மேலும்

‘அரசியல் என்பது தொடர்பறாத போராட்டத்தின் மற்றுமொரு வடிவம்’ – தமிழ் மக்களின் வாக்களிப்பு வழங்கும் செய்தி

இலங்கைத்தீவின் வடக்கில் தமிழ்மக்கள் எந்தவிதமான பாரிய எதிர்பார்ப்புக்களையும் கொண்டிராமல் மிகப்பெரும் புரட்சியினை ஏற்படுத்தியுள்ளார்கள்.

குறிப்பாக சிறீலங்காவின் இராணுவத்தின் நேரடி கிடுக்கிப்பிடிக்குள்ளும், இராசபக்ச குடும்பத்தின் அபிவிருத்தி மாய்மாலங்களுக்குள்ளும் சிக்கவைக்கப்பட்டிருந்த முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டமக்கள் மிகவும் நிதானமாக சிறீலங்காவின் ஆட்சியாளருக்கும், அதன் இராணுவ அதிகாரத்திற்கும் சிங்கள பௌத்த தேசியவாதிகளுக்கும் உறுதியான தங்களது உள்ளத்தினை திறந்து காட்டியுள்ளார்கள்.

அம்மக்களின் உறுதியான நிலைப்பாட்டிற்கும்; தேர்தல் நாட்களில் வெளிப்படுத்திய அச்சமில்லா தன்மைக்கும் ‘புதினப்பலகை’ தனது முழுமையான பாராட்டினையும் வாழ்த்துக்களினையும் தெரிவிப்பதில் பெருமைகொள்கின்றது.

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் நேரடி ஆளுமைக்கு கீழும் சிறீலங்காவின் கடற்படையின் அதிகாரத்தின் கீழும் பத்தாண்டுகளுக்கு மேலாக கொத்தடிமைகளாக வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருந்த தீவகமக்கள் நிகழ்த்தியது இந்த நூற்றாண்டின் மற்றுமொரு அதிசயமாகும்.

இசைந்து, பணிந்து, இரந்து வாழும் வாழ்வினையும் ஒட்டுண்ணி அரசியலூடாக நலன்களினைத்தேடும் தலைமைத்துவத்தினையும் முற்றாக புறந்தள்ளி ஒரு வாக்கு புரட்சியினைப் பிரகடனப்படுத்தியுள்ளார்கள். பெருமக்கள் என்றும் பெருமக்களே.

Cvv-Rsam

இன்று வடக்கு மாகாண மக்கள் மிகவும் உறுதியாக தங்கள் அரசியல் அவாவினை உலகத்திற்கு பிரகடனப்படுத்துவதற்கு முக்கிய காரணமாகியவர்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் அதன் சாணக்கியம் மிக்க தலைவர் இரா.சம்பந்தனும் ஏனைய கட்சிகளின் தலைவர்களுமே. அவர்களுடன் தோள்கொடுத்து நின்ற கட்சி மற்றும் இயக்கங்களின உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் நலன்விரும்பிகள் அனைவரும் காலங்கருதி எடுத்த முடிவுகளும் அர்ப்பணித்த உழைப்பும் எதிர்கொண்ட உயிராபத்துக்களும் தமிழ்மக்களின் பெருமதிப்பிற்குரியது.

முதன்மை வேட்பாளராக பெருமனதுடன் முன்வந்த முன்னாள் நீதியரசர் சி.விக்னேஸ்வரன் அவர்களின் தலைமைத்துவத்தினை தமிழ்மக்கள் தங்களது அதிகூடிய வாக்குப்பலத்தின் மூலம் அங்கீகரித்து கண்ணியப்படுத்தியுள்ளமை உலகத்தின் கவனத்தினை தமிழ்மக்கள் பக்கம் திருப்பியுள்ளது.

அதேபோன்று யுத்தத்தினால் சிதைக்கப்பட்ட குடும்பங்களின் ஒருமித்த குரலாக உயர்த்தப்பட்டுள்ள அனந்தி சசிதரனுக்கு மக்கள் அளித்துள்ள பெரும்பான்மைப்பலம் அனந்தியின் துணிவுக்கும், பெருமனதுக்கும் தமிழ்மக்களின் தேசியவிடுதலையில் கொண்டுள்ள பற்றுறுதிக்கும் கிடைத்த அங்கீகாரமாகவே கொள்ளவேண்டும்.

அனந்தியின் பெருவெற்றி தமிழ்பெண்களின் அரசியல் பயணத்தில் மற்றுமொரு மைல்கல்லாக மாறியுள்ளது.

இத்தகைய நிலைமையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை அங்கத்துவத்தினுள் ஒரு முஸ்லீம் பிரதிநிதி கூட வெற்றிபெறமுடியாமல் போனமை கவலைக்கும் கவனத்திற்கும் உரியது.

சிங்கள தேசியக்கட்சிகள் ஊடாக எதிர்க்கட்சி வரிசையில் எத்தனை முஸ்லீம் பிரதிநிதிகள் இருந்தாலும் தமிழர் கூட்டமைப்பினால் ஆளப்படக்கூடிய வடக்கு மாகாணசபையில் முஸ்லீம் மக்களின் அவாக்களினைப் புரிந்து கொண்டு சேவையாற்றக்கூடிய பிரதிநிதியின் அவசியத்தினை தமிழ் கூட்டமைப்பில் அங்கம்வகிக்கும் சகல கட்சித்தலைவர்களும் புரிந்து கொள்வார்கள் என்பதில் ஜயமில்லை. எனினும் இவ்விடயத்தில் கூட்டமைப்பின் தலைவர்களின் பொறுப்பினை தமிழ்மக்கள் சார்பாக நினைவுபடுத்த வேண்டியது தார்மீக கடமை என ‘புதினப்பலகை’ உணர்கின்றது.

எனவே தமிழ்க்கூட்டமைப்பின் தலைவர்கள் மிகவும் பெருந்தன்மையுடன் முன்வந்து தமது கட்சிக்கு கிடைத்துள்ள மேலதிக ஆசனங்களில் ஒன்றினை முஸ்லீம் பிரதிநிதிக்கு வழங்கவேண்டுமென ‘புதினப்பலகை’ தமிழ்மக்கள் சார்பாக வேண்டுகின்றது.

இதன் மூலம் மீண்டும் தமிழ்பேசும் மக்கள் என்கின்ற பரந்த அடையாளத்தின்கீழ் தமிழ்மக்களும் முஸ்லீம் மக்களும் தமது ஒருமித்த எதிர்காலத்தினை மீண்டும் கட்டியெழுப்பும் பொற்காலம் உருவாகும் என ‘புதினப்பலகை’ உறுதியாக நம்புகின்றது.

Carl Von Clausewitz என்ற அறிஞர் கூறினார் “யுத்தம் என்பது தொடருகின்ற அரசியல் நிகழ்ச்சிநிரலின் மற்றுமொரு வடிவம் [War is the continuation of politics by other means] என்று.

சிறீலங்காவின் சிங்கள பௌத்த தேசியவாதம் 19ம் நூற்றாண்டின் பின்னரைப்பகுதியில் ஆரம்பித்த இனமேலாதிக்க அரசியலின் தொடர்சியாகவே 21ம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்தில் தமிழ்மக்கள் மீது கொடிய யுத்தத்தினை தொடுத்து மிகப்பெரிய இனப்படுகொலை நிகழ்ச்சிநிரலினை முள்ளிவாய்க்காலில் அரங்கேற்றியது. ஆனால் இன்று தமிழ்மக்கள் அவ் அறிஞரின் கூற்றுக்கு மறுவிளக்கம் கொடுத்துள்ளனர்.

பலபத்தாண்டுகளாக முன்னெடுக்கப்பட்ட தமிழ்மக்களின் தன்னாட்சி உரிமைக்கான போர் இன்று சனநாயக அரசியல் வடிவத்தினூடாக உலகிற்கு மீள்பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

அரசியல் என்பது தொடர்பறாத போராட்டத்தின் மற்றுமொரு வடிவமே [Politics is the continuation of War by other means].

– புதினப்பலகை குழுமத்தினர்

2 கருத்துகள் “‘அரசியல் என்பது தொடர்பறாத போராட்டத்தின் மற்றுமொரு வடிவம்’ – தமிழ் மக்களின் வாக்களிப்பு வழங்கும் செய்தி”

  1. கரன் says:

    தமிழ் மக்களின் வாக்களிப்பு எத்தனை தடவை தான் செய்தியை சொல்வது?

    1. appusamy says:

      whtat are you doing there^
      donot surrender to modan

Leave a Reply to கரன் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *