இந்திய மாநிலங்களின் அதிகாரங்களையே நாமும் கேட்கிறோம் – சென்னையில் சம்பந்தன் தெரிவிப்பு
இந்தியாவில் மாநிலங்களுக்கு இருப்பதைப் போன்ற அதிகாரங்களை நாமும் பெறுவதற்கு இந்தியா உதவ வேண்டும் என்று கூறியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.
சென்னை, அடையாறில் உள்ள இந்திய- தெற்காசிய ஆய்வு மையத்தில், ‘இலங்கையின் இன்றைய போக்கு’ என்ற தலைப்பில் நேற்று மாலை உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஆய்வு மைய அமைப்பாளர் பேராசிரியர் சூரியநாராயணனின் வரவேற்புரையை அடுத்து, உரையாற்றிய இரா.சம்பந்தன்,
“சிறிலங்கா அதிபராக மகிந்த ராஜபக்ச பொறுப்பேற்றதும் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தார்.
இதற்காக 16 பேர் கொண்ட நிபுணர் குழுவையும் அமைத்தார்.
அந்தக் குழு சாத்தியமான தீர்வுத் திட்டங்களையும் உருவாக்கியது.
ஆனால், அதன்பிறகு ராஜபக்ச இந்த விடயத்தில் ஆர்வம் காட்டவில்லை.
வடகிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழர்களுக்கு உரிமை அளிக்கும் வகையில் 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த இந்தியா முயற்சி மேற்கொண்டது.
ஆனால், சிறிலங்கா அரசாங்கம் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை.
போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள், தங்கள் வாழ்விடங்களில் மீளக்குடியேற முடியவில்லை.
யாழ்ப்பாணத்தில், பாடசாலைகளையும் கோயில்களையும் சிறிலங்கா இராணுவத்தினர் இடித்துத் தள்ளுகின்றனர்.
சிறிலங்கா அரசாங்கத்தின் உத்தரவு இல்லாமலா சிறிலங்கா படையினர் இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுவார்கள்?
மகிந்த ராஜபக்சவின் சகோதரர் தானே சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலராக இருக்கிறார்.
அபிவிருத்தித் திட்டங்களுக்கு என்று கூறி, தமிழர் பகுதிகளில் 500 ஏக்கர் நிலம் சிறிலங்கா இராணுவத்துக்காக சுவீகரிக்கப்பட்டு, அவர்களுக்கு குடியிருப்புகள் கட்டப்படுகின்றன.
தமிழர் பகுதிகள் சிங்கள மயமாக்கப்பட்டு வருகின்றன.
ஒன்றுபட்ட நாட்டுக்குள், எந்தவித குந்தகமும் இல்லாமல் விவசாயம், தொழில், வியாபாரத்தோடு நாங்கள் வாழ்ந்தால் போதும்.
இந்தியாவில் மாநிலங்களுக்கு என்னென்ன அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதோ அத்தகைய அதிகாரங்களைத் தான் இலங்கையில் நாங்களும் எதிர்பார்க்கிறோம்.
நாங்கள் தனிஈழத்தைக் கேட்கவில்லை.
இந்த விடயத்தில் இந்தியாவின் உதவியை நாம் எதிர்பார்க்கிறோம்.” என்றும் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.