திருகோணமலையில் துணை மின் நிலையங்களை கட்டும் ஒப்பந்தம் சீனாவுக்கு
திருகோணமலையில், சம்பூர் சூரிய மின் கட்டமைப்பு துணை மின் நிலையத்தைக் கட்டுவதற்கும், கப்பல்துறை சூரிய மின் கட்டமைப்பு துணை மின் நிலையத்தை விரிவுபடுத்துவதற்குமான ஒப்பந்தம், சிறிலங்கா- சீன நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
செலெக்ஸ் இன்ஜினியரிங் (பிரைவேட்) லிமிடெட் மற்றும் சிங்னெங் எலக்ட்ரிக் பவர் கன்ஸ்ட்ரக்ஷன் லிமிடெட் (Ceylex Engineering (Pvt.) Ltd. and Xingneng Electric Power Construction Co. Ltd) ஆகியவற்றுக்கு இடையிலான ஒரு கூட்டு முயற்சியாக இந்தக் கட்டுமானப் பணி ஒப்பந்தம் சிறிலங்கா அரசினால் வழங்கப்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை ஊடகச் சந்திப்பில், அமைச்சரவை பேச்சாளரான நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார்.
‘எரிசக்தி அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு, வரிகள் நீங்கலாக, 4.15 மில்லியன் அமெரிக்க டொலர் (1,096.08 மில்லியன் ரூபா) ஆகும்.
220 (132) /33 kV சம்பூர் சூரிய மின் கட்டமைப்பு துணை மின் நிலையத்தைக் கட்டுவதற்கும், 220 (132)/33 kV கப்பல்துறை சூரிய மின் கட்டமைப்பு துணை மின் நிலையத்தை விரிவுபடுத்துவதற்கும் அமைச்சரவை ஆரம்பத்தில் 2025 டிசம்பர் 15,அன்று ஒப்புதல் அளித்திருந்தது.
ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியால் (AIIB) நிதியளிக்கப்படும் இந்தத் திட்டம், திறமையான மின்சார வலையமைப்பைப் பராமரிக்கத் தேவையான மின்பரிமாற்ற அமைப்புகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஒரு அனைத்துலக போட்டி கொள்முதல் செயல்முறை மூலம் ஒப்பந்ததாரர் தேர்ந்தெடுக்கப்பட்டார், மேலும் ஆறு ஏல மனுக்கள் பெறப்பட்டன. ஏலங்களை மதிப்பீடு செய்ததைத் தொடர்ந்து, உயர் மட்ட கொள்முதல் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், கணிசமான அளவில் தகுதியான குறைந்தபட்ச ஏலதாரராக இந்தக் கூட்டு நிறுவனம் அடையாளம் காணப்பட்டது என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.
சம்பூரில் சூரிய சக்தி மின் நிலையத்தை அமைக்கும் பணிகளை இந்தியா மேற்கொண்டுள்ளது.
