மேலும்

இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்

முத்தரப்பு உடன்படிக்கையானது, சிறிலங்கா மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுடன் இந்தியா தனது பிராந்தியப் பாதுகாப்பில் ஒன்றிணைந்து செயற்படுவதோடு மட்டுமல்லாது, தொடர்பாடல்களை மேற்கொண்டு தேவையான தகவல்களை வழங்குவதுடன் கண்காணிப்பு முறைமைகளையும் நடைமுறைப்படுத்த வழிசமைக்கிறது.

இவ்வாறு Iranga Kahangama* என்னும் ஆய்வாளர் கொழும்பை தளமாகக் கொண்ட Daily Mirror ஆங்கில நாளேட்டில் எழுதியுள்ள கட்டுரையில் தெரித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் வர்த்தக மற்றும் மூலோபாய நலன்களைக் கருத்திற் கொண்டு அதில் செல்வாக்குச் செலுத்துவதற்காக சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளும் தமது கடல் சார் செல்வாக்கை விரிவுபடுத்துவதில் தமக்கிடையே போட்டியிடுகின்றன.

எவ்வாறெனினும், இந்திய மாக்கடல் பிராந்தியத்தை சீனா கட்டுப்படுத்துவதைத் தடுப்பதற்காக இந்தியா அண்மையில் கடல் சார் பிராந்திய அபிவிருத்தி ஒத்துழைப்புக்கான திட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.

தென்னாசியாவில் சீனாவானது தனது வர்த்தக சார் கடல்சார் நலன்களை அடைந்து கொள்வதற்கு விரும்பும் அதேவேளையில், இந்தியாவானது உபகண்டம் என்ற வகையிலும் ஆசியக் கண்டத்தில் அதிகாரம் மிக்க நாடாக விளங்குகின்ற வகையிலும், இந்திய மாக்கடல் பிராந்தியத்தின் கடல்சார் பாதுகாப்பின் முக்கியத்துவத்தில் அதிகம் செல்வாக்குச் செலுத்துவதாக நம்புகிறது.

பிராந்தியத்திலுள்ள அயல்நாடுகளுடனான ஒத்துழைப்புடன் கடல் சார் பாதுகாப்பில் ஈடுபடுவதை நோக்காகக் கொண்டு இந்தியாவானது யூலை மாதத்தின் ஆரம்பத்தில் சிறிலங்கா மற்றும் மாலைதீவு ஆகிய இருநாடுகளுடன் இணைந்து முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டது.

வரையறுக்கப்பட்ட பொருளாதார வலயத்தில் கண்காணிப்புக்களை மேற்கொள்ளுதல், சோதனை மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், கடற்கொள்ளையர்களின் நடவடிக்கைகளை முறியடித்தல், புதிய தொழினுட்பங்களைப் பயன்படுத்தி வணிகக் கப்பல்களை வழங்குதல், அவற்றைக் கண்காணித்தல் போன்றன உள்ளடங்கலான நடவடிக்கைகளை சிறிலங்கா மற்றும் மாலைதீவு ஆகியவற்றுடன் இணைந்து மேற்கொள்ள இந்தியா திட்டமிட்டுள்ளது.

க்வாடர் துறைமுகமானது [Gwadar Port] சீனாவின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படுவதாக அறிவிக்கப்பட்டதை அடுத்தே இந்தியாவானது யூலையின் ஆரம்பத்தில் முத்தரப்பு உடன்படிக்கையை வரைந்தது.

சீனா அரசின் சீனத் துறைமுக பொறியியல் நிறுவனத்தின் நிதியுதவியுடன் சிறிலங்காவின் கொழும்புத் துறைமுகத்தில் அமைக்கப்பட்ட 500 மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கொண்ட புதிய கொள்கலன் துறைமுகமானது ஓகஸ்ட் 2013ல் திறக்கப்படவுள்ளது. இக்கொள்கலன் துறைமுகத்தின் 85 சதவீதத்தை சீனத் துறைமுக பொறியியல் நிறுவனம் கட்டுப்படுத்துவதுடன், அடுத்த 35 ஆண்டுகளுக்கு இத்துறைமுகமானது இந்நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

இதைவிட கொழும்பு கடற்கரையோரத்தில், 125 ஏக்கர் நிலப்பரப்பானது சீன அரச நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்திய – அமெரிக்கா ஆகியன இணைந்து அண்மையில் மேற்கொண்ட இராணுவக் கூட்டுப் பயிற்சியை அடுத்தே தற்போது இவ்வாறான மூலோபாய முக்கியத்துவம் மிக்க கூட்டு உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் சீனாவின் வர்த்தக சார் செல்வாக்கு அதிகரித்துள்ள அதேவேளையில், சீனாவானது இன்னமும் பாதுகாப்புடன் தொடர்புபட்ட குறிப்பிடத்தக்க நகர்வுகளை மேற்கொள்ளவில்லை. சீனாவானது தொடர்ந்தும் பாகிஸ்தான், சிறிலங்கா, பங்களாதேஸ் போன்ற நாடுகளில் துறைமுகங்களை அமைப்பதற்கும் புனரமைப்பதற்கும் பெருமளவான முதலீட்டை மேற்கொண்டுள்ள போதிலும், தனது அயல்நாடுகளின் பௌதீக ரீதியான பாதுகாப்பிற்கு தனது நாடே முதன்மையாக விளங்குவதாக இந்தியா நம்புகிறது.

இந்தியா, மாலைதீவு மற்றும் சிறிலங்கா ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து மேற்கொண்டுள்ள கடல்சார் முத்தரப்பு கூட்டு உடன்படிக்கையானது முரண்பாடுகளைத் தவிர்த்து, பிராந்தியத்தில் ஒற்றுமையை நிலைநாட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இக்கடல் சார் பாதுகாப்பு உடன்படிக்கையை கென்யா, ஓமான், தன்சானியா அல்லது மொறிசியஸ் போன்ற நாடுகளுடன் இணைந்து விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளை இந்தியா மேற்கொள்ளலாம்.

இதன் ஒருபகுதியாக, யூலை மாதத்தின் ஆரம்பத்தில் இடம்பெற்ற இந்திய மாக்கடல் பிராந்தியத்திற்கான எல்லைப் பாதுகாப்பு ஒத்துழைப்பு அமைப்பின் [Indian Ocean Rim Association for Regional Cooperation: IOR-ARC] கருத்தரங்கில் பொதுவான கடற்பாதுகாப்பு உடன்படிக்கை ஒன்றை மேற்கொள்வதற்கான அழைப்பை இந்தியா விடுத்திருந்தது.

செச்செல்ஸ், மொரிசியஸ், தாய்லாந்து போன்றன IOR-ARCஅமைப்பின் முழுநேர உறுப்பு நாடுகளாக உள்ள அதேவேளையில், சீனாவானது அதிகாரமற்ற, பகுதியளவில், கலந்துரையாடல்களை மேற்கொள்கின்ற நாடாக காணப்படுகின்றது.

இந்நிலையில் இந்திய மாக்கடல் பிராந்தியத்தின் எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைகளில் இந்தியா மிக நீண்ட கால மூலோபாயம் மிக்க பங்களிப்பை வழங்கிவருகிறது. இந்தியாவானது இந்திய மாக்கடல் பிராந்தியத்தின் எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கையை தானே தலைமை தாங்குவதாக இந்தியா அறிவித்தால், எரிசக்தி வளங்களில் அதிக செல்வாக்கைச் செலுத்தி வரும் சீனா மீது இந்தியா அழுத்தங் கொடுக்க முடியும்.

தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள முத்தரப்பு உடன்படிக்கையானது, சிறிலங்கா மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுடன் இந்தியா தனது பிராந்தியப் பாதுகாப்பில் ஒன்றிணைந்து செயற்படுவதோடு மட்டுமல்லாது, தொடர்பாடல்களை மேற்கொண்டு தேவையான தகவல்களை வழங்குவதுடன் கண்காணிப்பு முறைமைகளையும் நடைமுறைப்படுத்த வழிசமைக்கிறது.

வரையறுக்கப்பட்ட பொருளாதார வலயத்தில், சிறிலங்கா மற்றும் மாலைதீவு நாடுகளின் கரையோரங்களிலிருந்து 200 கடல்மைல் தொலைவு வரை கண்காணிப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதை இந்தியா நோக்காகக் கொண்டுள்ளது. ஏனைய நாடுகளின் வரையறுக்கப்பட்ட பொருளாதார வலயத்தில் இந்தியா தனது கட்டுப்பாட்டைப் பிரயோகிப்பதற்கு முத்தரப்பு உடன்படிக்கை வழிசமைக்காவிட்டாலும் கூட, மிகச்சிக்கலான தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கும், கண்காணிப்புக்களை மேற்கொள்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது. ஏற்கனவே குறிப்பிட்டது போன்று இந்தியாவானது கடல்சார் பாதுகாப்பை தென்னாபிரிக்கா அல்லது வளைகுடா நாடுகளுக்கு விரிவுபடுத்துவதன் மூலம் இவ்வாறான நலன்களை அடைந்து கொள்ள முடியும்.

ஆயுதக் கப்பல்கள் உள்ளடங்கலாக கடற் கண்காணிப்பு மற்றும் சட்ட அமுலாக்கம் போன்றவற்றை நோக்காகக் கொண்டு சீனாவானது கடந்த வாரம் சீனக் கரையோரப் பாதுகாப்பு படையை நவீனமயப்படுத்தியது. யப்பான், பிலிப்பீன்ஸ், வியட்நாம் போன்றவற்றுடன் சீனா முரண்பாட்டைக் கொண்டுள்ள போதிலும் தென்சீனக் கடலில் தனது ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்துவதாகவே சீனாவின் இந்த நகர்வு காணப்படுகிறது. தொடரும் இந்திய சீனப் போட்டியில் யப்பான் மற்றும் பாகிஸ்தான் என்பன முதன்மைப் பங்களிப்பை வழங்கும்.

எடுத்துக்காட்டாக, சிறிலங்கா மற்றும் இந்தியா இடையிலான குழப்பங்கள் அதிகரித்தால், தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள இந்தியாவின் முத்தரப்பு கூட்டு உடன்பாடானது பரந்தளவில் அரசியல் அழுத்தத்திற்கு உட்படுவதுடன், இதனை அமுலாக்குவதில் பெரும் சவால்களைச் சந்திக்க வேண்டியேற்படும். இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் கடற்கொள்ளை போன்ற பல்வேறு விடயங்களில் முத்தரப்பு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதனால் இதனை மிகப் பொருத்தமான வகையில் அமுல்படுத்துவதுடன், விரிவுபடுத்திக் கொள்வது உறுதிப்படுத்திக் கொள்ளப்பட வேண்டும்.

பிராந்திய ஒற்றுமை மற்றும் பிராந்தியக் குழப்பங்கள் குறைவடைவதன் மூலம் இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் சீனா தனது பொருளாதார முதலீடுகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் குறைவடையும் என இந்தியா சவால் விடுத்துள்ளது. சீனாவானது இப்பிராந்திய நாடுகளில் உள்ள துறைமுகங்களைத் தான் தனியாக கட்டுப்படுத்த முடியும் என நம்புகிறது. இது ஒரு நிலையற்ற திட்டமாக காணப்படுகிறது. சீனாவின் உள்நாட்டில் எழுந்துள்ள குழப்பங்கள், கடன் ஆபத்துக்கள் போன்றவற்றின் மத்தியில் தற்போது சீனாவின் பொருளாதாரமானது சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.

முன்னர் இரட்டை இலக்கத்தில் அதிகரித்திருந்த சீனாவின் பொருளாதாரமானது தற்போது 7 சதவீதமாகவே காணப்படுகிறது. சீனாவினதும் இதன் வெளிநாட்டு பங்காளி நாடுகளினதும் அரசியல் மற்றும் சமூக ரீதியாக அடிக்கடி எழுப்பும் குழப்பங்களால் இந்திய மாக்கடல் பிராந்தியம் உட்பட கடல்சார் பாதுகாப்புக்கள் மேலும் சீனாவுக்கு சவாலை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடல் பாதுகாப்பை பகிர்ந்து கொள்வதற்கான ஒரு அறிமுகமாக முத்தரப்பு உடன்பாடு நோக்கப்படும் அதேவேளையில், இந்தியா இந்த விடயத்தில் தனது அதிகாரத்தை அதிகம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. இந்தியாவானது இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் நீண்ட காலமாக நிலவும் பிரச்சினைகளைக் கருத்திற் கொண்டு இதன் பாதுபாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

இப்பிராந்தியத்தில் சீனாவானது தனது வர்த்தக சார் செல்வாக்கை விரிவுபடுத்தும் அதேவேளையில், அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு விவகாரங்களில் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்திய மாக்கடல் பிராந்திய நாடுகள் சீனாவின் அபிவிருத்தி சார் உதவிகளுக்குள் உள்ளீர்க்கப்பட்டுள்ளது போல் உடனடியாகத் தெரிந்தாலும் கூட, நீண்ட கால அடிப்படையில் இப்பிராந்தியத்தில் தொடர்பாடலை நிலைப்படுத்தி இந்தியாவானது மிகப் பொருத்தமான, வினைத்திறனுள்ள திட்டத்தை வரைந்து செயற்பட வேண்டியது அவசியமாகும்.

* The writer is from Harvard Kennedy School of Government and a Master of Public Policy Candidate, 2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *