்களும், இதர சிறீலங்கா சார்பு இணையத்தளங்களும் இதனை நன்கு உணர்த்தி நிற்கின்றன.

அனைத்துலக நாடுகள் தமிழர்களை பிரிவினையை உருவாக்குபவர்களாக பார்க்க வைப்பதன் மூலம் தனது நிகழ்ச்சித்திட்டங்களை நிறைவேற்ற பார்க்கிறது. ஆனால் சிறீலங்கா அரசின் நிகழ்ச்சித்திட்டங்களுக்கு எதிராக இருப்பது தமிழர்களின் ‘தேசியம்’ (Nation) என்பதாகும்

பௌத்த சிங்கள பெரும்பான்மை வாதத்தை அடிப்படையாக கொண்ட சிறீலங்கா அரசு ஈழத்தமிழர்களுக்கு எதிராக பல்வேறு தற்காப்பு முனைப்புகளை கொண்டிருந்தாலும் தமது பலவீனங்கள் குறித்த விவாதங்கள் அரச நிகழ்ச்சித் திட்டங்களுடாக செயற்படுத்தப்படும் இனக்கட்டமைப்பு மீதான திட்டமிட்ட நடவடிக்கைகள் ஆனவை தமிழர்களின் ‘தேசியம்’ குறித்த உறுதித்தன்மை மீது சிறிலங்கா அரசு கொண்டுள்ள பயத்தை எடுத்துகாட்டுவதாக உள்ளது.

விழிப்புணர்வு கொண்ட மனிதக்குழுமம் ஒன்று தனக்கே உரித்தான பொது கலாச்சாரத்தை பகிர்ந்து கொள்வதாகவும் தெளிவாக வரையறுக்கப்பட்ட எல்லைகளை கொண்ட பிரதேசத்தை உள்ளடக்கிய வகையில் பொதுவான வரலாறு உடையதாகவும் பொது எதிர்காலத்தை நோக்கிய திட்டமிடல்களுடன் தம்மை தாமே ஆழும் உரிமை கேட்டு நிற்குமிடத்தில் அதனை ஒரு ‘தேசியமாக’ ஏற்று கொள்ளலாம் என்பது மேலைத்தேச அரசியல் தத்துவாளர்கள் கொண்டுள்ள கருத்தாகும்

இந்தவகையில் சிறீலங்கா அரசுக்கு பாதகமான முக்கிய ஐந்து விடயங்களை தமிழ் சமுதாயம் கொண்டுள்ளது. ஒரு சமூகத்திற்காண மனோபலம், கலாச்சாரம், ஒரு பிராந்தியம், அரசியல், வரலாறு ஆகிய ஐந்து விடயங்களும் தமிழ் மக்கள் கைகளில் இருக்கக்கூடிய பலமான அடையாளங்;களாகும்.

இவை ஐந்தையும் ஊடறுத்து உடைப்பதையே ஆயுதப்போருக்கு பிந்திய போராக சிங்கள பௌத்தம் கொண்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட ஐந்து அடையாளங்களாலும் கலாச்சார பாரம்பரீயம், மொழி, சமயம், வாழ்வு முறை, பொது வரலாற்று நினைவுகள், கடந்த கால அனுபவங்கள், தம்மை ஒரு இனமாக எடுத்து காட்ட ஏதுவாக உள்ள பிராந்தியம், இவற்றில் ஒன்று இரண்டு வேறுபட்டாலும் தம்மவர் என்று கூறக்கூடிய வகையிலான ஒருவகை சமூக ஒற்றுமை ஆகியன ‘தேசியம்’ என்பதை வலியுறுத்துவதாக உள்ளது.

ஆகவே தேசியம் என்ற பதம் சிறீலங்கா அரசைப்பொறுத்த வரையில் நன்மை பயப்பதாக இல்லை. பதிலாக இனங்களின் அடையாளங்களையும் வரலாற்றையும் கிளற வேண்டியநிலையை சிறீலங்கா அரசு பெருமளவு விரும்பவில்லை.

‘அரசு’ என்ற வகையிலும் ‘தேசியம்’ என்ற வகையிலும் தமிழர்களை கைக்குள் கொண்டு வருவது அரச தற்காப்பு உத்திகளுக்கு எவ்வளவு முக்கியமாக அமைந்துள்ளது என்பதை பார்த்த நிலையில் ‘தேசிய அரசு’  [nation-state] என்ற நவீன அரசியல் நிறுவனம் மேலைத்தேய சனநாயக பண்புகளில் ஒன்றாகும்.

சிங்கள பௌத்தத்தின் பாதுகாப்பிற்கு இப்பதம் எவ்வாறு பயன்படுகிறது என்பது முக்கியமானதாகும். குறிப்பிட்ட ஒர் எல்லையை வரையறுத்து ஆளும் உரிமை கொண்டுள்ள அரசு ஒன்று தனது ஏகபோக உரிமையை அல்லது தனித்துவமான உரிமையை நிலை நாட்டவும் பலப்பிரயோகங்களைப் பயன்படுத்தவும் ‘தேசிய அரசு’ என்ற பதம் உதவுகிறது.

தனது உரிமை கோரும் பிராந்தியத்தினுள் வாழும் மக்கள் கூட்டங்கள் எல்லாவற்றையும் ஒரு இயல்பு கொண்டவர்களாக காண்பிப்பதற்கும் இந்த தேசிய அரசு உதவுகிறது.

ஆட்சிக்குள் உட்படுத்தும் நோக்குடன் புதிய பண்பாட்டை உருவாக்குவதும் பொது சின்னங்கள் புதிய பெறுமானங்களை கொண்ட சீரமைக்கப்பட்ட கலாச்சாரத்தை உருவாக்கவும், இந்த கலாச்சாரத்திற்கான புனைகதைகளை தேவைக்கேற்ற வகையில் தயாரிக்கவும் உரிய உரிமையை இந்த தேசிய அரசு கொண்டுள்ளது.

மேற்கூறிய விடயங்கள்யாவும் சிங்கள் ஏகாதிபத்தியத்தின் மீது கொண்ட காழ்ப்புணர்வு காரணமாக கூறப்படுவது போல் தென்பட்டாலும் பொதுவாக தேசிய அரசுகள் யாவும் ஒரே பண்பை உடையன என்பதை இங்கே கவனத்தில் கொள்வது நல்லதாகும். இதர தேசிய அரசகளுடன் சிறீலங்கா அரசு தனது கொள்கைகளை வெற்றிகரமாக எடுத்து செல்வதற்கு மேலைத்தேய நாடுகளில் தேசிய அரசு குறித்த தெளிவு இலகுவாக அமைகிறது.

இதனால் தேசிய அரசு தனது ஆட்சிக்குள் உட்பட்ட குடிமக்கள் யாவரும் தனது விசுவாசிகளாக இருக்க உரிமை கோருவதுடன் தேசிய இனங்களின் அடையாளங்களை கையகப்படுத்தி கொள்ளவும் முனைகின்றன என்பது தேசிய அரசுகள் குறித்த ஆய்வாளர்களின் கருத்தாகும்.

பல்லினங்களை கொன்ட தேசிய அரசுகள் ஒரு சில இனங்களுக்கு கூடிய சலுகைகள் புரிவதும் இதர தேசிய இனங்கள் மீத ஆதிக்கம் செலுத்த முனைவதையும் மேலைத்தேயம்; நன்கு கற்றறிந்துள்ளது.

இந்த வகையில் சிறீலங்கா அரசு தமிழ் மக்கள் மீது கொண்டுள்ள இனஅழிப்பு போக்கை ஒரு தேசிய அரசின் பண்பாக பார்க்க வைப்பதன் ஊடாக சிறீலங்கா அரசு தனது இனஅழிப்பு கொள்கைகள் மீது தற்காப்பு கேடயங்களை உருவாக்கி வருவதும் கவனிக்கத்தக்கதாகும்.

இதிலே மிகச்சிறந்த உதாரணமாக மேலே குறிப்பிட்ட புலம் பெயர் நாடுகளில் தமிழ் மக்களின் சனநாயக செயற்பாடுகளை பயங்கரவாத செயற்பாடாக காட்டுவதும். சிறீலங்காவின் தேசிய ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிப்பதாக குறிப்பிடுவதும் ஒரு தேசிய அரசு என்ற வகையில் தமிழ் இனஅழிப்புக்கு எதிரான செயற்பாடுகளை தனது நியாயத்திணுடாக திரிபு படுத்துவதற்கு வசதியாகவுள்ளது.

தேசிய அரசை கொண்ட நாடுகள் — பொதுவாக உலகின் பெரும் பாலான நாடுகள் ஏதோ ஒருவகையில் தமது ஆட்சிக்குள் உட்பட்ட பகுதிக்குள் மக்களுக்கிடையே ஒற்றுமையை உருவாக்க வேண்டிய தேவை அவ்வரசுகளின் இருப்பை உறுதி செய்து கொள்ளும் பொருட்டு உள்ளது — உள்நாட்டிலே பெரும்பாலான பொது நிறுவனங்கள் மீது தமது செல்வாக்கை செலுத்துவனவாகவே உள்ளன. சட்டம், மக்கட்தொடர்பு, தேசிய கல்வி முறை, ஆகியன இவற்றில் முக்கியமானவைகளாகும்.

சிலநாடுகளில் ஒரு மதம்; அல்லது இறைநம்பிக்கையை நாடு முழுவதம் ஏற்று கொள்ள வைப்பதன் மூலம் தேசிய அரசு பாதுகாக்கப்படுகிறது. தேசிய அரசு இதர மதங்களிலும் பார்க்க ஆட்சியில் உள்ள பெரும் பான்மை மதத்தை பரவச்செய்வதன் ஊடாகவோ அல்லது ஏனைய மதங்களுக்கான சலுகைகளை குறைத்தோ தேசிய அரசு பாதுகாக்கப்படுகிறது.

பல்வேறு பொறிமுறைகளிலும் அணுகப்பட்ட அதாவது பலவந்தமாகவோ சட்டமுறைகளுடாகவோ, அல்லது நிர்வாக பதவி ஆசைகளை சிறுபான்மை இனங்கள் மீது உருவாக்குவதன் ஊடாகவோ உருவாக்கப்பட்ட ஒரு செயல் மொழித்திட்டம் ஆகியன தேசிய அரசை பாதுகாக்க கூடிய ஆயுதங்களாக உள்ளன.

மேலும் தேசிய அரசுகள் தமது தற்காப்பு உத்திகளாக தம்மால் புனையப்பட்டு பல்வேறு ஊடகங்கள் மூலமாகவும்;பரவச் செய்யப்படும் தேசிய அரச வரலாறு ஆகும். இந்த வரலாறு ஆளும் ஒரு பெரும்பான்மை இனத்தையோ அல்லது சமயத்தையோ மையமாக கொண்டதாக பல்வேறு தேசிய அரசுகளின் மத்தியிலும் அமைந்து விடுவதுண்டு.

அத்துடன் 2009ம் ஆண்டின் பின்பு சிறீலங்கா அரசின் செயற்பாடுகளுடன் மிக இசைவாக கொண்டுள்ள தேசிய அரசு குறித்த மேலைத்தேய கற்கைகள் என்னவெனில் சில வரலாறு நினைவுகள் கடைப்பிடிக்கப்படுவதும் சில வரலாற்று நிகழ்வுகள் மறைக்கப்படுவதும், மறக்கவைக்கப்படுவதும், புதிய தேசிய சின்னங்கள் உருவாக்கப்படுவதும். தேசிய வீரர்களாக ஒரு பகுதியினர் தெரிவு செய்யப்படுவதும் பிரிவினைகளிலிருந்து தம்மை தற்காத்து கொள்ளும் தேசிய அரசுகளின் பொதுவான பண்பாக கருத்தில் எடுத்து கொள்ளப்படுகிறது.

இனங்களிடையே ஒருமைப்பாட்டை உணர்த்துவதற்கு சகலவகையான உத்திகளையும் தொடர்ச்சியாக அனைத்து நாடுகளும் கையாளுகின்றன. ஆனால் பெரும்பாலான நாடுகள் தேசிய அரசு நிலையில் வெற்றி காணவில்லை என்பது முக்கியமாக கருத்தில் கொள்ளகூடியதாகும்.

பெரிய பிரித்தானியாவை எவ்வாறு இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, வேல்ஸ், வட அயர்லாந்து என்பன எவ்வாறு தமது தனித்துவமான பிராந்தியம் மொழி பண்பாடு என்பவற்றின் மூலம் பிரத்தியேகமானதாக இன்னமும் அலங்கரித்து நிற்கின்றன என்பது இதற்கு சிறந்த உதாரணமாகும்.

தமது சமூகத்தின் மீதான நம்பிக்கையும் பற்றுறுதியும் தமது அடையாளத்தை காக்கவேண்டுமென்ற அவாவும் தேசிய அரசு என்ற பதத்திற்கு எதிராக வெற்றி கண்ட வண்ணமே உள்ளது.

அண்மைக்காலங்களில் பெரிதாகப்பேசப்படும் உலகமயமாதல் என்ற பதமும் கூட தேசிய இனங்களை எச்சரிக்கைக்குள் உள்ளாக்கி இருப்பதுடன் ஒவ்வெரு தேசிய இனமும் தத்தமது பாதுகாப்பை தேடும் கட்டாயத்திற்கு ஆளாகி இருப்பதை எடுத்துக்காட்டி வருகிறது. தமது சுயநிர்ணய உரிமையை வேண்டிநிற்கும் நசுக்கப்பட்ட அல்லது மௌனிக்கப்பட்ட இனங்களுக்கு ஆதரவாக உலக அமைப்பகள் பல உருவாகி தமது பாதுகாப்பை வேண்டிநிற்கின்றன.

மேலை நாடுகளின் சிந்தனைகளுக்கு அமைய தந்திரமாக செயற்படும் தேசிய அரசுகளின் தற்காப்பு உத்திகளுக்கு எதிராக உறுதியுடன் போராடிநிற்கும் இனங்கள் வெற்றிகண்டதாக அதே மேலை நாட்டு சிந்தனையாளர்களே உறுதிபட கூறிவருகின்றனர். இதிலே தமிழினம் எந்த வகையிலும் வேறுபட்டதல்ல.

ஆனாலும் உலகின் பெரும்பாலான நாடுகள் அனைத்துலக சமுதாயம் என்ற வகையில் தேசிய அரசுகளாகவே காணப்படுவதால் சிறுபான்மை தேசிய இனங்களை மையமாக கொன்டு இயங்கும் அமைப்புகள் தமது நிலையை விபரித்து கூறுவதற்கு தமக்கு எதிராக செயற்படும் தேசிய அரசின் பிரத்தியேக இன அழிப்பு குறித்து பல்வேறு ஆதாரங்களை முன்னிறுத்த வேண்டியவர்களாக இருக்கும் அதேவேளை சிறீலங்கா போன்ற நாடுகளுக்கு அனைத்துலக சமுதாயத்தில் நண்பர்களை சேர்த்து கொள்வது மிக இலகுவாக அமைந்து விடுகிறது.

சிறிலங்காவின் பேரினவாத தற்காப்பு உத்திகள் – 01

*இலண்டனில் வசித்துவரும் லோகன் பரமசாமி அரசறிவியல் துறைசார் மாணவராவர். கட்டுரை பற்றியதான கருத்தினை எழுதுவதற்கு: loganparamasamy@yahoo.co.uk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *