மேலும்

ஈரானிய தூதுவரின் இல்லத்திற்குள் புகுந்த மகிழுந்து- தீவிரவாத செயலா என விசாரணை

கொழும்பில் உள்ள ஈரானிய தூதுவரின் இல்லத்தின் சுற்றுச் சுவரை உடைத்துக் கொண்டு, மெர்சிடிஸ் பென்ஸ் ரக மகிழுந்து நுழைந்த சம்பவம், தீவிரவாதச் செயலாக இருக்கலாமா என்ற கோணத்தில்  விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் 31 ஆம் நாள் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது கறுவா தோட்டம் காவல்துறையினர் இதனைத்  தெரிவித்தனர்.

குறித்த வாகனத்தில் வெடிபொருட்கள் ஏதேனும் உள்ளனவா என்பதைக் கண்டறிய, அரச பகுப்பாய்வாளர், வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவு மற்றும் காவல்துறை மோப்ப நாய் பிரிவு ஆகியவற்றின் ஊடாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக, வாகனத்தை ஓட்டிச் சென்ற 27 வயதுடைய மொஹமட் தர்ஃப் மன்சூர் மற்றும் அவருடன் பயணித்த மொஹமட் இன்ஹாம், மயூரன் கனகசுந்தரம், மொஹமட் உஸ்மான் ஆகிய நால்வரையும் கறுவா தோட்டம் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.

சந்தேக நபர்கள் சார்பில் முன்னிலையான சட்டவாளர்கள், சந்தேக நபர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஈரானிய தூதுவரைச் சந்தித்து, இந்தச் சம்பவம் குறித்து கலந்துரையாடியுள்ளதாக  நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இரு தரப்பு சமர்ப்பணங்களையும் கருத்தில் கொண்ட மேலதிக நீதிவான், சந்தேக நபர்கள் நால்வரையும் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டதுடன், இந்த விசாரணை தொடர்பான முன்னேற்ற அறிக்கையை இம்மாதம் 30-ஆம் நாள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *