மேலும்

வடமாகாணத்தின் நீர்வளமும் இரணைமடுக்குளமும் – யாழ்குடாநாட்டிற்கு குடிநீர் வழங்கலும்

iranaimaduஏன் இரணைமடுக்குளத்தின் நீர் ஓர் அரசியல் மேடைக்குரிய விடயமாக மாறியுள்ளது? இரணைமடுக்குளத்திலிருந்து யாழ்குடாநாட்டிற்கு குடிநீரினை வழங்குவதற்கான திட்டம் புதிய முயற்சியா அல்லது முன்னைய முயற்சியின் தொடர்ச்சியா? ஏன் இவ்விடயம் பலரின் அக்கறைக்குரிய விடயமாக மாறியுள்ளது? புதினப்பலகைக்காக ம.செல்வின்

இரணைமடுக்குளத்திலிருந்து யாழ்குடாநாட்டின் சில பகுதிகளுக்குக் குடிநீரை வழங்கும் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் பலமட்டங்களில் நடைபெற்றதாகப் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. இத்தகைய கலந்துரையாடல்களில் சில மாவட்டத்தின் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரின் முன்முயற்சியில் மாவட்ட விவசாயிகள் மாகாண அமைச்சர்கள் அங்கத்தவர்கள் திணைக்களக் தலைவர்களை உள்ளடக்கியதாக நடாத்தப்பட்டதாக அச்செய்திக்குறிப்புகள் தெரிவிக்கின்றன. இத்தகைய கலந்துரையாடல்கள் மிகவும் வரவேற்கப்பட வேண்டியவையே. எனினும் கலந்துரையாடல்களில் ஆக்கபூர்வமான இறுதிமுடிவுகள் இக்கட்டுரை எழுதுகின்ற நேரம்வரை அடையப்படவில்லை என்பதே களயதார்த்தமாக அறியப்படுகிறது.

இதுவரை இல்லாதவாறு ஏன் இரணைமடுக்குளத்தின் நீர் ஓர் அரசியல் மேடைக்குரிய விடயமாக மாறியுள்ளது? இரணைமடுக்குளத்திலிருந்து யாழ்குடாநாட்டிற்கு குடிநீரினை வழங்குவதற்கான திட்டம் புதிய முயற்சியா அல்லது முன்னைய முயற்சியின் தொடர்ச்சியா? ஏன் இவ்விடயம் பலரின் அக்கறைக்குரிய விடயமாக மாறியுள்ளது? என்றவிடயங்களை இக்கட்டுரை பொதுமக்களின் அறிதலுக்காகத் தருவதற்கு முயற்சிக்கின்றது.

யாழ்ப்பாண குடாநாட்டின் நீர்வளமும் அதன் முகாமைத்துவம் தொடர்பான முன்முயற்சிகளும்:

வடமாகாணத்தின் நீர்வளமுகாமைத்துவம் மற்றும் யாழ்ப்பாணகுடாநாட்டின் நன்னீர் வளத்தினைப் பாதுகாத்தல் தொடர்பான அண்மைக்கால சிந்தனைகளின் மூலம் சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு ஒல்லாந்த ஆட்சியாளர் காலத்திலிருந்தே ஆரம்பிக்கின்றது. ஒல்லாந்த தளபதி கென்றில் வான் றீடில் (Captain Hendrile van Reedle) கடல்வெள்ளத்தடுப்பு அணைகளை தொண்டைமானாறு மற்றும் நாவற்குழி நீரேரிகளில் அமைப்பதன் மூலம் யாழ்ப்பாணக் குடாநாட்டின் நன்னீர்வளத்தைப் பாதுகாக்க முடியும் என்ற சிந்தனையினை முன்வைத்தார்.

அதனைத் தொடர்ந்து பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் வடமாகாண அரசாங்க அதிபர்களாக இருந்த திரு.ருவைனம் (1879), திரு.கோஸ்பேர்க் (1916) ஆகியோரால் ஆனையிறவு நீரேரி, தொண்டைமானாறு நீரேரி, உப்பாறு நீரேரி (நாவற்குழி) ஆகியவற்றினை நன்னீர் நிலைகளாக மாற்றுவதற்கான முன்மொழிவுகள் பரிசீலனைக்கு முன்னெடுக்கப்பட்டன.

இவற்றின் தொடர்ச்சியாக 1930களில் தேசியஅரசுப்பேரவை உறுப்பினராக இருந்த திரு.பாலசிங்கம் உவர்நீரேரிகளை நன்னீராக்கவேண்டியதன் அவசியத்தினை முன்மொழிந்தார். 1950ல் நீர்ப்பாசனப் பொறியியலாளராக இருந்த எஸ் ஆறுமுகம் யாழ்ப்பாணத்திற்கான நீர்வள அபிவிருத்தித் திட்டத்தை ஒன்றை முன்மொழிந்தார். இத்திட்டம் ‘ஆறுமுகம் திட்டம்’ எனவும் ‘யாழ்ப்பாணத்திற்கான ஆற்றுத் திட்டம்’ எனவும் பிற்காலத்தில் குறிப்பிடப்பட்டது.

ஆறுமுகத்தின் திட்டத்தின்படி வடமாகாணத்தின் பெருநிலப்பரப்பில் உருவாகி வடக்கு நோக்கி ஓடும் கனகராயன் ஆற்றை புளியங்குளம், மாங்குளம் ஊடாக இரணைமடுக்குளத்திற்குள் நிரப்பிப் பின் மேலதிக வழிந்தோடும் நீரை ஆனையிறவு நீரேரிக்குள் சேர்ப்பதன் மூலம் ஆனையிறவு நீரேரியினை நன்னீர் ஏரியாக மாற்றுதல்.

ஆனையிறவு நீரேரியின் கிழக்குப் பகுதியினை மண் அணை மூலம் கடலிலிருந்து வேறுபடுத்தியபின்பு முள்ளியான் வாய்க்காலூடாக வடமாராட்சி நீரேரியுடனும் அதன்வழியாக தொண்டமானாறு நீரேரியுடனும் இணைத்து அவற்றினையும் நன்னீரேரிகளாக மாற்றுதல். தொண்டமானாறு நீரேரியினை உப்பாறு நீரேரியுடன் இணைத்து அதனையும் நன்னீராக மாற்றுதல் ஆகும்.

இந்த ஆறுமுகம் திட்டம் பற்றியும் பிற்காலத்தில் யாழ்குடாநாடு எதிர்கொள்ளும் நீர்வளப் பிரச்சனை பற்றியும் உள்நாட்டு புலமையாளர்கள், பொறியியலாளர்கள் மற்றும் அனை்துலக மட்டத்திலான துறைசார் நிபுணர்களும் பலவேறுவிதமான ஆய்வறிக்கைகளினை வெளியிட்டுள்ளனர்.

கூர்மையடைந்துள்ள யாழ்குடாநாட்டின் நீர்வளப்பிரச்சனை:

தற்போதைய யாழ்ப்பாண குடாநாடு யாழ்ப்பாண மாவட்டத்தையும் கிளிநொச்சி மாவட்டத்தின் பளைப் பிரதேசத்தையும் உள்ளடக்குகின்றது. 1981ன் மக்கள்தொகைக் கணிப்பீட்டின்படி அண்ணளவாக 800,000 மக்களினை கொண்டதாக யாழ்குடாநாடு காணப்பட்டது. அக்காலகட்டத்தில் யாழ்ப்பாண குடாநாட்டின் பொருளாதாரம் ‘மணி ஓடர்’ பொருளாதாரம் என கூறப்பட்ட சேவைத்துறையிலும் பணப்பயிர்கள் விவசாயத்திலும் மீன்பிடியிலும் முக்கியமாகப் கட்டமைக்கப்பட்டிருந்தது.

மிளகாய், வெங்காயம், புகையிலை, மரக்கறி, முந்திரிகை உபஉணவுப்பயிர்ச்செய்கை என செறிவான பயிற்செய்கையில் ஈடுபட்ட விவசாயிகள் தமது உற்பத்தியைப் பெருக்குவதற்காக கிணறுகளிலிருந்து ஏற்று நீர்ப்பாசனத்தினூடாக பெருமளவு தண்ணீரைத் தமது தோட்டநிலங்களுக்குப் பாய்ச்சினர். அத்துடன் அதிகளவான செயற்கை உரங்களையும் விவசாய இரசாயனங்களையும் பயன்படுத்தினர். தொடர்ச்சியாக வலுக்கூடிய நீர் இறைக்கும் இயந்திரங்களின் உதவியுடன் அதிகளவு நீர் வெளியேற்றப்பட்டமையினால் கிணறுகளின் நீர்மட்டம் குறைந்து வற்றியது.

இந்நிலைமையை ஈடுசெய்வதற்காக தமது கிணறுகளை மேலும் ஆழமாக்கினர். அத்துடன் ஆழ்துளைக்கிணறுகளை தோண்டி சக்திவாய்ந்த நீர் இறைக்கும் இயந்திரங்களின் உதவியுடன் நீரைவெளியேற்றினர். இதன் காரணமாக யாழ்ப்பாண குடாநாட்டின் நிலத்தடிநீரின் கையிருப்பு மிகவேகமாகக் குறைவடைந்தது.

குடாநாட்டில் கிடைக்கக்கூடிய வருடாந்த மழைவீழ்ச்சியிலிருந்து பெறப்படும் நீர் மீண்டும் நிலத்திற்குள் சென்று சுண்ணாம்புக் கற்பாறைகளுக்குள் சேகரிக்கப்படுவதனாலேயே குடாநாட்டின் நிலத்தடிநீர்வளம் பெருகுகின்றது. வருடாந்தம் நிலத்தினுள் உட்செல்லும் நீரின் அளவைவிட அதிகளவில் விவசாயத்திற்காக நீர் வெளியேற்றப்படும்போது அங்கு உருவாகும் வெற்றிடத்தைக் குடாநாட்டைச் சூழவுள்ள கடலின் உவர்நீரின் அழுத்தம் நிறைக்கின்றது.

அத்துடன் பலபத்தாண்டுகளாகப் பராமரிப்பற்று கைவிடப்பட்டிருந்த உவர்நீர்த் தடுப்பணைகள் காரணமாக தொண்டமானாறு நீரேரி, நாவற்குழி-உப்பாறு நீரேரி, வடமாராட்சி நீரேரி ஆகியவற்றினூடாக உள்வந்த கடல்நீர் அந்த நீரேரிகளினை ஒட்டிய விவசாயநிலங்களையும் குடியிருப்பு நிலங்களையும் உவர்நிலங்களாக மாற்றியது.

மறுபுறத்தில் உச்ச அளவான விவசாய இரசாயனங்களின் பாவனை காரணமாக குடாநாட்டின் நிலத்தடிநீரில்; நைத்திரேற்று-நைதரசன் அளவுமட்டம் மிகவேகமாக அதிகரித்துக் காணப்பட்டது. அளவுக்கு மீறிய இரசாயனங்களைக் கொண்ட குடாநாட்டின் நிலத்தடி நீரினைப் பயன்படுத்துவதனால் மனிதருக்கும் ஏனைய உயிரினங்களுக்கும் ஏற்படக்கூடிய சுகாதாரக் குறைபாடுகள் பற்றி பல்வேறு ஆய்வுகள் 1970களிலிருந்தே எச்சரிக்கைகளினை விடுத்திருந்தன.

இப்பிரச்சினையின் மூன்றாவது பரிமாணமாக குடாநாட்டில் வருடாந்தம் கிடைக்கும் மழைநீரினை நிலத்திற்குள் சேகரிப்பதற்காக உருவாக்கப்பட்டிருந்த பலநூற்றுக்கணக்கான குளங்களும் நீர்நிலைகளும் பராமரிப்பற்று தூர்ந்துபோனதோடு பெருகிவந்த சனத்தொகையின் நிலத்தேவையை ஈடுசெய்வதற்காகவும் ஏனைய பொதுத் தேவைகளுக்காகவும் திட்டமிட்டு தூர்க்கப்பட்டு நிலத்தடிநீர் மீள்நிரப்புச் செய்யப்படுவதற்கு வாய்பான சகல வழிகளும் அடைக்கப்பட்டன.

தற்போது கூர்மையடைந்துள்ள குடாநாட்டின் நீர்வளப்பற்றாக்குறைக்கு ஒட்டமொத்த யாழ்ப்பாஈணக் குடாநாட்டு சமூகமுமே பொறுப்பாகும். இந்திலைமை யுத்தகால இரசாயனங்களின் அதிஉயர்பாவனையினால் மேலும் மேசமடைந்துள்ளது. இத்தகைய நிலைமையில் யாழ்குடாநாட்டின் உடனடி குடிநீர்ப் பிரச்சனையின் ஒரு பகுதியினையாவது தீர்க்கும் முன்முயற்சியாகவே தேசியநீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் இரணைமடுக்குளத்திலிருந்து குடாநாட்டிற்கு நீரெடுத்துச்செல்லும் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இரணைமடுக்குளத்திலிருந்து யாழ்குடாநாட்டிற்கான நீர்வழங்கல் திட்டத்தின் ஆரம்பம்:

2002ம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்கா அரசாங்கத்திற்கும் இடையில் ஏற்பட்ட போர்நிறுத்த உடன்பாட்டினைத் தொடர்ந்து பல்வேறு மீள்கட்டமைப்பு திட்டங்களும் மேம்பாட்டு திட்டங்களும் முன்மொழியப்பட்டன. அத்தகைய திட்டங்களுக்கு உடனடியாக உதவிபுரிய பல அனைத்துலக உதவி நிறுவனங்களும் இருதரப்பு உதவிநிறுவனங்களும் முன்வந்தன.

அத்தகைய திட்ட முயற்சிகளில் ஒன்றாக யாழ்குடாநாட்டின் சில வரையறுக்கப்பட்ட பிரதேசங்களுக்கு தரமான குடிநீரையும் வீட்டுப்பாவனை நீரையும் வழங்குவதற்கான மாற்றுமூலங்களைத் தேடும் முயற்சியில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை ஈடுபட்டது. அக்காலகட்டத்தில் இருந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் முறைசாரா அரசநிர்வாகமும் முக்கிய தீர்மானமெடுக்கும் நிறுவனமாக செயற்பட்ட நிலையில் அவர்களின் நிர்வாக கட்டமைப்புக்களின் வழிகாட்டலுடன் குடாநாட்டிற்கு வெளியே காணப்படக்கூடிய நீர்வளங்களை கண்டறிந்து பயன்படுத்தும் தெரிவுகளும் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டன.

தமிழீழ விடுதலைப்புலிகளின் நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் வடக்கு கிழக்கின் இயற்கை வளங்களைப் பாதுகாத்தலும் வளப்படுத்தலும் அவற்றை வினைத்திறன் மிக்க பாவனைக்கு உட்படுத்துதலும் முக்கிய கருப்பொருளாக இருந்தது. இத்தகைய நிலையில் ஆசிய அபிவிருத்தி வங்கியும் வேறு அனைத்துலக நிறுவனமும் இணைந்து யாழ்குடாநாட்டின் நீர்வளத்தேவைக்கான திட்டத்திற்கு நிதியுதவி செய்ய முன்வந்த போது வன்னிப்பெருநிலப்பரப்பில் உள்ள பெரிய குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளத்திலிருந்து நீரைப்பெற்றுச் சுத்திகரித்து யாழ்குடாநாட்டிற்கு வழங்கும் முன்மொழிவும் பரிசீலனை செய்யப்பட்டது.

தமிழீழ விடுதலைப்புலிகளின் பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம் 1980களின் பின்னரைப் பகுதிகளிலிருந்தே யாழ்குடாநாட்டினுள்ளும் பெருநிலப்பரப்பிலும் நீர்வளங்களை மீள் அபிவிருத்தி செய்வதற்கும் ஒருங்கிணைந்த உணவுப்பாதுகாப்பு பயிர்ச்செய்கைத்திட்டத்தினை அறிமுகப்:படுத்துவதிலும் மாற்றுச்சக்தி வலு மூலங்களினை கண்டறிவதிலும் மிகக்கடுமையாக ஈடுபட்டது. இத்தகைய முயற்சிகளுக்கு அக்காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உபவேந்தராகக் கடமையாற்றிய பேராசிரியர் அ.துரைராசா அவர்கள் முன்னின்று வழிகாட்டினார்.

இரணைமடுக்குளத்திலிருந்து யாழ்குடாவிற்கு நீர் கொண்டு செல்லும் திட்டத்தினை மிகவும் ஆழமாகப் பரிசீலனை செய்த பொருண்மிய மேம்பாட்டு நிறுவனமும் அவர்களால் அழைக்கப்பட்ட உள்ளுர் மற்றும் அனைத்துலக நீர்வளத்துறை விற்பன்னர்களும் நேரடியாகவே ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிபுணர்களுடன் விவாதித்தனர். அவ்விவாதங்கள் பின்வரும் பல அடிப்படை விடையங்களைக் கொண்டிருந்தன.

அ). ஆறுமுகத்தின் திட்டத்தினை மீள் பரிசீலனைக்குக் கொண்டுவருதல்

ஆ). கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி போன்ற தொலைதூர குடியிருப்புகளின் பிரதேசங்களின் நீண்டகாலக் குடிநீர்ப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கு ஏதுவாக நன்னீர் மூலங்களைக் கண்டறிதலும், குடமுருட்டி ஆற்றை மறித்து நீர்த்தேக்கத்தினை உருவாக்குவதன் மூலம் தொடர்ச்சியாக நன்னீர் வழங்கக்கூய வாய்ப்புகளைக் கண்டறிதலும்.

இ). தொண்டமானாறு நீரேரியை நன்னீரேரியாக்குவதற்கு அதன் உவர்நீர்த் தடுப்பணைகளை மீளக்கட்டியமைத்தல்.

ஈ). யாழ்குடாநாட்டின் நிலத்தடி நீர்வளத்தை மீள்நிலைப்படுத்தி விரிவாக்குவதற்கு வேண்டிய நீண்டகால திட்டங்களை முன்னெடுத்தல். அதுவரையான காலத்திற்கு மட்டும் இரணைமடுக்குளத்திலிருந்து தண்ணீர்வழங்குவதற்கான திட்டங்களை முன்னெடுத்தல்.

உ). குடாநாட்டிற்கான குடிநீரினை குளத்திலிருந்து பெறும்போது அதிகபட்ச பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு குளத்தின் உள்ளேயே நீர் உறிஞ்சுவதற்கான கிணற்றை அமைத்தலும்; குழாய்களுடாகக் கொண்டுசெல்லப்படும் நீரைத் தூரத்தேவைத்து சுத்திகரித்து குடாநாட்டின் மக்களுக்கு வழங்குதல்..

ஊ) யாழ்குடாநாட்டு மக்களை தொடர்ச்சியாகத் தொலைதூரத்திலிருந்து சுத்திகரித்து வழங்கப்படும் குடிநீர் வழங்கலில் தங்கவைத்தல் அவர்களின் சுயசார்பான இருப்புநிலையினை கேள்விக்கு உட்படுத்தும். எனவே குறிப்பிட்ட காலஅட்டவணைக்குள் (சுமார் 20-30 ஆண்டுகள்) குடாநாட்டின் நிலத்தடி நீர்வளங்களை மீள்நிலைப்படுத்துவதன் ஊடாக இப்பிரதேச மக்கள் தங்களுக்கு அண்மித்த (கிணறுகளில்) நீர்மூலங்களில் சார்ந்திருப்பதை உறுதிப்படுத்துதல்.

எ). இரணைமடுக்குளத்திலிருந்து யாழ்குடாவிற்கு குடிநீரைக் கொண்டு செல்வதனால் அக்குளத்து நீரில் தங்கி விவசாயம் செய்யும் விவசாயிகளின் நலன்கள் பாதிக்கப்படாதிருப்பதை மேலதிக உபதிட்டங்களுடாக உறுதிப்படுத்துதல்.

உபதிட்டம் 1. இரணைமடுக்குளத்தின் நீரேந்தும் இயலளவை அதிகரிப்பதற்காக குளத்தின் அணைக்கட்டைத் திருத்தி வலுவூட்டுதல்.

உபதிட்டம் 2. அணைக்கட்டின் உயரத்தை மேலும் இரண்டு அடிகள் உயர்த்த வேண்டும் என்ற வேண்டுகோளுக்கு மாற்றாக குளத்தின் நீரேந்து பகுதிக்குள் மாங்குளத்திற்கு அண்மித்து மற்றுமொரு வில்போன்ற அணைக்கட்டினை அமைத்து குளத்தின் நீரேந்து கொள்ளளவை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளினை கண்டறிதல்.

உபதிட்டம்.3. குளத்திலிருந்து வயல்களுக்கு நீரெடுத்துச்செல்லும் வாய்க்கால்களைச் செம்மைப்படுத்தி நீர்வழங்கல் கதவுகளை சிறப்பாக அமைப்பதன்மூலம் நீர்வீணாகுதலை தவிர்த்தல்.

உபதிட்டம் 4. தற்போது விவசாயிகள் தங்களது தேவைக்கு மேலதிகமான நீரை வயல்களுக்கு பாச்சுகின்றனர். இதனால் மேலதிக நீர் வீணாவதோடு வயலுக்கு இடப்படும் உரங்களும் ஏனைய விவசாய உள்ளீடுகளும் நீருடன் கரைந்து வெளியேறுகின்றன. எனவே விவசாயிகளின் விவசாய முறைகளையும் நீர்முகாமைத்துவத்தையும் மேம்படுத்தவதற்கான பயிற்சிகளை வழங்குதலும் அதனால் மீதப்படுத்தப்படுக்கக்கூடிய நீரை மேலதிக விளைநிலங்களுக்கு பாய்ச்சுதலும்.

மேற்குறிப்பட்ட விடயங்கள்யாவும் உயர்புலமைவாய்ந்த துறைசார்நிபுணர்களால் ஆய்வு செய்யப்பட்டதுடன் இவை பற்றிய விபரங்களும் விவசாயிகள் அமைப்பினூடாக கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்கு விளக்கப்பட்டு அவர்களின் சம்மதமும் பெறப்பட்டிருந்தது.

2006ம் ஆண்டிலேயே இரணைமடுக்குளத்தின் அணைக்கட்டுக்களை பலப்படுத்துவது தொடர்பான ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. அதற்காக தென்னிலங்கையிலிருந்து வருகை தந்த தொழில்நுட்பவியலாளர்கள் குளத்தின் அணைக்கட்டுப் பகுதிகளில் தங்கி பணியாற்றவும் விடுதலைப்புலிகள் அனுமதித்திருந்தனர்.

தவிர்க்க முடியாத நிலையில் யுத்தம்காரணமாக இத்திட்டங்கள் யாவும் இடைநிறுத்தப்பட்டு தற்போது மீள ஆரம்பிக்கப்படும் நிலையில் சில தடுமாற்றங்களும் குழப்பங்களும் தோன்றியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

சம்பந்தப்பட்டவர்கள் யாவரும் இணைந்து உடனடியாக செயற்படுத்த வேண்டிய விடயங்கள் பல:

அரசியல் தலைவர்களுக்கு:
இத்திட்டம் பல நூற்றாண்டுகளாக வடபகுதியின் மக்களின் நலனில் அக்கறைகொண்ட அரச பொதுச்சேவைப்பணியாளர்கள், அரசியற்தலைவர்கள், நீர்வளத்துறை சார் அறிஞர்கள், புவியியல் மற்றும் சூழலியல் சார் கல்வியாளர்கள், பொதுமக்கள், விடுதலைக்காக போராடிய அமைப்புக்கள் என பலதரப்பினரின் தொடர்ச்சியான முயற்சிகளின் கூட்டுவிளைவாகும்.

இத்திட்டத்திற்கு தனியொரு நபரோ அல்லது அரசியல் பிரிவினரோ உரிமை கோருவதோ அல்லது அதற்கு அரசியல் சாயம் பூசமுற்படுவதோ மக்களின் நலன்களுக்கு எதிரானதாகவே அமையும். இரணைமடுக்குளத்திலிருந்து குடாநாட்டின் பகுதிகளுக்கு குடிநீரைக்கொண்டு செல்லும் இத்திட்டம் 2002 -2007 சமாதான பேச்சுவார்த்தைக் காலத்தில் தமிழீழவிடுதலைப்புலிகளாலும் சிறிலங்கா அரசாங்கத்தினாலும் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட திட்டமாகும்.

இத்திட்டத்தினால் தமிழ்மக்களுக்கு ஏதாவது எதிர்மறையான அரசியல்விளைவுகள் ஏற்பட வாய்ப்பு இருந்திருக்குமாயின் இத்திட்டத்தை நிச்சயம் புலிகள் அனுமதித்திருக்கமாட்டார்கள். இத்திட்டத்தின் பணிகளில் பங்கேற்ற அரச உத்தியோகத்தர்கள் பலவிதமான அரசியல் நிர்வாக அழுத்தங்களினைத் தாண்டித்தான் பணியாற்ற வேண்டியிருந்தது. இதற்காக அவர்கள் காலத்திற்கு காலம் கொண்டிருந்த நெகிழ்வுப்போக்கினை எதிர்மறையாக அணுகுதல் ஏற்புடையதாகாது. இத்திட்டத்தின் சகல உரிமைகளையும் மக்ளிடம் கையளித்தல் நல்லாட்சியின் சிறப்பம்சமாகும்.

சம்பந்தப்பட்ட திணைக்களத் தலைவர்களுக்கு:
தங்களது திணைக்களங்களுக்குள் நிலவக்கூடிய துறைசார் போட்டிகள் தனியுரிமைகள் என்பவற்றுக்கும் அப்பால் இத்திட்டம் பல்துறைசார் திணைக்களக்களங்களின் ஒருங்கிணைப்போடு நிறைவேற்றப்படவேண்டியுள்ளது. எனவே அத்தகைய உள்ளக முரண்பாடுகளுக்கு அப்பால் இணைந்து செயற்படல் மூலம் உங்களது சமூகப்பொறுப்பினை உறுதிப்படுத்துதல் வரவேற்புக்குரியது..

திட்டநிர்வாகிகளுக்கும் நிர்வாக பொறுப்பிலுள்ளவர்களுக்கும்:
இத்திட்டம் வடக்கு மாகாண மக்களின் சமூக பொருளாதார அரசியல் பண்பாட்டு இருப்பிற்கான அடித்தளத்தை வழங்குகின்றது. எனவே உங்களது வாதங்களும் தர்க்கங்களும் தீர்மானங்களும் மக்களின் நீண்டகால நலன்களை அடிப்படையாக கொண்டதாக கட்டமைக்கப்படுதல் நன்று.

கிளிநொச்சி மாவட்டவிவசாயிகளுக்கும் மக்களுக்கும்:
இத்திட்டத்தின் முதன்மை நோக்கம் குடாநாட்டின் குடிநீர்ப்பிரச்சனையின் கடுமையை வரையறுக்கப்பட்ட காலத்திற்கு குறைப்பதாகும். அதன்பொருட்டு உங்களுக்கு ஏற்படக்கூடிய இழப்புகள் இத்திட்டத்தினுள் கவனத்திற்கொள்ளப்பட்டுள்ளன என்பதையும் ஏற்றுக்கொண்டு திட்டம் சிறப்பாக செயற்பட உங்களது பங்களிப்பினை வழங்குதல் பாராட்டுக்குரியது. அத்துடன் தங்களால் தற்போது கடைப்பிடிக்கப்படும் விவசாய மற்றும் நீர்முகாமைத்துவ முறைமைகளை மீளாய்வு செய்து வினைத்திறனும் விளைதிறனும் கொண்ட மாற்று விவசாய முறைமைகளை நீங்கள் தெரிவு செய்வதால் உங்கள் உழைப்பும் இயற்கைவளமும் விரயமாகுதலை தவிர்க்கமுடியும்..

யாழ்குடாநாட்டின் குடிசார்சமூகத்தினருக்கு:
இரணைமடு குளத்திலிருந்து குடாநாட்டிற்கு குடிநீர்வழங்குதல் என்பது மூன்று பத்தாண்டுகளுக்கு மட்டுமான ஒரு இடைக்கால திட்டமே. கிளிநொச்சி விவசாயிகள் தங்களது நீர்வளத்தை உங்களுடன் பகிரமுன்வந்துள்ளனர். அவர்களது பெருந்தன்மையை மனதில் நிறுத்தி அக்கால கட்டத்தினுள் உங்களால் முன்னெடுக்கவேண்டிய பணிகள் பல:

அ). யாழ்ப்பாண குடாநாட்டின் நிலத்தடி நீர்வளத்தை புதுப்பிப்பதற்கான மக்கள் சார்ந்த தந்திரோபாயத்தை கண்டறிதலும் அவற்றை சமூகத்திட்டமாக முன்னேடுத்தலும்.

ஆ) குடாநாட்டிலுள்ள பிரதேசசபைகள் உள்ளுராட்சி அமைப்புக்கள் யாவையும் இணைந்த ஒருங்கிணைந்த தந்திரோபாயத்தினூடாக குடாநாட்டில் இருந்திருக்கக்கூடிய சகல நீர்நிலைகள் குளங்கள் நீரேந்து பகுதிகள் யாவற்றையும் பாதுகாக்கப்பட்ட நீர்நிலைகளாக பிரகடனப்படுத்துதலும் அவற்றைப் புதுப்பித்து பராமரிப்பதற்கான சமூககட்டமைப்பினை உருவாக்குதலும்.

இ). குடாநாட்டின் சனத்தொகை தாங்குதிறனை அனுமானித்து மேலதிகமானவர்கள் பெருநிலப்பரப்பிற்குள் குடிபெயர்வதை ஊக்குவித்தல்.

ஈ). குடாநாட்டின் விவசாயிகளின் விவசாய முறைகளையும் நீர்முகாமைத்துவத்தையும் விவசாயன இரசாயனங்களின் பிரயோகத்தையும் மறுஆய்வுக்கு உட்படுத்தி பொருத்தமான மாற்றுத் தெரிவுகளை அறிமுகப்படுத்துதல்.

உ). கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளதும் குடிமக்களதும் மேம்பாட்டுக்கான உங்களது தொடர்ச்சியான ஆதரவையும் பங்களிப்பையும் உறுதிப்படுத்துதல் மூலம் வடமாகாணத்தின் மிகைமதிப்பூட்டப்பட்ட விவசாய விளைநிலமாக பெருநிலப்பரப்பை வலுப்படுத்துதல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *