மேலும்

மூன்றாம் முள்ளி வாய்க்கால்..?

Mullivaikkal4 ஆம் கட்ட ஈழப் போரின் பின்னான ஆய்வுகள் பெரும்பாலும் ஒரு நம்பிக்கையற்ற எதிர்காலம் பற்றிய எதிர்வு கூறல்களாகவும், அதிலிருந்து எப்படியாவது மீண்டு வர வேண்டிய தேவைகள் பற்றியதாகவுமே அமைந்திருந்தன. புதினப்பலகை-க்காக சண் தவராஜா

முள்ளிவாய்க்காலின் பின் அனைத்துமே மாறிவிட்டது.

4 ஆம் கட்ட ஈழப் போரின் பின்னான ஆய்வுகள் பெரும்பாலும் ஒரு நம்பிக்கையற்ற எதிர்காலம் பற்றிய எதிர்வு கூறல்களாகவும், அதிலிருந்து எப்படியாவது மீண்டு வர வேண்டிய தேவைகள் பற்றியதாகவுமே அமைந்திருந்தன.

அத்தகைய ஆய்வுகளில் சோகமும் விரக்தியும் இழையோடியதை மறுப்பதற்கில்லை. மனமும் ஏதோ வகையில் அதனை நியாயப் படுத்தவே செய்கிறது.

அப்போது தான் நாம் இந்தப் போராட்டத்தை எவ்வளவு தூரம் நேசித்திருந்தோம், அதன் வெற்றியை எத்துணை தூரம் விரும்பியிருந்தோம் என்பதை உணரக் கூடியதாக இருக்கிறது.

முள்ளிவாய்க்காலோடு அனைத்துமே முடிந்துபோய் விடவில்லை என அறிவு சொல்லிக் கொண்டாலும் உள்ளுணர்வு என்னவோ அனைத்துமே முடிவிற்கு வந்துவிட்டது என அடிக்கடி சொல்லிக் கொள்கிறது.

பீனிக்ஸ் பறவையைப் போன்று சாம்பல் மேட்டிலிருந்து நாம் எழுந்து வருவோம் என அறிவு சொல்லிக் கொண்டாலும் உள்ளிருந்தே கொல்லும் எதிரிகள் அதற்கு அனுமதிக்க மாட்டார்கள் என உள்ளுணர்வு கூறுகின்றது.

நல்ல நோக்கத்தோடு ஆரம்பிக்கும் எதுவுமே தீமையில் முடிந்து போவதில்லை என அறிவு கூறிக் கொண்டாலும் மோசமான உள்ளுணர்வோ அவநம்பிக்கையுடன் கூடிய சிந்தனைகளையே தொடர்ந்தும் கொண்டிருக்கின்றது.

இத்தகைய நிலை ஈழ தேச விடுதலையை நேசித்த ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் தமிழ் மகளுக்கும் உள்ளது என்பதை அன்றாடம் நாம் சந்திக்கும் உறவுகளுடனான கருத்தாடல்களின் போது அறிந்து கொள்ள முடிகின்றது.

அதே போன்று தாயக விடுதலையை நேசித்த ஒவ்வொரு தமிழ் ஊடகவியலாளனும் அவ்வாறே உணர்கின்றான் என்பதை அவர்களின் தொடர்ச்சியான படைப்புக்கள் ஊடாக அறிந்து கொள்ள முடிகின்றது.

கடந்த மே மாதம் முள்ளி வாய்க்காலில் நடைபெற்ற சம்பவங்களை அடுத்து, நாடு கடந்த தமிழீழ அரசாங்க உருவாக்கம் பற்றிய அறிவிப்பு ஒருவித தற்காலிக நம்பிக்கையைத் தந்திருந்தது.

ஆனால், தமிழர்களின் உள்ளிருந்தே கொல்லும் வியாதி காரணமாக, அதற்கு மாறாக மற்றொரு திட்டம் முன்வைக்கப் பட்டமையும், தமிழ் மக்கள் மனங்களில் இரண்டாவது முள்ளிவாய்க்காலாக அமைந்தது.

நம்பிக்கை தானே வாழ்க்கை! தமிழ் மக்கள் தவிர்க்க முடியாத நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பின்னால் அணி திரண்டார்கள்.

அலைகடல் நடுவே தத்தளிப்பவன் ஒரு சிறிய துரும்பைக் கூடப் பற்றிக் கொண்டு தன்னுயிர் காக்க நினைப்பதைப் போன்றே தமிழ் மக்களும் இன்றைய இக்கட்டான நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தம்மை இரட்சிக்கும், விடுதலைப் பாதையின் அடுத்த கட்டத்திற்கு எம்மை அழைத்துச் செல்லும் என்ற நம்பிக்கையோடு இருந்தார்கள்.

ஆனால், அது விடயத்திலும் கூட உள்ளிருந்தே கொல்லும் வியாதி விட்டுவிடவில்லை.

இப்போது – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையைத் தோற்கடித்து விடும் நோக்குடன் மாற்று அணியொன்று களமிறக்கப் பட்டுள்ளது.

திருகோணமலையைப் பொறுத்தவரை பறிபோகப் போவது சம்பந்தனின் பதவி மட்டுமல்ல. திருமலை மாவட்டத்திற்கு மிகவும் அவசியமான தமிழ்ப் பிரதிநிதித்துவமும் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களும் தான்.

சிங்களப் பேரினவாதிகள் மிகவும் விரும்பும் இந்த நிலைமை உருவாவதற்கான முடிவு புலம் பெயர் தமிழ்ச் சமூகத்தில் இருந்தே எடுக்கப்பட்டதை மறைத்து விடுவதற்கில்லை.

இத்தகைய போக்கு நிச்சயமாகத் தமிழ் மக்களுக்கு நன்மையைப் பெற்றுத் தரப் போவதில்லை. மாறாக, தமிழ்த் தேசியத்தின் எதிரிகளுக்கே உவப்பான விடயம்.

‘உயிரோடு இருப்பவர்கள் யாவரும் துரோகிகள். சாவைத் தழுவிக் கொண்டவர்கள் யாவரும் மாவீரர்கள்” என அண்மையில் ஒரு ஊடக நண்பர் எழுதியிருந்தார்.

எந்தப் பாராளுமன்ற அரசியலை எதிர்த்து தமிழ் இளைஞர்கள் புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்கினார்களோ அதே வழியில் வந்தவர்கள் இன்று பாராளுமன்றக் கதிரைகளுக்காக தம்மிடையே அடித்துக் கொள்வதைப் பார்க்கையில் தாயாதிச் சண்டைகளால் நசித்துப் போன பண்டையத் தமிழ்ச் சாம்ராஜ்யங்கள் நினைவுக்கு வருகின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு உன்னத இலட்சியத்துக்காகவே தோற்றம் பெற்றது. அதன் தேவை தமிழர் அரசியலில் இன்னமும் உள்ளது.

அதனை வழிநடத்துவோரில் தவறு இருக்கக் கூடும். அதற்காக அந்தக் கட்டமைப்பையே சிதைத்துவிட நினைப்பது எந்த வகையில் நியாயம்?

உண்மையில், கொள்கைக்கும் இலட்சியத்துக்குமாகப் போராடுவதாக இருந்தால் அதனை உள்ளிருந்து அல்லவா செய்திருக்க வேண்டும்…? கூட்டமைப்பின் உள்ளேயே உள்ள தேசியத்துக்கு ஆதரவான சக்திகளின் கரங்களைப் பலப்படுத்துவதன் ஊடாக அதனைச் சாதித்திருக்க முடியும்.

அதே போல – கூட்டமைப்பி்ன் தலைமையும், தமிழ் தேசியத்தின் பால் உண்மையான பற்றுள்ளவர்கள் பிரிந்து வெளியே சென்றுவிடாத சூழலையும் உருவாக்கியிருக்க வேண்டும்.

ஆனால், இன்று காலம் கடந்து விட்டது. குறுகிய அரசியற் சிந்தனைகளால் எடுக்கப்பட்ட முடிவுகள் காரணமாக தமிழர்களின் எதிர்காலம் பாரிய நெருக்கடிக்குள் தள்ளப் பட்டுள்ளது.

தமது ஆயுத பலத்தை இழந்த தமிழ் மக்கள் எஞ்சியிருந்த அரசியற் பலத்தையும் இழக்கும் நிலை உருவாகியுள்ளது.

ஏப்ரல் 8 இல் எழுதப்படும் வரலாறு தமிழ் மக்களுக்குக் கசப்பானதாகவும் தமிழ்த் தேசியத்தின் எதிரிகளுக்கு உவப்பானதாகவும் அமையப் போவதை நினைக்கையில் தந்தை செல்வா அன்று கூறிய வரிகளே ஞாபகத்துக்கு வருகின்றன.

‘தமிழர்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்!”

* இங்கு பிரசுரமாகும் கருத்துரைகளின் எண்ணங்களைப் புதினப்பலகை-யின் கருத்தாகக் கொள்ள  வேண்டும் என்று அவசியமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *