அபிவிருத்தியா? அரசியலா? நிராகரிப்பும் – தடுமாற்றமும்
‘புதினப்பலகை’க்காக நந்தன் அரியரத்தினம் |
கடந்த முப்பதாண்டு காலமாக எதிர்ப்பு அரசியல் சக்தியாக விளங்கிய விடுதலைப் புலிகள் சிறிலங்கா அரசாங்கத்தினால் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர், ஈழத் தமிழர்களின் அரசியல் கோரிக்கை ஒரு நிலையற்ற நிலைக்கு இடம்மாறியது.
இதனை க.வே.பாலகுமாரின் வார்த்தை பிரயோகம் ஒன்றின் மூலம் சொல்லுவதாயின் ஈழத் தமிழர்களின் எதிர்காலம் ஒரு ‘முட்டுச் சந்தியில்’ நிற்கிறது.
அந்த முட்டுச் சந்தியில் இருந்து ஆக்க பூர்வமான தீர்வு நோக்கியும் செல்லலாம் அல்லது செல்லாமலும் விடலாம் அல்லது ஒன்றுமே இல்லாமலும் போகலாம்.
இந்த நிலையற்ற [Unstable] அரங்கில் நின்றவாறுதான் நாம் அரசியல் உரையாடல்களை நிகழ்த்திக் கொண்டு இருக்கிறோம்.
இன்றைய சூழலில் ஈழத் தமிழர்களை முன்னிறுத்தி சிந்திக்கும் அனைவரும் இந்த விடயத்தை முதலில் குறித்துக் கொள்வது அவசியம்.
இதனை முதலில் ஏற்றுக் கொண்டால்தான் நாம் ஆகக் குறைந்தது புரிந்துணர்வுடனான உரையாடலையாவது தொடர முடியும்.
விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்கு பின்னரான ஈழத்து அரசியல் களத்தை அவதானிப்போமாயின் இரண்டு வகையான தரப்பினரை நாம் காணலாம்.
ஓன்று, அரசின் நடவடிக்கைகளை கண்டிக்கும், எதிர்க்கும் வகையான அரசியலை மேற்கொள்ளும் தரப்பினர்.
இரண்டு, அரசுடன் இணைந்து செல்லுவதே இன்றைய சூழலில் சரியானது என்ற வாதத்தை முன்வைப்போர்.
முதலாவது அணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இரண்டாவது அணியில் தமிழ் கட்சிகளின் அரங்கமும் காணப்படுகிறன.
ஆனால் எனது இந்த பகுப்பாய்வு முற்றிலும் கறாரானது அல்ல ஏனெனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசை கண்டித்து அறிக்கைகள் விட்டாலும் கூட அரசை முழுமையாக பகைத்துக் கொண்டு எதனையும் செய்ய முடியாது என்ற கருத்தையே கொண்டிருக்கிறது.
சமீபத்தில் மகிந்தவின் இரண்டாவது பதவிக்காலம் தொடர்பில் இரா.சம்பந்தர் வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.
மகிந்தவின் 18து திருத்தத்தை எதிர்த்த த.தே.கூட்டமைப்பு அதன் கீழ் பதவிப்பிரமாணம் செய்யும் மகிந்தவை வாழ்த்தியிருப்பது அடிப்படையில் முரண்பாடானதாகும்.
அத்துடன் நடந்து முடிந்த பாதீட்டு விவாத்திலும் வழமைக்கு மாறாக அதனை எதிர்த்து வாக்களிக்கும் நிலைப்பாட்டிலிருந்தும் த.தே.கூட்டமைப்பு விலகிக் கொண்டது.
உண்மையில் த.தே.கூட்டமைப்பிற்கு வேறு வழியில்லை என்பதே யதார்த்தம்.
பொதுவாக நோக்குமிடத்து, இலங்கையின் வடகிழக்கில் வாழும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எந்தவொரு அரசியல் கட்சியும் அரசுடன் ஒரு இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய நிலையில் இருப்பதே யதார்த்தம்.
இத்தகையதொரு அரசியல் பின்புலத்தில்தான் அரசியலா? அபிவிருத்தியா?, எது முதன்மையானது என்ற விவாதம் முன்வைக்கப்படுகிறது.
இங்கு ஒரு விடயம் அதன் ஆழம் உணராமல் முன்வைக்கப்படுகிறது.
விடுதலைப் புலிகளை இலங்கைத் தீவில் அழித்தொழிக்கும் யுத்தத்தில் கொழும்பு வெற்றி பெற்றதன் பின்னரான சூழல்,
முரண்பாட்டுக்கு பின்னரான [Post- Conflict Situation] சூழலா? அல்லது யுத்தத்திற்கு பின்னரான [Post-war Situation] சூழலா?
அடிப்படையிலேயே மேற்படி இரண்டும் வேறுபட்ட கோணத்தில் நோக்க வேண்டிய கருத்து நிலைகளாகும்.
முரண்பாட்டுக்கு பின்னரான சூழல் என்றால் அபிவிருத்தி மட்டுமே பிரதானமானது என்ற வாதம் சரியானதே!
ஆனால் யுத்தத்திற்கு பின்னரான சூழல் என்றால் அபிவிருத்தியுடன் கூடவே அரசியல் முரண்பாட்டுக்கான பொருத்தமானதொரு தீர்வு நோக்கிய அக்கறையும் வெளிப்படுத்தப்பட வேண்டும்.
இந்த இடத்தில்தான் ‘தடுமாற்றங்களும்’ ‘நிராகரிப்புகளும்’ நம்மை ஆட்கொள்ளுகின்றன.
யுத்தத்தில் புலிகளை வெற்றி கொண்டதன் பின்னர் கொழும்பு ‘முதலில் அபிவிருத்தி’ [Developmemt first] என்னும் தொனியிலேயே பேசிவருகிறது.
அரசியல் தீர்வு குறித்த விடயங்களில் உண்மையானதொரு ஈடுபாட்டைக் கொழும்பு காட்டவில்லை.
இந்தியா அவ்வப்போது தமிழ் மக்கள் குறித்து தெரிவித்துவரும் கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையிலேயே கொழும்பு அரசியல் தீர்வு குறித்து வாய் திறக்கிறதே தவிர மகிந்த தனது சொந்த முடிவில் இதுவரை அரசியல் தீர்வு குறித்து திடமான கருத்துக்கள் எதனையும் வெளிப்படுத்தவில்லை.
இதன் மூலம் மகிந்தவிற்கு அரசியல் தீர்வு குறித்து பெரிய நாட்டம் எதுவும் இல்லை என்றே கொள்ளலாம். இத்தகைய சூழலில் அரசின் ‘அபிவிருத்தி முதலில்’ நிலைப்பாட்டை எவ்வாறு நாம் சாதகமாக நோக்கலாம் என்பதே இங்கு பிரதான விவாதத்திற்குரிய விடயமாக இருக்கின்றது.
இங்கு விடயம் மிகவும் சிக்கலானது விடுதலைப் போராட்டத்தின் பேரால் உருக்குலைந்து போன சமூகம் ஒரு புறமாகவும், அரசியல் கோரிக்கையை முன்னிறுத்தும் சமூகம் பிறிதொரு புறமாகவும் ஒரே சமூகத்திற்குள் இரு பிரிவுகள் காணப்படுகின்றன.
இந்த இரு பரிவினையும் எவ்வாறு நாம் கையாளுவது? இந்த இரு தேவைகளையும் எவ்வாறு ஒரே நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டுவருவது?, இதுதான் விடுதலைப் புலிகளின் தோல்விக்கு பின்னர் நம்முன் எழுந்துள்ள பிரதான சவால்.
இந்த சவாலை வெற்றி கொள்வதற்கான சரியானதொரு மார்க்கத்தை கண்டு கொள்ள முடியமையால் எதிரி யார்? நண்பர் யார்? என்று இனங்கண்டு கொள்ள முடியாதளவிற்கு நம் மத்தியில் உட்பூசல்கள் மலிந்துவிட்டன.
ஒரு யுத்தம் நடைபெறும் சூழலில் ஒரு அரசியல் நிலைப்பாட்டை எடுப்பதானது மிகவும் இலகுவான ஒன்று. ஒன்றில் அது அல்லது இது என்று இலகுவானதொரு அரசியல் சித்திரம் நம்மால் வரைந்து கொள்ள முடிந்தது ஆனால் யுத்தமற்ற சூழலில் ஒரு அரசியல் நிலைப்பாட்டிற்கு வருவது மிகவும் கடினமானது.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அது வெறுமை உணர்வையே தரக் கூடும். தற்போதைய நமது நிலைமையும் அப்படிப்பட்ட ஒன்றுதான்.
பாதிக்கப்பட்ட சமூகத்தின் வாழ்வை கட்டியெழுப்புவதற்கு முக்கியத்துவம் கொடுப்பதா? அல்லது பெரிய இழப்புக்கள் எதனையும் சந்திக்காததால் அரசியல் குறித்த எதிர்பார்ப்புக்களுடன் இருக்கும் சமூகத்தின் விருப்பங்களை முதன்மைப்படுத்துவதா?
இவ்வாறான கேள்விகள் மேலெழும் போதுதான் அபிவிருத்தி என்ற விடயத்தை, நாம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
அரசு தனது திட்டமிடப்பட்ட நிகழ்சி நிரலை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது.
அரசின் திட்டங்களை மறுபரிசீலனை செய்ய நிர்ப்பந்திக்கும் வகையிலான பொறிமுறை எதுவும் எங்களிடமில்லை எனவே இந்தப் பின்புலத்தில் அரசின் நிகழ்சிநிரலை எதிர்த்தல் என்னும் ஒரு நிலையில் மட்டுமே அணுகுவோமாயின் அரசு அதனையும் தனது நிகழ்நிசிரலை பலப்படுத்திக் கொள்ளவே பயன்படுத்திக் கொள்ளும்.
ஆகவே நமது தெரிவு என்ன? இந்தச் சிக்கலான நிலைமைகளை விளங்கிக் கொண்டாலும் நாம் அரசை முழுமையாக நம்பி செயலாற்ற முடியுமா? கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் அவ்வாறான சந்தேகங்களை இலகுவில் நிராகரிக்கவும் முடியாதுதான்.
அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச சனத்தொகையில் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று குறிப்பிட்டாலும் அதனை நம்பும்படியான கடந்த கால அனுபவங்கள் எதுவும் நம்மிடமில்லை.
மகாவலி அபிவிருத்தித் திடங்கள் போன்ற பாரிய அபிவிருத்தித் திடங்கள் இலங்கையின் இனத்துவ முரண்பாட்டிற்கு எண்ணை ஊற்றிய வரலாற்றையும் தமிழர்கள் கடந்தே வந்திருக்கின்றனர்.
பாரிய வெளிநாட்டு உதவியின் கீழ் மேற்கொள்ளப்பட்ட மகாவலி திட்டத்தின் போதும் ஜே.ஆர்.ஜெயவர்த்தன, தமிழ் பகுதிகளில் காணப்படும் இனவிகிதாசாரம் மாற்றப்படாது என்றே உறுதியளித்திருந்தார் ஆனால் நடைமுறையில் அந்த உறுதிமொழி பெறுமதி இழந்த ஒன்றாகவே இருந்தது.
இது பற்றி ஜெயவர்த்தனவிற்கு நெருக்கமாக இருந்த ஏ.ஜே.வில்சன், ஒருவரின் ‘இன முழ்கடிப்பு’ [Ethnic Swarming] உணர்வு அவரது தனிப்பட்ட நடத்தையை தீர்மானிப்பதாக அமையும் என்று குறிப்பிடுகின்றார்.
யூகோஸ்லாவிய மேலாதிக்க நடைமுறையான இன மூழ்கடிப்புக் கொள்கை, மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் போது கையாளப்பட்டதை நன்கொடையாளர்கள் தாமதித்தே அறிந்து கொண்டதாகக் குறிப்பிடுகின்றார், மகாவலி அபிவிருத்தி திட்டம் பற்றிய ஆய்வினை மேற்கொண்ட கனடிய பொருளாதரா நிபுணர் ரோஸ் மலிக்.
ஆனால் அதனை நன்கொடையாளர்கள் அறிந்து கொண்ட போது இலங்கை அரசை கட்டுப்படுத்தும் ஆற்றல் கைமீறிய ஒன்றாகிவிட்டாதாவும் அவர் குறிப்பிடுகின்றார்.
எனவே இவ்வாறான அனுபவங்களின் வழியாக நிலைமைகளை நோக்கும் போது அரசின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்கள் நியாயமானதே ஆயினும் அரசுடன் ஒரு இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளாமல் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்பதே யதார்த்தம்.
எனவே இவ்வாறானதொரு இருள் அரங்கில் எப்படியாவது சிறு வெளிச்சத்தை கொண்டுவர முடியுமா? அதற்கான சாதகமான வாய்ப்புகள் ஏதாவது இருக்கின்றதா?
அபிவிருத்தி – அரசியல் என்று இரண்டையும் கையாள வேண்டுமாயின் அரசின் விருப்ப எல்லைக்குள் அரசியலை வைத்துக் கொண்டு அபிவிருத்தியை எல்லையற்ற ஒன்றாக கையாளுவதை ஒரு வழிமுறையாக நாம் பரிசீலிக்கலாம்.
இந்த அடிப்படையில் பின்வரும் விடங்களை இந்த கட்டுரை விவாதத்திற்காக பரிந்ததுரைக்கிறது. இதில் எவையும் முடிந்த முடிபுகள் அல்ல முன்மொழிவுகள் மட்டுமே.
அரசியல் ரீதியாக. 13வது திருத்தச்சட்டத்தை முதன்மைப்படுத்துவது. இதில் உள்ள சாதகமான அம்சம் இந்தியா ஈழத் தமிழ் மக்கள் மீதான கரிசனையில் 13வது திருத்தச் சட்டத்தையே முதன்மைப்படுத்தி வருகிறது.
இந்தியாவுடன் சுமூகமான உறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய நிலையில் கொழும்பு இருப்பதால் இதனை சாதகமாக பரிசீலிக்க வேண்டிய தேவைப்பாடு அதற்கு உண்டு.
அரசியல் ரீதியில் இதனை முன்வைத்துக் கொண்டு அரசின் அபிவிருத்தி விடயங்களில் இணங்கிப் போக வேண்டிய விடயங்களில் இணங்கிப் போகும் வழிமுறை குறித்து பரிசீலிக்கலாம்.
அவ்வாறு இணங்கிப் போகாது ஒதுங்கியிருப்பின் பாதிக்கப்பட்ட மக்களை அடிப்படையாக் கொண்டு மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களில் எந்தவொரு தலையீட்டையும் நம்மால் செய்ய முடியாமல் போகும்.
மேற்படி இரண்டும், களத்தை மையப்படுத்திய பொறிமுறையாக இருக்கும் போது, புலம்பெயர் தேசங்களில் பின் யுத்த சமூகங்களை கட்டியெழுப்பும் நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதற்கான பொறுப்பை வலியுறுத்தும் அழுத்த அரசியலை மேற்கொள்ளலாம்.
இது வெளிப்படையாக கொடி பிடித்துக் கொண்டு செய்யும் அரசியல் அல்ல ராஜதந்திர ரீதியாக மேற்கொள்ள வேண்டியது.
மகாவலி திட்டங்கள் போன்ற பாரிய திட்டங்களில் வெளிநாட்டு உதவிகள் எவ்வாறு இனத்துவ முரண்பாடுகளை கூர்மைப்படுத்துவதற்கு பயன்பட்டது போன்ற விடயங்களை எங்கள் தரப்பு நியாயங்களாக அனைத்துலக அமைப்புக்களின் முன் வைக்க முடியும்.
இவ்வாறானதொரு செயல் திட்டத்தின் கீழ் நாம் கைகோர்க்க வேண்டுமாயின் தற்போதைய கள நிலைமைகளை கருத்தில் கொண்டு அதற்கேற்ற அறிவு பூர்வமான அணுகுமுறையொன்று நோக்கி நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும்.
நிலைமையை வெறுமனே கறுப்பு வெள்ளைக் கட்டங்களாக [Black and white] பிரித்து நோக்காமல் சாம்பலான ஓரங்களினை [Gray area] உருவாக்குவதன் மூலம் முன்னோக்கி நகர்வதற்கான வழிகளை நாம் கண்டு பிடிக்க வேண்டும்.
இவ்வாறு பாரிய அழிவுகளை எதிர்கொண்டு மீண்டெழுந்த தேசங்களின் சமூகங்களின் வரலாறுகளில் இருந்து கற்றுக் கொண்டு ஆளுமையான வழிமுறை ஒன்றை [Smart Way]கண்டடைய வேண்டும்.
முற்றிலுமான நிர்மூலத்தின் பின்னரும் எழுச்சி கொண்ட தேசங்களின், மக்களின் வரலாற்றிலிருந்து கற்றுக் கொள்வதன் மூலமே அவ்வாறானதொரு வழிமுறையை நம்மால் கண்டடைய முடியும்.
முதலில் இது பற்றிய பரந்த உரையாடல்கள் நமக்கு அவசியம்.
* நந்தன் அரியரத்தினம், இலங்கையி்ல் வாழும் ஓர் அரசியல் ஆய்வாளரும் இலக்கியவாதியுமாவார். கட்டுரை பற்றிய கருத்துகளை எழுதுவதற்கும் ஆக்கபூர்வமான விவாதங்களை முன்வைப்பதற்கும்: arinanthan@gmail.com
எப்போதும்போல தடுமாற்றம் தான்.