மேலும்

பூசா இராணுவ முகாமுக்குள் அதிரடியாக நுழைந்து தேடுதல் நடத்திய அமெரிக்க போர்க்குற்ற நிபுணர்

கடந்த மாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தில் போர்க்குற்ற விவகாரங்களைக் கவனிக்கும் சிறப்பு தூதுவரான ஸ்டீபன் ஜே ராப், பூசாவில் உள்ள சிறிலங்கா இராணுவ முகாம் ஒன்றுக்குள் திடீரென உள்நுழைந்து சோதனை நடத்திய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த மாதம் முதல் வாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த ஸ்டீபன் ராப் தலைமையிலான அமெரிக்க குழுவினர், காலியில் உள்ள பூசா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களை பார்வையிடுவதற்காக சென்றிருந்தனர்.

இதன்போது, பூசா தடுப்பு முகாமுடன் இணைந்திருந்த சிறிலங்கா இராணுவ முகாம் ஒன்றுக்குள் அவர்கள் திடீரென உள்நுழைந்து – தேடுதல் நடத்தும் பாணியில்- பார்வையிட்டுள்ளனர்.

போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்கா படையினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் உயர்மட்டத் தலைவர்கள் பலர், இன்னமும் எங்குள்ளனர் என்று தெரியாதுள்ளது.

இவர்கள் இரகசிய தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்தநிலையில், பூசா தடுப்பு முகாமுக்கு அருகில் இருந்த சிறிலங்கா படையினரின் முகாமும், அத்தகைய இரகசியத் தடுப்பு முகாமாக பயன்படுத்தப்படலாம் என்ற சந்தேகத்தின் பேரிலேயே ஸ்டீபன் ராப் குழுவினர் அதற்குள் நுழைந்து பார்வையிட்டதாகத் தெரிகிறது.

பூசா தடுப்பு முகாமுடன் இணைந்த இராணுவ முகாமுக்குள், ஸ்டீபன் ராப் தலைமையிலான குழுவினர் அத்துமீறி நுழைந்ததாக, சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் குற்றம்சாட்டியுள்ளன.

அது தடுப்பு முகாமின் பாதுகாப்புக்கான முகாம் என்பதை அமெரிக்க அதிகாரி தெரிந்து கொண்டிருக்க வேண்டும் என்றும், அமெரிக்காவினது இந்த அணுகுமுறையை சிறிலங்கா அரசாங்கத்தினால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஒரு கருத்து “பூசா இராணுவ முகாமுக்குள் அதிரடியாக நுழைந்து தேடுதல் நடத்திய அமெரிக்க போர்க்குற்ற நிபுணர்”

  1. கானகன் says:

    அமேரிக்கா எல்லா இடத்திலையும் தானே அத்து மீறி நுழையுது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *