ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்திய -சிறிலங்கா கடலோரக் காவல்படைகள் உறுதி
இந்திய மற்றும் சிறிலங்கா கடலோரக் காவல்படைகள், பிராந்திய கடல்சார் பாதுகாப்பு, செயற்பாட்டு ஒருங்கிணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து, இருதரப்பு கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளன.
சிறிலங்கா கடலோரக் காவல்படை தலைமையகத்தில் நடைபெற்ற 9-வது இந்திய- சிறிலங்கா கடலோரக் காவல்படை உயர்மட்டக் கூட்டத்தில் இந்த உறுதிப்பாடு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் இரு கடலோரக் காவல்படைகளின் மூத்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்தியக் குழுவிற்கு இந்திய கடலோரக் காவல்படையின் தலைமை இயக்குநர் பரமேஷ் சிவமணியும், சிறிலங்கா குழுவிற்கு சிறிலங்கா கடலோரக் காவல்படையின் பணிப்பாளர் நாயகம் றியர் அட்மிரல் ருவான் ரூபசேனவும் தலைமை தாங்கினர்.
இவர்கள் கூட்டத்திற்கு இணைத் தலைவர்களாகச் செயற்பட்டனர்.
செயல்பாட்டு ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல், திறன் மேம்பாட்டு முயற்சிகள், தொழில்முறை பயிற்சி, மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக் கொள்வதன் மூலம் இருதரப்பு கடல்சார் ஒத்துழைப்பை மறுஆய்வு செய்யவும், முன்னெடுத்துச் செல்லவும் இந்தக் கூட்டம் ஒரு முக்கிய தளமாக அமைந்தது.
தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஒருங்கிணைப்பு, கடல்சார் மாசு சம்பவங்களுக்கான தயார்நிலை மற்றும் எதிர்வினை நடவடிக்கைகள், தகவல் பரிமாற்றம், கடல்சார் கள விழிப்புணர்வு மற்றும் தகவல் தொடர்பு நடைமுறைகளை தரப்படுத்துதல் போன்றவை விவாதிக்கப்பட்ட முக்கிய அம்சங்களாகும்.
இரு கடலோரக் காவல்படைகளின் செயல்பாட்டுத் திறன்களை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண நடவடிக்கைகள் தொடர்பான அனுபவங்களையும், கற்றுக்கொண்ட பாடங்களையும் பரிமாறிக் கொள்வதற்கான வழிமுறைகளை உருவாக்குவது குறித்தும் இரு தரப்பினரும் கலந்துரையாடினர்.
இந்த உயர்மட்டக் கூட்டம், இரு கடலோரக் காவல்படை அமைப்புகளுக்கு இடையிலான புரிந்துணர்வு உடன்பாட்டின் கீழ், ஆண்டுதோறும் இந்தியா மற்றும் சிறிலங்காவில் மாறி மாறி நடத்தப்படும் ஒரு இருதரப்பு நிகழ்வாகும்.
இதன் 7-வது கூட்டம் 2024-ல் கொழும்பிலும், 8-வது கூட்டம் 2025-ல் புது டெல்லியிலும் நடைபெற்றன.
